[X] Close

விஸ்வரூபமெடுக்கும் ’96’ கதை சர்ச்சை: தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு பாரதிராஜா கடிதம்


bharathiraja-wrotes-letter-to-producer-council-regarding-96-movie-issue

  • kamadenu
  • Posted: 12 Nov, 2018 17:58 pm
  • அ+ அ-

‘96’ கதை சர்ச்சைத் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு பாரதிராஜா கடிதம் எழுதியிருப்பதால், இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான படம் ‘96’. இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது மட்டுமன்றி, இளைஞர்கள் கொண்டாடி தீர்த்தனர். தீபாவளி சிறப்பு ஒளிபரப்பாக சன் தொலைக்காட்சி ‘96’ படத்தை ஒளிபரப்பியது.

இப்படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் என்பவர் பேட்டியளித்தார். அதனைத் தொடர்ந்து ‘96’ இயக்குநர் பிரேம்குமார் இக்கதையை தன்னுடையது தான், படைப்பாளியை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், சுரேஷ், நிர்மல் குமார் உள்ளிட்ட சிலர் பாரதிராஜா அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து ‘96’ படம் தொடர்பாக விளக்கங்களை அளித்தார்கள். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த 2012 டிசம்பரில் எனது உதவி இயக்குநர் சுரேஷ் சத்ரியன் சென்னையில் உள்ள எனது அலுவலகத்தில் ‘92’ என்ற தலைப்பில் கூற்ய கதையைக் கேட்டு வியந்து, பாராட்டி உடனே அதை கொடைக்கானல் அடிவாரத்தில் உள்ள எனது தோட்டத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக விவாதித்து, ‘பால்பாண்டி என்கிற பாரதி’ அல்லது ‘நீ, நான், மழை, இளையராஜா’ என்கிற தலைப்புகளில் அக்கதையை இயக்குவதாக முடிவு செய்திருந்தேன். ஆனால், தவிர்க்கமுடியாத காரணங்களால் ‘ஓம்’ படம் துவக்கப்பட, அதனுடைய வெளிநாட்டு படப்பிடிப்புகள் மற்றும் அதை சார்ந்த வேலைகளால் இந்த படத்தின் வேலைகள் சற்று தள்ளிப்போனது.

எனவே, அந்த காலகட்டத்திலேயே எனது ஆலோசனைப்படி மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் இக்கதை தொடர்பாக அணுகுமாறு கூறியிருந்தேன். அவரும் முயற்சி எடுத்தார்.

இது இவ்வாறு இருக்கையில் தற்போது வெளிவந்துள்ள ‘96’ எனும் படம் MADRAS ENTERPRISES என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ’திரு.நந்தகோபால்’ அவர்களால் தயாரிக்கப்பட்டு திரு.சி. பிரேம்குமார் அவர்களால் இயக்கப்பட்டு, திரு.விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் அப்படத்தை 11-10-2018 அன்று எனக்கு திரையிட்டுக்காட்டினார்கள்.
இத்திரைப்படம் தொடக்கம் முதலே எனது உதவியாளர் கூறிய கதையின் முழுப்பிரதியாக இருந்ததை கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். என் உதவி இயக்குநர் மனமுடைந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இது வேதனைக்கும், மன உளைச்சலுக்குமானது மட்டுமல்ல, தடுத்து நிறுத்தப்பட வேண்டியது மற்றும் தீர்வு காணப்பட வேண்டியது என்பதை உணர்ந்து இப்படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் அவர்களை 12-10-2018 அன்று அழைத்து பேசினேன். எவ்வித முடிவு எட்டப்படாததால், தற்போது தயாரிப்பாளர் சங்கத்தை நாடியுள்ளேன்.

மேலும் ‘அசுரவதம்’ படத்தின் இயக்குநர் மருதுபாண்டியனை 2014 வருட இறுதியில் நண்பர் என்ற முறையில் அழைத்து தன்னுடைய கதையை சுரேஷ் விவாதித்துள்ளார். மருதுபாண்டியன் ‘96’ படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் அக்கதையின் கதை விவாதத்திலும் தொடக்கம் முதலே பங்கெடுத்துள்ளார். மருதுபாண்டியனை விசாரித்தபொழுது 2014-ல் எனது உதவியாளர் கதை கூறியதை ஒப்புக் கொண்டார். இதன்மூலம் எனது உதவியாளரின் கதை எவ்வாறு ‘96’ ஆனது என்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

தயாரிப்பாளர்கள் சங்கம் இதனை விசாரித்து தீர்வுகண்டு தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், இவை இனிமேலும் நடைபெறாமலிருக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

இக்கடிதத்தின் நகலை இயக்குநர்கள் சங்கம், ஒளிப்பதிவாளர் சங்கம் மற்றும் பெப்சி அமைப்பு ஆகியவற்றுக்கும் அனுப்பியுள்ளார் பாரதிராஜா. தற்போது ‘96’ கதை விவகாரத்தை முன்னணி இயக்குநர் பாரதிராஜா கையில் எடுத்திருப்பதால், இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்திருக்கிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close