திருப்பூர் ஆட்டோ ஓட்டுநர் கொலை வழக்கில் 5 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது!


முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுநரை கொலை செய்த 5 சிறுவர்கள் உட்பட 6 பேரை திருப்பூர் போலீஸார் கைது செய்தனர்.

திருப்பூர் ஊத்துக்குளி சாலை கோல்டன் நகர் கருணாகரபுரியில் உள்ள காலி இடம் ஒன்றில் இளைஞர் ஒருவர், நேற்று முன் தினம் இரவு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி பொது மக்கள் திருப்பூர் வடக்கு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். அதில் இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. மேலும் கொலை செய்யப்பட்டவர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த பிரகாஷ் (19) என்பதும், அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்ததும் கண்டறியப் பட்டது.

இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஏற்பட்ட பிரச்சினை தான் கொலைக்கு காரணம் என தெரிய வந்தது. நேற்று முன்தினம் இரவு கருணாகரபுரியில் உள்ள உணவகத்தில் பிரகாஷ் சாப்பாடு வாங்க சென்றார்.

அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த 6 பேர் முன் விரோதம் காரணமாக பிரகாஷை அழைத்துச் சென்று தாக்கி, தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரிந்தது. கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தருண் குமார், பாலிடெக்னிக்கில் படிக்கும் 16 வயது மாணவர் மற்றும் சமீபத்தில் பிளஸ் 2 முடித்த 17 வயதை சேர்ந்த 4 சிறுவர்கள் என 6 பேரை திருப்பூர் வடக்கு போலீஸார் கைது செய்தனர்.

x