[X] Close

மீடூ விவகாரம்: இயக்குநர் அமீரின் பேச்சுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் சாடல்


lakshmi-ramakrishnan-fb-post-about-ameer-speech

  • kamadenu
  • Posted: 12 Nov, 2018 10:53 am
  • அ+ அ-

மீடூ விவகாரம் தொடர்பாக இயக்குநர் அமீரின் பேச்சுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கடுமையாக சாடியுள்ளார்.

தமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி மீடூ விவகாரத்தில் புகார் தெரிவித்தது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. அதனைத் தொடர்ந்து நடிகர் அர்ஜூன், இயக்குநர் சுசி கணேசன் உள்ளிட்ட பலர் மீது மீடூ-வில் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. இதில் லட்சுமி ராமகிருஷ்ணன், ’பழசிராஜா’ இயக்குநர் மீது குற்றம்சாட்டினார்.

தமிழ்த் திரையுலகில் ‘மீடூ’ விவகாரம் தொடர்பாக இயக்குநர் அமீர் மேடையில் கடுமையாக சாடினார். ராஜலட்சுமி மரணம் குறித்து ஏன் மீடூ விவகாரத்தில் பேசவில்லை என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி பேசியிருந்தார்.

அமீரின் பேச்சுக் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் சகோதரர் அமீர் பேசியதைக் கேட்டேன். என்னை குறிப்பிட்டு சில வார்த்தைகள் விட்டிருக்கிறார். எனது தந்தை மறைந்து போன இந்த தருணத்தில், பகையூட்டும் ஜாதி வன்மம் கொண்ட சகோதரர் அமீர் பேசிய வார்த்தைகள்தான் மிகவும் வேதனை அளிக்கிறது. 

அவர் இப்பொழுது தொடுத்த ஜாதி விஷமார்ந்த அம்பு, ஒரு நாள் அவரை நோக்கியும் பாயலாம். கைத்தட்டல் வாங்குவதற்காக இந்த சமுதாயத்தை எரித்துக் கொண்டு இருக்கும் ஜாதி என்னும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற வேண்டாம். பாதிக்கப்பட்டவர்கள் ஜாதியைப் பார்த்து நான் குரல் கொடுப்பது இல்லை.

என் மீது குற்றம் சாட்டும் சகோதரர்களே, உங்களது முகத்திலிருந்து ஜாதி சாயம் பூசிய கண்ணாடியை நீக்கிவிட்டுப் பாருங்கள். பல ராஜலக்ஷ்மிகளுக்காகவும் நந்தினிகளுக்காகவும் நான் துடித்துப் போனதும், குரல் கொடுத்ததும் உங்கள் கண்ணுக்குத் தெரியும். மூன்று வருடங்களுக்கு முன்னால், பத்து பெண்களுக்கு பெண்கள் தினத்தன்று பிஜேபி அலுவலகத்தில் ஒரு விருது வழங்கப்பட்டது. அந்த புகைப்படத்தை இப்பொழுது இணையத்தில் உலவ விட்டு தவறாக சித்தரித்து இருக்கிறார்கள். அதே போல் என்னுடைய மீ டூ ஸ்டோரியை சகோதரர் அமீர் அவர்கள் தவறாக சித்தரித்து பரப்பிக்கொண்டு இருக்கிறார்.

என் தந்தையார் எனக்கு ஜாதி வெறி ஊட்டி வளர்க்கவில்லை. ராஜாஜி அவர்களையும் பெரியார் அவர்களையும் ஒரே மாதிரி நேசித்து ,அவர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகளை எல்லாம் தாண்டி இருவரிடமும் இருக்கும் நல்ல கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு வாழ்ந்த தந்தைக்கு பிறந்த மகள் நான். அவர் வகுத்த பாதையில் தான் என்றும் பயணிப்பேன். 

இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close