[X] Close

போலீஸ் பலமுறை கதவைத் தட்டியது; ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டரில் பதிவு


sarkar-murugadoss

  • kamadenu
  • Posted: 09 Nov, 2018 00:29 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

போலீசார் வீட்டின் கதவை பலமுறை தட்டியுள்ளனர். தற்போது நான் வீட்டிலேயே இல்லை என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமன், உடனடியாக முருகதாஸ் வீட்டுக்கு வந்தார்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூலில் புதிய சாதனையை எட்டியுள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்ற அதேவேளையில், அதிமுகவினரிடையே இந்தப் படம் சலசலப்பையும் உண்டு பண்ணியுள்ளது.

சர்கார் படத்தில் வில்லியாக நடிக்கும் வரலட்சுமிக்கு ஜெயலலிதாவின் கோமளவல்லி எனும் பெயர், இலவசப் பொருட்களை எரிப்பது என தவறான விஷயங்களை விஷமத்தனமாக படமாக்கியிருப்பதாக அதிமுக அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் முதலான பலரும் சர்கார் படத்தின் சர்ச்சைக்கு உரிய காட்சிகளை நீக்கவேண்டும். இல்லையெனில் சட்டப்படி சந்திப்போம் என்று சொல்லிவந்தனர்.

இந்த நிலையில், இன்று காலையில் இருந்தே அதிமுகவினர் சர்கார் படம் ஓடுகிற தியேட்டர்களில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேனர்களைக் கிழித்து கண்டனம் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. நிறைய தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இதையடுத்து சர்கார் படத்தில் சர்ச்சைக்கு உரிய காட்சிகள் நீக்கப்பட்டு நாளை வெள்ளிக்கிழமை 9ம் தேதி மதியக் காட்சியில் இருந்து திரையிடப்படும் என விநியோகஸ்தர்கள் தரப்பிலும் தயாரிப்பாளர் தரப்பிலும் முடிவு செய்திருப்பதை விநியோகஸ்தரும் திரைப்பட உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான திருப்பூர் சுப்ரமணியம் இதனைத் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டுக்கு போலீஸ் படை வந்து இறங்கியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சர்கார் படம் குறித்து பல இடங்களில் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வரும் நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இயக்குநர் முருகதாஸ் வீட்டுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காகவே அவர் வீட்டின் முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே, இயக்குநர் முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், போலீசார் வந்து பலமுறை கதவைத் தட்டிக்கொண்டே இருந்தனர் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் தற்போது நான் வீட்டிலேயே இல்லை என்றும் முருகதாஸ் பதிவிட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close