நடிகர் அல்லு அர்ஜூன் மீது ஹைதராபாத், ஜவஹர் நகர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜூன் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. சுகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் இந்த வாரம் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா படமாக இது வெளியாக இருப்பதால் சென்னை, மும்பை, கேரளா என இந்தியாவின் முக்கிய இடங்களுக்கு பறந்து பறந்து படக்குழு புரோமோஷன் செய்து வருகிறது.
இதில் மும்பையில் நடந்த புரமோஷனில் பேசிய நடிகர் அல்லு அர்ஜூன் தனது ரசிகர்களை ஆர்மி என்று அழைத்துள்ளார். ரசிகர்கள் தனது குடும்பத்தைப் போன்றவர்கள் என்றும் ’புஷ்பா2’ படத்தின் வெற்றியை அவர்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் கூறினார். இவர் ரசிகர்களை ஆர்மி என்று அழைத்தது முறை கிடையாது என்றும் நாட்டை பாதுகாக்கும் ராணுவத்தினரை மட்டுமே அப்படி அழைக்க வேண்டும் என்றும் ’க்ரீன் பீஸ் என்விரான்மெண்ட் அண்ட் வாட்டர் ஹார்வெஸ்டிங் ஃபவுண்டேஷன்’ தலைவர் ஸ்ரீனிவாசன் ஹைதராபாத், ஜவஹர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.