[X] Close

மெர்சலுக்கு பாஜக; சர்காருக்கு அதிமுக


mersal-bjp-sarkar-admk

மெர்சல் விஜய் - சர்கார் விஜய்

  • kamadenu
  • Posted: 08 Nov, 2018 12:57 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

விஜய் காட்டில் எப்போதுமே மழைதான். இப்போது வசூல் மழை. மெர்சலுக்கு எப்படி பாஜகவோ, அதேபோல் சர்காருக்கு அதிமுக என ரசிகர்களே பேசிக்கொள்கின்றனர்.

இயக்குநர் அட்லியின் இயக்கத்தில், தெறியும் அதற்குப் பிறகு மெர்சலும் ரிலீசானது. மெர்சல் படத்தில், ஜிஎஸ்டி அது இது என்று படத்தின் பல வசனங்கள், மத்திய அரசை அட்டாக் செய்தது என்று விமர்சனங்கள் எழுந்தன.

இதையெல்லாம் கருத்தில் கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், உடனே திரும்பிய பக்கமெல்லாம் மெர்சலையும் விஜய்யையும் கண்டித்து பேட்டி கொடுத்தார்.

ஏற்கெனவே விஜய் படம் என்பதால் டிக்கெட் கிடைக்கவில்லை. இப்போது பாஜக மெர்சலைக் கண்டித்து பேசிவருவதால், அடுத்த ஷோக்களுக்கும் டிக்கெட் கிடைக்கலியேப்பா என்று ரசிகர்கள் வருத்தமும் சந்தோஷமுமாகப் பேசிக்கொண்டார்கள்.

தமிழிசையும் விடவில்லை. விமானநிலையம், கட்சி அலுவலகம், அந்த விழா, இந்த விழா என்று எந்த இடமாக இருந்தாலும், விஷயம் எதுவாக இருந்தாலும் பேட்டி முட்டிக்கொண்டு முடிகிற இடம், மெர்சல், விஜய், ஜிஎஸ்டி... என்பதாகவே இருந்தது.

ஒரு சுமாரான வெற்றியையோ அல்லது வெற்றியையோ அடைந்திருக்க வேண்டிய மெர்சல் மிகப்பெரிய வெற்றியையும் அபரிமிதமான வசூலையும் வாரிக்குவித்ததற்கு பாஜக, எதிர்க்கிறேன் பேர்வழி என மெர்சலை திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, சொல்லிக்கொண்டே இருந்தது மிகமுக்கியக் காரணமாக சொல்லப்பட்டது.

இப்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் திரைப்படம், மீண்டும் அதேபோலான சர்ச்சையைக் கொண்டு ரிலீசாகி இருக்கிறது.

நவம்பர் 6ம் தேதி ரிலீசான முதல்நாளில் இருந்தே சர்ச்சையும் றெக்கைக் கட்டத் தொடங்கிவிட்டது. அரசியல் தலைவர் பழ.கருப்பையா, அவரின் மகள் வரலட்சுமி படத்தில் அவரின் பெயர் கோமளவல்லி. இது ஜெயலலிதாவின் இயற்பெயர்.

மேலும் இலவசப் பொருட்கள் குறித்த விமர்சனங்கள், போக்குவரத்துக் கழகம் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட காலகட்டத்தில், தற்காலிக டிரைவர்களை நியமித்தது, அதனால் விபத்து நிகழ்ந்தது என்பன உள்ளிட்ட பல விஷயங்கள் அதிமுக அரசைக் கேலி செய்வதாக உள்ளதாக, அமைச்சர் பெருமக்கள் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

இதுகுறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, சர்கார் படத்தில் சில காட்சிகளையும் வசனங்களையும் உடனடியாக நீக்கவேண்டும். வளர்ந்து வரும் நடிகர் விஜய்க்கு இது அழகல்ல எனும் ரீதியில் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அதையடுத்து அமைச்சர் அன்பழகனும் தன் பங்குக்கு திரி கொளுத்திப் போட்டிருக்கிறார். இலவசங்கள் கூடாது என்று சர்கார் படத்தில் சொல்லுவதையெல்லாம் மக்கள் ரசிக்கமட்டார்கள். இலவசம் எப்போதுமே மக்களுக்குத் தேவை என்று சொல்லியிருக்கிறார்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம், சர்கார் படம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம். அதன் பிறகு சர்கார் படத்தின் சில காட்சிகளை நீக்குவது குறித்தும் படத்துக்கு தடை கோருவது பற்றியும் தயாரிப்பாளர், நடிகர் விஜய், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோர் மீது வழக்கு பதியப்படும் என்று தெரிவித்தார்.

அவ்வளவுதான். இந்த எதிர்ப்புப் பேச்சுகள், சர்கார் படத்துக்கு கூடுதல் மார்க்கெட்டிங்குகளாக மாறிப்போயின. படத்தைப் பார்த்தே தீருவது என தியேட்டர்களுக்குப் படையெடுத்தார்கள். படையெடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

ஏற்கெனவே சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில், விஜய்யின் அரசியல் பேச்சு, படத்துக்கு எதிர்பார்ப்பைக் கிளப்ப, இப்போது அதிமுகவினர் காட்சிகளை நீக்கச் சொல்லியும் கண்டனம் தெரிவித்தும் பேசி வருகிற நிலையில், இன்னும் பற்றிக்கொண்டிருக்கிறது சர்கார்.

ஆக, மெர்சலுக்கு பாஜக என்றால் சர்காரின் எகிடுதகிடான வெற்றிக்கு அதிமுக என்று கிண்டலாகப் பேசிக்கொள்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close