[X] Close

தியேட்டர்களில் அதிமுகவினர் ரகளை எதிரொலி: சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க 'சர்கார்' படக்குழு ஒப்புதல்


sarkar-scens

  • kamadenu
  • Posted: 08 Nov, 2018 19:04 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

சர்கார் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில், அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை, சர்கார் படத்தில் இருந்து நீக்குவதற்கு ஒப்புக்கொண்டது சர்கார் தரப்பு என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்தார்.

சர்கார் படத்துக்கு அதிமுக தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கடும் கண்டனங்களைத் தெரிவித்தார். இதேபோல அமைச்சர்கள் அன்பழகன், ஆர்.பி. உதயகுமார், ஜெயக்குமார் உள்ளிட்டோர் தொடர்ந்து கண்டனக் குரல்களை எழுப்பி வந்தனர்.

படத்தில் ஜெயலலிதாவின் உண்மைப் பெயரான கோமளவல்லி என்று வரலட்சுமிக்கு வைத்தது, இலவசப் பொருட்களை எரிப்பது முதலான காட்சிகளை நீக்கவேண்டும் என்றும் இல்லையெனில் சட்டரீதியாக வழக்கு தொடுப்போம் என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று மாலையில் இருந்து தமிழகம் முழுவதும் சர்கார் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில், அதிமுகவினர் வந்து ரகளையில் ஈடுபட்டனர். படத்தை திரையிடக்கூடாது என்று முற்றுகையிட்டனர். விஜய்க்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். தியேட்டர் வாசலில் இருந்த விஜய் பேனர்கள், சர்கார் பட பேனர்கள் கிழிக்கப்பட்டன.

பல தியேட்டர்களில் உள்ள பேனர்களை, போலீசாரே வீண் பிரச்சினை வேண்டாம். அகற்றிவிடுங்கள் என திரையரங்கினருக்கு அறிவுறுத்தினார்கள்.

தமிழகத்தில் சென்னையில் தேவி, ஆல்பர்ட், தாம்பரம் நேஷனல், காஞ்சிபுரத்தில் உள்ள தியேட்டர்கள், மணப்பாறை, மதுரை, திண்டுக்கல் என தமிழகம் முழுவதும் உள்ள பல தியேட்டர்களில் மாலைக் காட்சிகள் ரத்துசெய்யப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்குவதற்கு தயாரிப்பாளர், இயக்குநர் தரப்பில் ஒப்புதல் தரப்பட்டதாகத் தெரிகிறது.

பிரபல விநியோகஸ்தரும் திரையரங்கு உரிமையாளருமான திருப்பூர் சுப்ரமணியம் இதுகுறித்து தெரிவித்ததாவது:

அதிமுகவினர் தியேட்டர்களை முற்றுகையிட்டுப் போராடி வரும் நிலையில், உடனே திரைப்படத்தின் விநியோகஸ்தரான தேனாண்டாள் பிலிம்ஸ் முரளியிடம் பேசினேன். விஷயத்தைச் சொன்னேன். தயாரிப்புத் தரப்பில் பேசப்பட்டது.

நிறைவாக, திரையரங்கங்களின் நலனையும் மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, சர்ச்சைக்குரிய காட்சிகள் என்று அதிமுகவினர் சொல்லும் காட்சிகளை நீக்குவது என முடிவு செய்யப்பட்டது.

எனவே இன்று இரவு திரைப்படத்தை இன்னொரு முறை முழுவதுமாகப் பார்த்துவிட்டு, எந்தந்த காட்சிகளை நீக்குவது, எந்தந்த இடங்களில் ம்யூட் செய்வது என்பது உள்ளிட்டவற்றைக் குறித்துக்கொண்டு, நாளை வெள்ளிக்கிழமை 9ம் தேதி அன்று காலை 10 மணிக்கு தணிக்கைக்குழுவினரிடம் சென்று விளக்குவோம்.

இதையடுத்து நாளை வெள்ளிக்கிழமை மதியக் காட்சியில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளுடன் திரையிடப்படும். குறிப்பாக, வரலட்சுமியின் பெயர் கோமளவல்லி என்று வரும் இடம் ம்யூட் செய்யப்படும். மேலும் இலவசப் பொருட்களை எரிக்கும் காட்சி முதலானவை நீக்கப்படலாம்.

அதிமுகவினருக்கு வேண்டுகோள். தயவுசெய்து கொஞ்சம் பொறுமையாக இருந்து அமைதிகாக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இதுகுறித்து செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் பேசிவிட்டேன். அவரும் அதற்கு ஒத்துக்கொண்டார். அமைச்சருக்கு நன்றி.

 

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close