[X] Close

இது விஜய்யின் சர்கார்!


vijay-in-sarkar

சர்கார் விஜய்

  • kamadenu
  • Posted: 07 Nov, 2018 10:33 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

அரசியல் பண்ணும் கார்ப்பரேட்டின் சி.இ.ஓ., தன்னுடைய ஓட்டை கள்ளஓட்டாகப் போட்டுவிட்டதால் உண்டான கோபத்தின் வெளிப்பாடாக, நேரடி அரசியல் பண்ணுவதுதான் சர்கார்.

உலகப்புகழ் பெற்ற நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் ராமசாமி, தமிழகத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்து இறங்குகிறார். தேர்தல் பூத்துக்கு வந்தால்... அங்கே அவருக்கு அதிர்ச்சி. அவருடைய ஓட்டு, வேறு எவராலோ கள்ள ஓட்டுப் போடப்பட்டது தெரியவருகிறது.

இதில் கொந்தளித்துப் போன சுந்தர் ராமசாமி, அடுத்து கோர்ட்டுக்குப் போகிறார். பதவியேற்பு நிறுத்திவைக்கப்படுகிறது. அடுத்தடுத்து, நடக்கிற அரசியல் சூதுவாதுகளால், கொஞ்சம் கொஞ்சமாக அரசியலுக்குள் நுழைகிறார். முதல்வர் நிற்கும் தொகுதியில் எதிராகக் களமிறங்குபவர், ஒருகட்டத்தில், 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துகிறார்.

அரசியல் கட்சிக்கும் கார்ப்பரேட் கிரிமினல் என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் சுந்தர் ராமசாமிக்கும் இடையே நடைபெறும் அரசியல் போட்டியில் எப்படி வெல்கிறார் சுந்தர், என்னென்ன சூழ்ச்சிகள் என்பதையெல்லாம் சமீபத்திய அரசியல் சூழல்களையெல்லாம் கலந்துகட்டி, காக்டெயிலாக்கிக் கொடுத்திருப்பதுதான் சர்கார்.

சுந்தர் ராமசாமியாக விஜய். கார்ப்பரேட் கம்பெனியின் சி.இ.ஓ. கேரக்டருக்கு அளவெடுத்தது போல் பொருந்துகிறார். வெளிநாட்டுக்கார பி.ஏ.க்கள் சகிதமாக வந்து இறங்கும்போதும், ஓட்டளிக்கப் போகும்போதும், கள்ள ஓட்டு விஷயம் தெரிந்த போதும் என வெளிநாட்டு சிந்தனையிலேயே ஸ்டைலீஷாக இருக்கிற விஜய், கொஞ்சம் கொஞ்சமாக தமிழக சாயலுக்குள் வருவது அவ்வளவு யதார்த்தமாக இருக்கிறது.

பொதுவாகவே, ஓபனிங் காட்சிக்கு, காதலியைப் பார்ப்பதற்கு, வில்லனிடம் மோதுவதற்கு, சவடால் விடுவதற்கு என டெம்ப்ளேட்டாக சில பாடிலாங்வேஜ்களை வைத்திருப்பார் விஜய். ஆனால், இதில் படம் முழுக்கவே புதிய பாடிலாங்வேஜுடன் வலம் வருகிறார். நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. ஆனாலும் கூட சில சில இடங்களில், பழைய விஜய் எட்டிப்பார்க்கிறார்.

அரசியல் தலைவராக பழ.கருப்பையா. அங்காடித்தெருவுக்குப் பிறகு பழ.கருப்பையாவுக்கு அற்புதமான கேரக்டர். பின்னியிருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள ரெண்டு ராதாரவி தனது தனித்த மேனரிஸத்தால் பிரமாதம் பண்ணியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரின் அமர்க்கள நடிப்பு, அசத்தியெடுக்கிறது.

