பழநியில் ‘இ-பாஸ்’ மற்றும் காவல் சோதனை சாவடிகள் பூட்டிக் கிடப்பதால் சுற்றுலா வாகனங்கள் வழக்கம்போல் சென்று வருகின்றன. அதனால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில், பாலித்தீன் பைகளை கொண்டு செல்வதை தடுக்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானலில் சீசன் காலங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 2024 மே 7-ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் செல்ல ‘இ-பாஸ்’ முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, கோடை விடுமுறையின் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையிலும் வார நாட்களில் 4,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஏப்.1-ம் தேதி முதல் கொடைக்கானல் நுழைவு பகுதியான மலையடிவாரத்தில் உள்ள காமக்காபட்டி காவல் சோதனைச் சாவடி, தர்மத்துப்பட்டி, வடகாடு, சித்தரேவு வன சோதனைச்சாவடி, பழநி அய்யம்புள்ளி காவல் சோதனைச்சாவடிகளில் ‘இ-பாஸ்’ சோதனை தீவிரப் படுத்தப் பட்டது. இப்பணியில் போலீஸார், பேரூராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். ‘க்யூ-ஆர் கோடு’ மூலம் ஸ்கேன் செய்து இ-பாஸ் பெற்றிருக்கும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
இ-பாஸ் பெறாத வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இருப்பினும் அந்த இடத்திலேயே இ-பாஸ் பதிவு செய்த பிறகு அந்த வாகனங்களும் அனுமதிக்கப் பட்டன. உள்ளூர் வாகனங்கள், விளை பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. மேலும், சுற்றுலாப் பயணிகள் கொண்டு வரும் 5 லிட்டருக்கு குறைவான தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
காற்றில் பறந்த உத்தரவு: இந்நிலையில் கடந்த சில நாட்களாக பழநியில் நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்க விட்டதுபோல், கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ள அய்யம்புள்ளி காவல் சோதனைச்சாவடி மற்றும் ‘இ-பாஸ்’ சோதனைச் சாவடிகள் பூட்டிக் கிடக்கின்றன. இதனால் எவ்வித வாகன சோதனைகளும் இன்றி சுற்றுலா வாகனங்கள் வழக்கம்போல் சென்று வருகின்றன.
அதனால், சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வரை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில், பாலித்தீன் பைககளை கொண்டு செல்வதை தடுக்க முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தடுக்கவும், பிளாஸ்டிக் இல்லாத கொடைக்கானலை உருவாக்கவும் நீதிமன்ற உத்தரவை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.