[X] Close

’மொறு மொறு’ வடாம் அனுபவங்கள்!  


moru-moru-vadaam

  • வி.ராம்ஜி
  • Posted: 12 May, 2018 12:58 pm
  • அ+ அ-

வருடாவருடம் கோடை வரும். கோடை வந்தால் லீவு வரும். லீவு வந்த கையுடன், குழந்தைகள் தாத்தாபாட்டி வீடுகளுக்குச் செல்வார்கள். பெண்கள், தங்களின் பிறந்தவீட்டுக்கு வருவார்கள். அங்கே பல சுவாரஸ்யங்கள் சத்தானதாக நிகழும். அந்தச் சத்துகளில் ஒன்றாக, பாசத்தின் விளைவாக, முக்கியமானதொரு நிகழ்வு நடந்தேறும். அது... வடாம் போடுதல்! அதாவது வடாம் தயாரித்தல்.

வீட்டின் மூத்த பெண்கள் வடாமுக்கு முன் முஸ்தீபுகளில் இருப்பார்கள். அதற்கான சின்னச்சின்ன கைவேலைகளில் இறங்குவார்கள் இளம்பெண்கள். குழந்தைகள், ‘எப்படா வடாம் போடுவாங்க’ என்று ஆவலாய்க் காத்துக்கிடப்பார்கள்.

ஆமாம்... வருடம் 365 நாளும் தினமும் காக்காவுக்கு சாதமோ பிஸ்கட்டோ தோசையோ வைத்துவிட்டு, ‘காகாகா...’ என்று கூவி அழைப்பவர்கள், அன்றைக்குத்தான்... அதாவது வடாம் போடுகிற நாளில்தான் காக்காவை விரட்டுவார்கள். அந்த விரட்டுகிற வேலையை வாண்டுகள் செய்யும். பசங்களின் ரகளையிலும் கூச்சலிலும் காக்கா, கொஞ்சநாளைக்கு அந்தத் தெருபக்கமே கூட வராது.

சரி... யுத்தத்துக்குச் செல்வதற்கு முன்பாக, மிகப் பிரமாண்டமான வேலைகள் இருக்குமே. இப்போதெல்லாம் ஹோட்டலுக்குச் சென்று, டேபிளில் உட்கார்ந்ததும் ஒருவர் வந்து, அழகாகத் துடைப்பார். இன்னொருவர் நுனி இலையை எடுத்து வந்து விரிப்பார். அடுத்து இன்னொருவர் வந்து, தம்ளரில் தண்ணீர் வைப்பார். இன்னொருவர் வந்து, என்னவேணும் என்று கேட்டு எழுதிக் கொள்வார். அதையடுத்து, சிறிது நேரங்கள் கழித்து, நாம் செய்த ஆர்டருடன் ஒருவர் வந்து இலையில் கடை விரிப்பார். இப்படி ஒரு இட்லி தோசைக்குப் பின்னே ஹோட்டலில் எத்தனையெத்தனை வேலைகள்.

அப்படித்தான் வடாம் போடுவதற்கும் இருக்கிறது.

முதலில் ஒருதுணியை (அநேகமாக வேஷ்டியையே பயன்படுத்துவார்கள்) எடுத்து தரையில் விரிப்பார்கள். பலகையை மடியில் சாய்த்துவைத்துக்கொண்டு, அந்தத் துணியில் கடுகைக் கொட்டிக்கொண்டே வருவார்கள். அதாவது கொஞ்சம்கொஞ்சமாகச் சரியச் செய்து, சுத்தம் செய்துகொண்டே வருவார்கள். ஏன் இப்படி?

முன்பெல்லாம் வருஷாந்திர சாமான் என்று மளிகைச் சாமான்களை வாங்குவது வழக்கம். ஆனால் இப்போது மாதந்தோறும் வாங்குகிறார்கள். அதிலும் பாக்கெட்பாக்கெட்டுகளாகக் கிடைக்கிறது. உப்புக்குக் கூட பிராண்டுகள் வந்துவிட்டன. ஆகவே பாக்கெட்டு பொருட்களை வாங்கி மெல்லியதாக வாணலியில் போட்டு லேசாக வறுத்தெடுத்துக் கொள்கிறார்கள்.

சரி... எப்படிச் செய்வது வடாம்? என்னென்ன தேவை?

