[X] Close

‘தலைவா’,‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளான ‘சர்கார்’: காரணம் என்ன?


why-trouble-for-sarkar

  • kamadenu
  • Posted: 07 Nov, 2018 17:58 pm
  • அ+ அ-

‘தலைவா’ ‘மெர்சல்’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து ‘சர்கார்’ படமும் அரசியல் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சர்கார்’. படம் வெளியாவதற்கு முன்பே கதை தொடர்பான சர்ச்சையில் சிக்கி, சமரசமாகி ஒருவழியாக படம் வெளியாகியிருக்கிறது. ஆனால், சர்ச்சை என்பது அப்படத்தைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான விளம்பரப்படுத்துதல், ரசிகர்களின் ஆதரவு, மக்கள் கூட்டம் என முதல் நாளில் சுமார் 30 கோடி வசூலைக் கடந்து சாதனை புரிந்திருக்கிறது.

'சர்கார்' படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்கிறது எனத் தகவல் வந்துள்ளது. அவற்றை நீக்க வேண்டும் என படக்குழுவினருக்கு அறிவுறுத்தப்படும். நீக்கவிட்டால் முதல்வருடன் கலந்து பேசி அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருக்கிறார். ‘தலைவா’ ‘மெர்சல்’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து ‘சர்கார்’ படமும் அரசியல் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

'சர்கார்' அரசியல் சர்ச்சைக்கு உள்ளாகக்கூடிய படம் தானா?

'சர்கார்' படத்தில் துணிச்சலாக பல்வேறு அரசியல் கட்சிகளைச் சாடியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் என்று சொல்லலாம். ஏ.ஆர்.முருகதாஸ், ஜெயமோகன் ஆகியோரது வசனத்தை, விஜய் பேசியிருக்கும் தைரியத்தை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.

அரசர் காலத்திலிருந்து எப்படி மக்கள் ஓட்டுப்போட்டு தலைவரைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கினார்கள் என்பதை படத்தின் டைட்டில் கார்டில் ஓவியங்கள் மூலமாக பார்வையாளர்களுக்கு கடத்திவிடுகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். மேலும், அதனைத் தொடர்ந்து தனது ஓட்டை கள்ள ஓட்டாக போட்டுவிட்டார்கள் என்பதற்காக ஒருவனது போராட்டமே படத்தின் கதையாகத் தொடங்குகிறது. அதிலிருந்து அரசியல்வாதிகள் எப்படி மக்களைப் பார்க்கிறார்கள் என்பதை ராதாரவியைப் பேச வைத்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். அவரும் இதனை துணிச்சலுடன் பேசியும் உள்ளார்.

விஜய்யின் ஹீரோயிசம் முதல் பாதியில் இருந்தாலும், எதற்காக அவர் அரசியலுக்கு வருகிறார் என்பதோடு இடைவேளை போட்டிருக்கிறார். அதற்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் காட்சிப்படுத்திருக்கும் விஜய்யின் அரசியல் பிரவேசக் காட்சிகள் அனைத்துமே நிஜவாழ்க்கையில் விரைவில் அரசியலுக்கு வரும் ஆசையில் உள்ள நடிகர் விஜய் கடைப்பிடித்தால் சிறப்பாக இருக்கும்.

திமுக - அதிமுக என இரண்டு கட்சிகளுமே, தமிழகத்தில் எப்படி ஆட்சி புரிந்திருக்கிறார்கள் என்பதை திமுக சார்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலே ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருப்பது குறிப்பிடதக்கது. படத்தின் இரண்டாம் பாதியில் வரும் அரசியல் மாநாடு காட்சியில் அரசியல்வாதியான பழ.கருப்பையாவிடம் விஜய் பேசும் காட்சிக்கு திரையரங்குகளில் பயங்கரமான வரவேற்பு

