‘மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறேன்’ - சர்ச்சை பேச்சுக்கு மிஷ்கின் விளக்கம்


அனுராக் காஷ்யப், வெற்றி மாறன் இணைந்து தயாரித்துள்ள படம், ‘பேட் கேர்ள்’. அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ருது ஹாரூண், டீஜே அருணாச்சலம் உட்பட பலர் நடித்துள்ளனர். அமித் திரிவேதி இசை அமைத்துள்ளார். வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இதன் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நடிகை டாப்ஸி, தயாரிப்பாளர் தாணு, வெற்றிமாறன், அனுராக் காஷ்யப், மிஷ்கின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ‘பாட்டல் ராதா’ பட விழாவில் இளையராஜா பற்றி மிஷ்கின் ஒருமையில் பேசியது சர்ச் சையான நிலையில் அதற்கு இந்த விழாவில் அவர் மன்னிப்புக் கேட்டார்.

மிஷ்கின் பேசும்போது கூறியதாவது: அன்று நான் பேசும்போது கொஞ்சம் நகைச்சுவையாகத்தான் பேசினேன். இரண்டு மூன்று வார்த்தை மேலே போய்விட்டது. அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். ஆனால், அந்த பேச்சில் குறிப்பிட்ட ஒரு மனிதரை நான் தாக்கவோ, விமர்சிக்கவோ இல்லை. திருக்குறளில் காமத்துப்பால் இல்லையா? அதே போல மோசமான விரசக் காட்சிகளைக் கொண்ட ‘இருட்டறையில் முரட்டுக் குத்து’ வந்தபோது யாராவது விமர்சித்தார்களா?

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படம் முடித்தபின், சாட்டிலைட் உரிமைக்காக என்னை அழைத்துப் போனார்கள். அங்கு 20 பேர் இருந்தார்கள். நான் ரூ. 2 கோடி கேட்டேன். அவர்கள் ரூ.75 லட்சத்துக்கு காசோலையை கொடுத்துவிட்டுப் படத்தை மிரட்டி வாங்கினார்கள். அந்தக் காசோலையை கிழித்துப் போட்டுவிட்டு, ‘நான் ஊரில் இருந்து வரும்போது பென்சிலையும் ஒரு வெள்ளைப் பேப்பரையும்தான் கொண்டு வந்தேன். நான் கஷ்டப்பட்டு மீண்டு வருவேன்’ என்றேன்.

இன்றும் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். எனக்குத் துரோகம் செய்தவர்களில் ஒருவர் இன்று பெரிய இயக்குநர். ஒவ்வொரு தருணமும் துரோகத்தை அனுபவிக்கிறேன். என்னால் எப்படி ஒரு சக மனிதனை மோசமாகப் பேச முடியும்? ‘உதிரிப்பூக்கள்’ கிளைமாக்ஸில் ஒரு வசனம் வரும். அந்த மோசமான மனிதன் ஊர்மக்களைப் பார்த்துச் சொல்வான், “இவ்வளவு நாள் கெட்டவனா இருந்தேன். இப்ப உங்க எல்லாரையுமே கெட்டவனா மாத்திட்டேன்னுதான் வருத்தமா இருக்கு” என்று.

உங்கள் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு, உங்களை (பத்திரிகையாளர்கள்) நான் கடவுளாக்குகிறேன். இவ்வாறு மிஷ்கின் பேசினார்.

x