ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் நடிகர் சூர்யாவின் புதிய படத்தில் இருந்து இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் விலகியிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'கங்குவா' ரூ.200 கோடி கூட வசூல் செய்யாமல் மோசமான தோல்வியை தழுவிய நிலையில் படம் வெளியான முதல் நாளே நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.
படத்திற்கு ஆதரவாக நடிகை ஜோதிகா பகிர்ந்த பதிவு சமூக வலைத்தளங்களில் படத்தை இன்னும் ட்ரோல் செய்ய வைத்தது.
இதனால் தனது அடுத்தடுத்த படங்கள் சிறப்பாக வரவேண்டும் என்பதில் நடிகர் சூர்யா மிகத் தீவிரமாக உள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தை முடித்துள்ள சூர்யா, இதனைத் தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நாற்பத்தி ஐந்தாவது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதன் படப்பிடிப்பு தற்போது கோயம்புத்தூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. படத்தின் அறிமுக போஸ்டரில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பெயர் அறிவிக்கப்பட்டது. பின்பு, ஒளிப்பதிவாளர் குறித்த அறிவிப்பு போஸ்டர் வெளியான போது அதில் ரஹ்மான் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர் படத்திலிருந்து விலகி விட்டார் என்ற தகவல் பரவியது.
இதனை உறுதி செய்யும் வகையில் 'கட்சி சேரா' புகழ் பாடகர், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என படக்குழு அறிவித்துள்ளது. இவர் லோகேஷ் கனகராக் தயாரிப்பில் லாரன்ஸ் நடித்து வரும் 'பென்ஸ்' படத்திற்கும் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.