ஊட்டியில் உள்ள ஏரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மோட்டார் படகுகள், மிதி படகுகள், துடுப்புப் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது கோடை சீசன் நடைபெற்று வருவதால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டி ஏரிக்கு வந்து, படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.
இந்நிலையில், நேற்று மதியம் வழக்கம் போல சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து கொண்டிருந்த னர். அப்போது மோட்டார் படகில் பயணித்த ஒருவர் திடீரென ஏரியில் குதித்தார். இதைக் கண்ட படகு ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு, வேகமாக படகை இயக்கி தண்ணீரில் விழுந்தவரை காப்பாற்றினார். அந்த நபரிடம் ஓட்டுநர் விசாரித்தார். அந்நபர், நான் ஊட்டியை சேர்ந்த ராஜா எனவும், நீச்சல் அடிப்பதற்காக தண்ணீரில் குதித்ததாகவும் கூறினார்.
ஊட்டி ஏரியில் நீச்சலடிப்பது மிகவும் ஆபத்தானது என அந்நபரை, ஓட்டுநர் எச்சரித்து கரைக்கு பாதுகாப்பாக அழைத்து வந்தார். கரைக்கு வந்ததும் அந்நபர் தப்பியோடினார். மர்மநபர் ஏரியில் குதித்த காட்சியை சக சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ பரவி வருகிறது.