சளியை விரட்டும் மிளகுக் குழம்பு!

மிளகுக் குழம்பு
பனி குறைஞ்சாலும் சளி குறையலையேப்பா என்று மூக்கைப் பிடித்துக்கொண்டு, அலுத்துக் கொள்கிறவர்கள் இந்தக் காலத்தில் ஏகத்துக்கும் இருக்கிறார்கள்.
உண்மைதான். பனி குறைந்துகொண்டே வருகிறது. ஆனால் வந்த சளிதான் இன்னும் போகாமல் அடம்பிடிக்கிறது. இதற்குத்தான் இருக்கிறது, மிளகுக் குழம்பு.
சுவைக்குச் சுவையுமாச்சு. சளியை விரட்டும் மருந்தாகவும் இருக்கும், மிளகுக் குழம்பு செய்வது எப்படி?
இதோ... இப்படித்தான்!
தேவையான பொருட்கள்
வறுத்து அரைக்க வேண்டியவை
தனியா - 3 ஸ்பூன்
மிளகு, கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
சீரகம் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
தாளிக்க வேண்டியவை
கடுகு - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - கால் ஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 குழிக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
இப்படித்தான் செய்யணும்!
புளியைத் தண்ணீரில் நன்றாக ஊறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தனித்தனியாக வாசனை வரும்வரை வறுத்து ஆற வைத்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிச் சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு நன்றாகத் தாளித்து அதோடு அரைத்த விழுதைப் போட்டு ஒரு நிமிடம் வதக்குங்கள்.
புளியைக் கரைத்து ஊற்றி, தேவையான உப்பு போட்டு பச்சை வாசனை போகும்வரை நன்றாகக் கொதிக்கவிடுங்கள். குழப்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன் இறக்கவும்.
இந்த குழம்பு மழைக்காலத்திற்கும் பனிக்காலத்துக்கும் ரொம்பவே ஏற்றது. தலைவலி சளி இருமலுக்கு ஏற்ற மருந்தாகத் திகழும் மிளகுக் குழம்பின் ருசிக்கும் அடிமையாகிவிடுவோம்!