கடன் வாங்க உதவியதற்கு கமிஷன் கேட்டு ஆயுர்வேத மருத்துவரை கடத்திய 5 பேர் கைது @ தஞ்சை


தஞ்சாவூரில் கடன் வாங்க உதவியதற்கு கமிஷன் கேட்டு, ஆயுர்வேத மருத்துவரை கடத்திய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மானோஜிப்பட்டி போஸ்டல் காலனி பகுதியைச் சேர்ந்தவர் இளமாறன் மகன் இலக்கியன் (29). தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை முனிசிபல் காலனி பகுதியில் ஆயுர்வேத கிளினிக் நடத்தி வருகிறார். இவர், தனது வீட்டை புதுப்பிப்பதற்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.92 லட்சம் கடன் வாங்கி உள்ளார்.

அந்தக் கடனை வாங்குவதற்கு உதவியாக இருந்த மானோஜிப் பட்டி கன்னியம்மாள் நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் ஆனந்த் (39) என்பவருக்கு, ரூ.10 லட்சம் கமிஷன் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட இலக்கியன், கடன் பெற்ற பிறகு ரூ.1.50 லட்சம் மட்டும் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, மே 9ம் தேதி இரவு தனது கிளினிக்கில் இருந்த இலக்கியனை, விஜய் ஆனந்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளார். அன்று இரவு இலக்கியன் வீடு திரும்பாததால், இது குறித்து மருத்துவக் கல்லூரி போலீஸில் இலக்கியனின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.

அதன் பேரில், காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் போலீஸார் நடத்திய விசாரணையில், விஜய் ஆனந்த் மற்றும் தஞ்சாவூர் ரெட்டி பாளையம் சாலை அன்னை சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (45), ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த சந்திர ரூபன் (26), மருத்துவக் கல்லூரி சாலை முனிசிபல் காலனியைச் சேர்ந்த சங்கர் (45), ஒரத்தநாடு சோழகன்குடிகாடு பகுதியைச் சேர்ந்த தர்மசீலன் (35) ஆகியோர், இலக்கியனை கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து, பிள்ளையார்பட்டி ரவுண்டானா பகுதியில் இருந்த விஜய் ஆனந்த் உள்ளிட்ட 5 பேரையும் போலீஸார் நேற்று முன்தினம் பிடித்து, இலக்கியனை மீட்டனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து, 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

x