பச்சரிசி - 1 கிலோ

ஜவ்வரிசி - 200 அல்லது 250 கிராம்

பச்சைமிளகாய் - 100 கிராம்

எலுமிச்சை பழம் - 3

உப்பு - போதிய அளவு

பெருங்காயம் - கால் டீஸ்பூன்

பச்சரிசி, ஜவ்வரிசி இரண்டையும் நன்றாகச் சுத்தம் செய்துகொள்ளவேண்டும். மிஷினில் கொடுத்து நன்றாக நைஸாக அரைத்துக் கொள்ளவும். நல்ல கனமாக இருக்கும் குண்டான் போன்ற பாத்திரத்திலோ பிரஷர் குக்கரிலோ 10 முதல் 12 கப் வரை தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவேண்டும்.

நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்த மாவை மொத்தமாக எடுத்து பாத்திரத்தில் கொட்டிவிடுங்கள். பிறகு நன்றாகக் கிளறுங்கள்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில், மாவு வந்து நிறம் மாறியிருக்கும். அப்போது அடுப்பை அணைத்துவிட்டு, நன்றாக இறுக மூடி போட்டு வைத்துவிடுங்கள். காம்பை எடுத்துவிட்ட பச்சைமிளகாயுடன் உப்பையும் சேர்த்து, நன்றாக நைஸாக அரைத்து, சிறிதளவு தண்ணீரில் கரைத்து, சக்கையேதும் இல்லாமல் வடிகட்டிக்கொள்ளுங்கள்.

இப்போது மிளகாய்க் கரைசல், எலுமிச்சைச் சாறு என இரண்டையும் கிளறிய மாவில் கொட்டி நன்றாகக் கிளறுங்கள். இந்த இடத்தில் ஒரு விஷயம்... சுவையை சோதித்துப் பார்க்கும் தருணம் இது. சுவைக்கேற்ப தேவையெனில் திருத்தங்கள் செய்து கொள்வதற்கு கோல்டன் வாய்ப்பு, இப்போதுதான். இதைவிட்டால், அம்மான்னாலும் வராது, அப்பான்னாலும் வராது.

வீட்டில் மொட்டைமாடிக்கு எடுத்துச் செல்லுங்கள். துணியை அல்லது பிளாஸ்டிக் பேப்பரை ஜமுக்காளம் விரிப்பது போல விரித்துக்கொள்ளுங்கள். முதல் கட்டமாக, காற்று அதை கலைக்காமல் இருக்க, விரிப்பின் நாலுபக்க மூலையிலும் கற்களை வைத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து, கையில் மாவு ஒட்டாமலிருக்க, கொஞ்சம் மோர்கலந்த தண்ணீரில் ஒரு சொம்பில் வைத்துக்கொள்ளலாம். அதில் கையை விட்டு நனைத்துக்கொண்டு, உழக்குப் பிழிவதில் மாவை எடுத்து அழுத்தி, முறுக்குப் பிழிவது போல, தட்டையைப் போல, ஓமப்பொடி பண்ணுவது போல என்று உங்கள் இஷ்டத்துக்கு பிழிந்துவிடுங்கள்.

முன்பெல்லாம் மதியம் 11 மணியில் இருந்து மாலை வரை என மூன்று நாட்கள் காயவைப்பார்கள். இப்படியாக மூன்று நாள் வெயில் பட வைக்கும்போது, அதன் முறுகலும் திடமும் லேசுபதமும் என கலவையாய் இருக்க, வடாம் சாப்பிடுவதற்காக நாலு கவளம் சாதம் சேர்த்துச் சாப்பிடுவார்கள், குழந்தைகள்.

எல்லாம் முடிந்து வடாம் தயாரானதும் நல்ல டப்பாவில், மூடி நன்றாக டைட்டாக இருக்கும் டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். மதிய உணவு வேளையில், முன்னதாக கொஞ்சம் எடுத்து, எண்ணெயில் போட்டு எடுத்துக் கொடுத்து, பளீர் வெள்ளையில், நம்மைப் பார்த்து பல்லிளிக்கும் வடாமிற்கு, ஒரு ரசிகர்கூட்டமே இருக்கிறது என்று வடாம் விவரங்களைச் சொன்னார் சென்னை நங்கநல்லூர் சரஸ்வதியம்மாள்.

அந்த மொட்டைமாடி... வடாம் காயப்போட்ட அனுபவங்களும் காக்கா விரட்டிய (காக்கா பிடிக்கத்தான் கூடாது; விரட்டலாம், தப்பில்லை) கதைகளும் இன்னும் ஞாபகமிருக்கா?

வடாம் பகிர்ந்துகொள்கிறீர்களோ இல்லையோ... வடாம் அனுபவங்களையேனும் பகிர்ந்துகொள்ளுங்களேன்!

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close