“ஹீரோயின் சிம்ரன் என்றதும் உற்சாகமாகி விட்டேன்! - சசிகுமார் ஜாலி ஷேரிங்


“ஈழத்திலிருந்து ஒரு குடும்பம் இங்கு வந்து எப்படி தங்களுடைய வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் கதை. இது முழுக்க காமெடி படம்” என்று ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட அனுபவம் குறித்து நடிகர் சசிகுமார் விவரித்துள்ளார்.

அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், எம்.எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. மே 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிம்ரன் தவிர்த்து இதர படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.

இந்த விழாவில் சசிகுமார் பேசும்போது, “என்னிடம் சொன்ன கதையை சிறிது மாற்றாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள். இது இயக்குநர் அபியின் வெற்றியாக நான் நினைக்கிறேன். எனக்கு ஜோடியாக சிம்ரன் மேடம் நடிக்கிறார்கள் என்று சொன்னவுடன் உற்சாகமாகி விட்டேன். அவர்களுக்கும் இந்தக் கதை பிடித்திருந்தது. அதனால் நடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். எல்லோருக்கும் சிம்ரன் பிடிக்கும் இந்தப் படத்திலும் சிம்ரன் நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும். அவர்களும் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திலும் அவர் ஹீரோயின். நான் ஹீரோ. அதனால் அவர்கள் இப்போது கூட ஹீரோயினாக நடிக்கலாம்.

இந்தக் கதை எனக்கு ஏன் பிடித்தது என்றால், இந்த கதையின் நாயகன் ஈழத் தமிழ் பேசுபவன். ஈழத்திலிருந்து ஒரு குடும்பம் இங்கு வந்து எப்படி தங்களுடைய வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. இதை பார்க்கும்போது காமெடியாக இருக்கும்.

பொதுவாக, ஈழத் தமிழர்களைப் பற்றிய படம் என்றால், அது சோகமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும். ஆனால், இந்தப் படம் சந்தோஷமாக இருக்கும். ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கும். ஆனால், உள்ளுக்குள் ஒரு வலியையும், விஷயத்தையும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். வலியை மறைத்து தான் நாம் சந்தோஷத்தை கொடுக்க முடியும். அந்த வகையில் இந்த குடும்பம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும்.

அவர்கள் அடுத்த தலைமுறையினருக்காக கஷ்டப்படுகிறார்கள். நாம் படும் கஷ்டங்கள் நம்முடைய தலைமுறையினர் படக்கூடாது. குழந்தைகளை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள் . இதனால் தங்களுக்குள் உள்ள வலியை மறந்து, மறைத்து அவர்களுக்காக வாழ்கிறார்கள். இந்தப் படம் உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் பொருந்தும். அனைவருக்கும் பொருந்தும்.

உலகத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் இப்படத்தை பார்க்கும் போது நம்முடைய கலாச்சாரத்தையும், நம்முடைய தமிழ் மொழியையும் மறந்துவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த எண்ணம் குறைந்தபட்சம் பத்து பேருக்கு ஏற்பட்டாலும் வெற்றிதான். இதை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் தங்களுடைய குடும்பத்துடன் வந்து பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது ஒரு ஃபீல் குட் மூவி.

இந்தப் படத்தில் என்னுடைய மூத்த மகனாக நடித்திருக்கும் மலையாள நடிகர் மிதுன் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கமலேஷ் என ஒரு குழந்தை நட்சத்திரம் நடித்திருக்கிறார். அவர்தான் இந்த படத்திற்கு காமெடி. அவர்தான் உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கப் போகிறார். இந்த படத்தில் பாடல்களும், இசையும் நன்றாக இருக்கிறது. இந்தப் படம் அன்பை போதிக்கிறது” என்று பேசினார் சசிகுமார்.

x