விபூதி பூசி மிரட்டி பணம் பறித்தால் கைது - தி.மலை காவல் துறை எச்சரிக்கை


திருவண்ணாமலையில் இன்றும், நாளையும் கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு விபூதி பூசி மிரட்டி பணம் பறிப்பவர்கள் கைது செய்யப்படுவார் கள் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் இன்றும், நாளையும் திருவண்ணாமலையில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றிரவு 8.47 மணிக்கு தொடங்கி நாளை இரவு 10.43 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பறை வசதி, தூய்மை பணிகள் மேற்கொள்வது உள்ளிட்டவற்றை செய்து வருகிறது. அதேபோல், பாதுகாப்பு தொடர்பான பணிகளை மாவட்ட காவல் நிர்வாகம் செய்து வருகிறது.

திருவண்ணாமலை வரும் பக்தர்கள் வசதிக்காக நகரில் 20 இடங்களில் தற்காலிக பேருந்து நிறுத்தங்கள், 73 இடங்களில் கார் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் எளிதாக பாதுகாப்பான முறையில் கிரிவலம் சென்று வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட காவல் நிர்வாகம் சார்பில் வாட்ஸ்-அப் உதவி எண் 93636 -22330ஐ தொடர்பு கொள்ளலாம்.

இந்த எண்ணுக்கு ‘Hello’ என தகவல் அனுப்பினால் தற்காலிக பேருந்து நிலையங்கள், கார் பார்க்கிங் இடங்களுக்கு செல்வதற்கான கூகுள் மேப் லிங்கை பெற்று பயணிக்கலாம். பக்தர்கள் கிரிவலம் செல்லும் போது தயிர், மோர் பானம் வழங்குதல், விபூதி பூசுதல், ஆசீர்வதித்தல் போன்ற பெயர்களில் மிரட்டி அல்லது ஏமாற்றி பணம் பறிப்பது குற்றமாகும். கிரிவலப் பாதையில் கண்காணிப்பு பணிக்கு குற்ற தடுப்பு அதிரடிப்படை நிறுத்தப்பட்டு குற்றம்செய்வோர் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்.

பக்தர்கள் தங்கள் கைபேசிகள், ஆபரணங்கள், பொருட்ளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். சந்தேக நபர்கள் அல்லது பொருட்கள் குறித்து தெரியவந்தால் அருகில் உள்ள காவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். காவல் உதவிக்கு இன்று காலை தொடங்கி நாளை மறுதினம் (13ம் தேதி) காலை 8 மணி வரை 04175 - 222303, 94981 - 00431 மற்றும் 91596 -16263 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். கிரிவலப் பாதையில் உள்ள நீர் நிலைகளில் பக்தர்கள் யாரும் இறங்க வேண்டாம். கிரிவலப் பாதையில் தற்காலிக கடைகள் அமைப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் வகையில் அதிக சத்தமுள்ள ஒலி எழுப்பிகள், பீபீ கருவிகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதும் பயன்படுத்துவதும் குற்றமாகும். கிரிவலப் பாதையில் உளள நிரந்தர கடைகளில் ஒலிப்பெட்டி மூலம் வரும் விளம்பர ஒலிகள் பக்தர்களுக்கு தொந்தரவாக இருக்கக்கூடாது.

கிரிவலப் பாதையில் தற்காலிக கடைகள் அல்லது கூடாரங்கள் அமைத்து அடுப்பில் சமையல் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சமையல் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும். அண்ணாமலை மீது ஏற முயற்சிப்பதும் குற்றம். கார் பார்க்கிங் இடங்களை தவிர்த்து சாலைகளில் கார்களை நிறுத்திச் சென்றால் அபராதம் விதிக்கப்படும். தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து நகருக்கு பக்தர்கள் செல்ல குறிப்பிட்ட கால இடைவெளியில் இலவச தனியார் மற்றும் கட்டண அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x