சென்னை: மருத்துவரின் கண்காணிப்பில் உள்ள நடிகர் ஸ்ரீ-க்கு இப்போது பிரைவசி தேவை என்று அவரது நண்பர்கள், குடும்பத்தினரின் அறிக்கையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பகிர்ந்துள்ளார்.
உடல் மெலிந்து, ஆளே மாறிவிட்ட புகைப்படங்கள் வைரல் ஆனதன் தொடர்ச்சியாக நடிகர் ஸ்ரீ-யின் உடல்நிலை குறித்து பல்வேறு விதமான வதந்திகளும், யூடியூப் வீடியோக்களும் பகிரப்பட்டு வந்த நிலையில், நடிகர் ஸ்ரீ-யின் நெருங்கிய நண்பரும், பிரபல இயக்குநருமான லோகேஷ் கனகராஜ் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீ-யின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சார்பிலான அந்த அறிக்கையில், “தற்போது ஸ்ரீ-யின் உடல்நிலையை மருத்துவ நிபுணர் கண்காணித்து வருகிறார். மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி சமூக ஊடகங்களில் இருந்து ஸ்ரீ இப்போது விலகி இருக்கிறார். விரைவில் குணமடைந்து இயல்பு வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால் ஸ்ரீ-க்கு இப்போது பிரைவசி தேவைப்படுவதை அனைவரும் மதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஸ்ரீ-யின் நிலை குறித்த ஊடகங்களின் தவறான செய்திகளும், பரவும் தவறான தகவல்களும் மிகவும் வேதனை அளிக்கின்றன. ஸ்ரீ-யின் உடல்நிலை குறித்த வதந்திகள், தவறான செய்திகளை பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம். குறிப்பாக, ஸ்ரீ-யின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, அவர் தொடர்புடைய ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் மற்றும் நேர்காணல்களை நீக்குமாறும் வேண்டிக்கொள்கிறோம்.
ஸ்ரீ குணமடைவதில் கவனம் செலுத்தும் வேளையில் அவரது பிரைவசிக்கு மதிப்பு அளிக்குமாறு ஊடகங்களை கேட்டுக் கொள்கிறோம். சில நபர்கள் நேர்காணல்களில் வெளிப்படுத்தும் எந்தவொரு கருத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை. அதனை முழுமையாக மறுக்கிறோம்” என்று லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.