ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஏப்ரல் 10-ம் தேதி உலகமெங்கும் வெளியான அஜித் படம் ‘குட் பேட் அக்லி’. தமிழகத்தில் அஜித் ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி உலக அளவிலும் வசூலில் சாதனை படைத்த அஜித் படமாக உருவெடுத்துள்ளது ‘குட் பேட் அக்லி’. வெளியான 11-வது நாளில் இப்படம் உலக அளவில் ரூ.220 கோடி வசூலை தாண்டியுள்ளது. விரைவில் ரூ.250 கோடி வசூலை எட்டும் என்பது உறுதியாகியுள்ளது.
மே 9-ல் ‘கலியுகம்’ ரிலீஸ்: பிரமோத் சுந்தர் இயக்கத்தில் ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஆடுகளம் கிஷோர் நடிப்பில், போஸ்ட் அபோகலிப்டிக் களத்தில் சைக்கலாஜிகல் உருவாகியுள்ள படம் ‘கலியுகம்’. இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது இப்படத்தின் வெளியீட்டு தேதியினை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டுள்ளார். மே 9-ம் தேதி இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ அப்டேட்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இப்படத்திதை லலித் குமார் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள். இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருகிறார்.
விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “இந்தத் திரைப்படம். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் நிறைய சவால்கள் இருந்தன. ஆனால், நாங்கள் புன்னகைக்கவும் ரசிக்கவும் மறக்கவில்லை. ஒரு காட்சியை கூட சமரசம் செய்யாமல், ஓர் அசல், புதிய பொழுதுபோக்கு திரைப்படத்தை உருவாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
உங்கள் அனைவரின் அன்பு மற்றும் ஆதரவுடன் இறுதிகட்டப் பணிகள் தொடங்குகின்றன. ஒரு திருவிழா தேதியில் இப்படத்தை நீங்கள் ரசிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் தீபாவளி வெளியீட்டுக்கு ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திட்டமிடப்படுவது உறுதியாகி இருக்கிறது.
மே 23-ல் ‘ஏஸ்’ ரிலீஸ்: ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏஸ்’ படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும், இப்படத்தின் பாடல்களை ஜஸ்டின் பிரபாகரன் உருவாக்கி இருக்கிறார். பின்னணி இசையமைக்கும் பணிகளை சாம் சி.எஸ் மேற்கொண்டுள்ளார்.
விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படம் மே 23-ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் வியாபார பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன.
சூரியின் ‘மண்டாடி’- மதிமாறன் இயக்கத்தில் சூரி, சத்யராஜ், சுஹாஸ், மஹிமா நம்பியார், ரவீந்திரா விஜய், அசுத் குமார், சாச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படமான ‘மண்டாடி’யின் ஃபர்ஸ்ட் லுக் கவனம் ஈர்த்துள்ளது, இதன் ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிகின்றனர்.
“சூரிக்காகவே எழுதப்பட்டது இந்த கதாபாத்திரம். இதற்கு வெறும் நடிப்பு மட்டும் போதாது. கூடவே ஒரு நடிகரின் உடல் மற்றும் மன வலிமையும் அதிகம் தேவைப்பட்டது. அதை சூரியால் பூர்த்தி செய்ய முடியும்” என்றார் இயக்குநர் மதிமாறன். “மீன்பிடிக்கப் போகும் போது படகையும் உடன் வரும் மீனவர்களையும் வழிநடத்துவதைப் போல, பாய்மரப் படகுப் போட்டியின் போதும் வழிநடத்தக் கூடியவரே மண்டாடி” படக்குழு விளக்கம் அளித்துள்ளது.