‘புஷ்பா’ மூலம் பான் இந்தியா ஸ்டாரான அல்லு அர்ஜுன் அடுத்து நடிக்கும் படத்தை அட்லி இயக்குகிறார். இதை கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. அல்லு அர்ஜுனின்43-வது பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
“சர்வதேச தரத்துடன் இந்தியாவில் தயாராகும் ‘பான் வேர்ல்ட்’ படமாக இது இருக்கும். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவில், இந்தப் படம் தயாராகிறது. இதில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்” என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
படம் குறித்த அறிவிப்பு வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன், அட்லி, அல்லு அர்ஜுன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள விஎஃப்எக்ஸ் ஸ்டூடியோவுக்கு அட்லி, அல்லு அர்ஜுன் செல்வதும் இடம்பெற்றுள்ளது. ‘ஸ்பைடர் மேன்: ஹோம்கமிங்’, ‘கேப்டன் அமெரிக்கா: சிவில் வார்’ போன்ற படங்களில் பணியாற்றிய அயர்ன்ஹெட் ஸ்டூடியோவின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோஸ் பெர்னாண்டஸ், விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளரான ஜேம்ஸ் மடிகன் ஆகிய புகழ்பெற்ற தொழில்நுட்ப நிபுணர்கள் இதன் கதையை புகழ்கின்றனர். மோஷன் கேப்சரிங் டெக்னாலஜியில் அல்லு அர்ஜுனை ஸ்கேன் செய்யும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இதனால் இது சயின்ஸ் பிக் ஷன் படம் என்று கூறப்படுகிறது.