[X] Close

ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன் ரஜினிக்கு 33 வயசு


padikkadhavan-rajini-33-years

படிக்காதவன் ரஜினி, அம்பிகா

  • kamadenu
  • Posted: 11 Nov, 2018 21:08 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

சிவாஜி நடித்த படிக்காத மேதையும் மக்களின் மனதில் நிற்கிறது. சிவாஜிராவ் கெய்க்வாட் என்கிற ரஜினிகாந்த், சிவாஜிகணேசனுடன் நடித்த படிக்காதவனும் என்றைக்கும் எவராலும் மறக்கவே முடியாத படம்.

ரஜினியின் அதிரிபுதிரி ஹிட் வரிசைப் படங்களில் படிக்காதவன் படமும் அட்டகாசமாக பட்டியலில் இடம்பெறுகிறது. ஹவுஸ்புல் காட்சிகளாக, நூறு நாட்களைக் கடந்து ஓடிய படிக்காதவனில் கார் டிரைவர் கேரக்டரில் நடித்திருப்பார் ரஜினி. பின்னாளில் வந்த பாட்ஷாவில் ஆட்டோ டிரைவர். இதில் கார் டிரைவர்.

அண்ணன் தம்பிகள் மூவர். மூத்தவர் சிவாஜி. அடுத்த அண்ணன் ரஜினி. கடைசியாக விஜய்பாபு. அண்ணியின் கொடுமையால், சின்னவயதில் ரஜினியும் விஜய்பாபுவும் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். தன் படிப்பைத் தியாகம் செய்துவிட்டு தம்பியைப் படிக்கவைக்கிறார் ரஜினி.

ஆனால், தம்பியோ ஆடம்பரமாகவும் கெட்டவழிகளிலும் செல்கிறார். காதல், அந்தக் காதலால் ஏற்படும் தவறான தொடர்புகள், அந்தத் தொடர்பின் மூலம் நடக்கிற கள்ளக்கடத்தல். இவையெல்லாம் தெரிந்து நொந்து வெந்து ஆவேசமாகிற ரஜினி, ஒருகட்டத்தில் அண்ணன் சிவாஜியைப் பார்க்கிறார். இப்போது நீதிபதியாக இருக்கிறார். ஆனால் அண்ணா என்று அழைக்கவில்லை. நாங்கள்தான் உங்கள் தம்பிகள் என்று சொல்லிக்கொள்ளவில்லை. தயங்கி நிற்கிறார்.

பிறகு அந்தக் கூட்டத்தில் இருந்து தம்பியைக் காப்பாற்றினாரா, தனக்கே விழுந்த பழியில் இருந்து எப்படி விலகினார், அண்ணன் சிவாஜியும் தம்பிகளும் இணைந்தார்களா என்பதையெல்லாம் சொல்லும் அழகிய திரைக்கதைதான் படிக்காதவன்.

ரஜினி – ஜனகராஜ் காமெடி படத்துக்கு ப்ளஸ். ரஜினியும் அம்பிகாவும் சந்தித்து, காதலாகிக் கொள்கிற காட்சிகளும் அமர்க்களம். என்.வீராச்சாமியின் பிரமாண்டமான தயாரிப்பில், இயக்குநர் ராஜசேகர் கச்சிதமாக இயக்கி, ரஜினி ரசிகர்களுக்கான படமாகத் தந்திருப்பார். கல்லூரி விழாவுக்கு வரும் ரஜினியின் அலப்பறை சொல்லிமாளாது. ஒவ்வொரு பாக்கெட்டில் இருந்தும் பணத்தை தம்பிக்கு எடுத்துக்கொண்டே கொடுத்துக்கொண்டே இருக்கும் காட்சி, கலங்கடித்துவிடும்.

ரஜினிகாந்த், சிவாஜி, அம்பிகா, வடிவுக்கரசி, ஜனகராஜ், நாகேஷ், ஜெய்சங்கர், ரம்யாகிருஷ்ணன், டிஸ்கோ சாந்தி, பூர்ணம் விஸ்வநாதன் உட்பட பலரும் நடித்திருப்பார்கள்.

சொல்லி அடிப்பேனடி, ராஜாவுக்கு ராஜா நான்தான், ஒரு கூட்டுக்கிளியாக ஒரு தோப்புக் குயிலாக, ஜோடிக்கிளியெங்கே பக்கத்திலே என்று எல்லாப் பாடல்களுமே செம ஹிட்டு. இளையராஜா படத்துக்கு பெரும்பலம். முக்கியமாக, ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன் கண்மணி என்கிற பாடல், செம மாஸ். ரஜினியின் நடிப்பும் இந்தப் பாடலும் வைரமுத்துவின் வரிகளும் கைத்தட்டல்களை அள்ளிக்கொண்டு போகும்.

படிக்காதவன் ரஜினிக்கு, ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன் ரஜினிக்கு… இன்று 33 வயசு. 1985ம் ஆண்டு, நவம்பர் 11ம் தேதி தீபாவளித் திருநாளில் ரிலீசான படிக்காதவனுக்கு இன்றுடன் 33 வயசு.

படிக்காதவன் வாழ்க. ரஜினிகாந்த் வாழ்க. படிக்காதவன் குழுவிற்கு பாராட்டுச் சான்றிதழ்கள்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close