இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டான்லி சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 60.
ஸ்ரீகாந்த் - சினேகா நடித்து கடந்த 2002-ம் ஆண்டு வெளியான, ‘ஏப்ரல் மாதத்தில்' என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், எஸ்.எஸ்.ஸ்டான்லி. தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையில் இருந்து சரவணன்', ஸ்ரீகாந்த் நடித்த ‘மெர்குரி பூக்கள்', ‘கிழக்கு கடற்கரை சாலை’ ஆகிய படங்களை இயக்கினார்.
சில படங்களில் நடித்துள்ள அவர், ஞான ராஜசேகரன் இயக்கிய ‘பெரியார்' படத்தில், அறிஞர் அண்ணா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விஜய் சேதுபதி நடித்த ‘ஆண்டவன் கட்டளை' , ‘மகாராஜா', விஜய்யின் ‘சர்க்கார்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். சென்னை வளசரவாக்கத்தில் நேற்று மாலை அவருடைய இறுதிச்சடங்கு நடந்தது. அவர் மறைவுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.