நியூட்ரினோ திட்டம், மீனவர்கள் பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் பிரச்சினை என அனைத்தையும் சரி செய்ய வாக்குறுதியளிக்க வேண்டும் என்று பழ.கருப்பையாவிடம் விஜய் கேட்பார். அதற்கு “இதெல்லாம் வைச்சு தான் எங்களுக்குப் பணமே வருது. அதுலயே கை வைச்சா” என்று நீண்ட வசனம் பேசுவார் பழ.கருப்பையா. அது தற்கால அரசியலை அப்படியே படம் பிடித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

அதிலும் சமீபமாக தமிழகத்தை உலுக்கிய நெல்லை தீக்குளிப்பு சம்பவம், கண்டெய்னர் பணம் ஆகியவையும் திரைக்கதையில் சரியான இடத்தில் பொருத்தி மக்களுக்கு புரியும் வகையில் சொல்லியிருக்கிறார்கள். இப்போது வரையில் தமிழகத்தில் பிடிக்கப்பட்ட கண்டெய்னர் பணம் யாருடையது என்ற தகவலே இல்லாமல் இருக்கிறது. அதிலும் விஜய்யின் டிரைவர் “இங்கு பிரச்சினையை தீர்க்க வேண்டாம் சார். ஒரு பிரச்சினையை மறைக்க இன்னொரு பிரச்சினை போதும்” என்று கூறுவார். அது தான் தற்போதைய தமிழகத்தின் நிலைமை. ஒவ்வொரு பிரச்சினை பூதாகரமாக வரும் போதும், இன்னொரு பிரச்சினையைக் கொண்டு மூடிவிடுவார்கள்.

அதே போல் 'சர்கார்’ படத்தில் வரலட்சுமியின் பெயர் கோமலவள்ளி. இதில் ஒரு பின்னணி இருக்கிறது. மறைந்த தமிழக முதலவர் ஜெயலலிதாவின் இன்னொரு பெயர் கோமலவள்ளி தான். இப்படியொரு பெயரை வைத்து அதிமுகவினரை மட்டும் தான் சீண்டியிருக்கிறாரா என்றால் இல்லை. திமுகவினரையும் தான் சீண்டியிருக்கிறார். அப்படத்தில் ஒரு காட்சியில் இலவசங்கள் கொடுத்து சீரழிக்கிறார்கள் என்ற காட்சியில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இலவச மிக்ஸியை எடுத்து தீயில் வீசுவார். அதில் மறைந்த திமுகவின் தலைவர் கருணாநிதியின் ஸ்டிக்கர் ஓட்டியிருக்கும்.

படத்தின் முதல் பாதியில் மக்களுக்கு என்ன திட்டங்கள் அறிவித்தாலும், இலவசங்கள் கொடுத்தாலும் அதில் என் தலைவனின் புகைப்படத்தை ஒட்டி ஒட்டி அனைத்து மக்களின் மூளையிலும் என் தலைவன் முகத்தை கொண்டு போய் பிராண்டிங் பண்ணியிருக்கேன்டா என்ற வசனம் பேசுவார் ராதாரவி. அப்படித்தான் சென்னை வெள்ள பாதிப்பிலும், இலவசங்கள் அளிப்பதிலும் நடந்ததை நம் கண்முன் பார்த்திருக்கிறோம்.

ஒவ்வொரு தொகுதிக்கான வேட்பாளரை அந்தத் தொகுதி மக்களே தேர்ந்தெடுப்பது, 49 பி சட்டம் போண்ற சில விஷயங்களை மக்களுக்கு கூறியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இது சாத்தியப்படுமா அதற்கு நம் அரசியல்வாதிகள் விடுவார்களா என்பது கேள்விக்குறி தான்.

திமுக, அதிமுக என்ற இரண்டு மாபெரும் கட்சிகளுக்கு எதிராக விஜய்யின் கையில் சாட்டையைக் கொடுத்து சுழற்ற விட்டிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இவ்விரண்டு கட்சிகளுமே இதனை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள் என்பதற்கான முதல்படி தான் இன்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியிருப்பது. இன்னும் போக போக பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் எதிர்ப்புகள் வரக்கூடும்.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close