சென்னை: சட்டம் ஒழுங்கில் சமரசம் இல்லை, ரசிகர்களை பிரபலங்கள்தான் கட்டுப்படுத்த வேண்டும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா2’ திரைப்படத்தின் ப்ரீமியர் காட்சி ஹைதரபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் ஒளிபரப்பானது. அங்கு ரசிகர்களுடன் படம் பார்க்க நடிகர் அல்லு அர்ஜூன் வந்தார். இதனால், கூட்ட நெரிசல் அதிகமாகி சந்தியா என்ற பெண் உயிரிழந்தார். அவரது மகனும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். இதனால், நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும், காவல்துறை அறிவுறுத்தலையும் மீறி அவர் சந்தியா திரையரங்கிற்கு வந்தார் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம் சுமத்தினார்.
இதுதொடார்பான சிசிடிவி காட்சிகளும் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டது. இந்தப் பிரச்சினைகள் பூதாகரமானதைத் தொடர்ந்து படங்களுக்கு இனி சிறப்புக் காட்சி இல்லை மற்றும் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையுமான அல்லு அரவிந்த் மற்றும் தெலுங்கு திரையுலகின் முக்கிய சினிமா பிரபலங்கள் பலரும் முதல்வர் ரேவந்த் ரெட்டியை இன்று சந்தித்து பேசியுள்ளனர்.
இந்த சந்திப்பில் சட்டம் ஒழுங்கில் சமரசம் செய்யக் கூடாது எனவும் ரசிகர்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை பிரபலங்கள்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மற்றபடி, திரையுலகுடன் அரசு எப்போதும் துணை நிற்கும் எனவும் அவர் உறுதி தெரிவித்துள்ளார்.