விஜய்யின் உறவுக்காரப் பெண்ணாக கீர்த்தி சுரேஷ், பழ.கருப்பையாவின் மகளாக வரலட்சுமி. லிவிங்க்ஸ்டன், யோகி பாபு என ஏகப்பட்ட நட்சத்திரங்கள். படத்திலும் படம் நெடுக எக்கச்சக்க கூட்டங்கள். ஆனால், டைட்டில் முடிந்து வணக்கம் கார்டு போடுகிற வரை, விஜய் ராஜாங்கம்தான். மனிதரும் மொத்தப்படத்தையும் தோளில் வைத்து தாங்குகிறார்.

நெல்லையின் கந்துவட்டிக்கொடுமை, டெங்குக் காய்ச்சல், மின்சாரம் தாக்கி விபத்து, ஓட்டத்தெரியாத தற்காலிக பஸ் டிரைவரால் கால்களை இழந்தவர் என நடப்பு நிகழ்வுகளையெல்லாம் வைத்துக் கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் முருகதாஸ்.

ஒரு ஓட்டின் முக்கியத்துவம் என்ன, அந்த ஒரு ஓட்டு எங்கெல்லாம் என்னென்ன வேலைகள் செய்தன என்பதை விஜயகாந்த் ரேஞ்சுக்கு புள்ளிவிவரம் சொல்கிற காட்சியில் விசில் பறக்கிறது. நான் கார்ப்பரேட் கிரிமினல் என்று சொல்லும்போது அலப்பரையைக் கொடுக்கிறார்கள் ரசிகர்கள்.

அயோத்தியாக்குப்பத்தில் பேசுகிற வசனங்கள் கொஞ்சம் நீளம்தான் என்றாலும் தெறி வசனங்கள். முருகதாஸும் ஜெயமோகனும் சேர்ந்து வசனங்களால் அனல் பறக்கவிட்டிருக்கிறார்கள்.

49 பி எனு சட்டப்பிரிவையும் ஒரு விரல் புரட்சியையும்  ஒரேயொரு ஓட்டின் முக்கியத்துவத்தையும் அட... ஓட்டுப் போடுகிற அவசியத்தையும் பளீர்பொளேர்சுளீரென சொல்லியிருப்பதுதான் படத்தின் ஸபெஷல் காராச்சேவு.

கீர்த்திசுரேஷை வீணடித்திருக்கவேண்டாம். வேலுநாயக்கருடன் எப்போதும் நின்றுகொண்டிருக்கிற ஜனகராஜ், டெல்லிகணேஷுக்குக் கூட வேலை இருந்தது. பாவம்... கீர்த்திக்கு ஒரு வேலையும் இல்லை. அதேபோல், பாவம் பாபுவாகி விட்டார் யோகி பாபு. சீரியஸான கதைக்கு, நகைச்சுவையெல்லாம் வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார் போல, முருகதாஸ். அதனால், முருகதாஸூக்கு மிக நன்றாக வருகிற காதல் ப்ளஸ் நகைச்சுவை எபிசோடுகள் இதில் மிஸ்ஸிங்.

ஆனால், பாடல்களின் மீது எப்படி நம்பிக்கை வைத்தார் என்று தெரியவில்லை. பரபரவிறுவிறு அரசியல் கதையின் டவர் இல்லாத செல்போன் போல், பாடல் காட்சிகள் டர்ராக்குக்கின்றன. சிம்டாங்காரன் உட்பட கேட்க நன்றாக இருந்தாலும் பார்க்க பரவசம் தரவில்லை. அதேபோல், எல்லாப் பாடல்களுக்கும் ஒரேவிதமான டான்ஸ் மூவ்மெண்ட்களும் சுவாராஸ்யத்தை ஏற்படுத்தவில்லை.

விஜய், சகாக்களுடன் பைக்குகளில் வருகிற காட்சி, ராதாரவியின் கட்சி ஆபீசுக்கே வந்து சண்டையிடும் காட்சி, 234 தொதிகளுக்கும் நிகழ்கால சமூக செயற்பாட்டாளர்களை தேர்தல் களத்தில் நிறுத்துகிற உத்தி எல்லாமே அற்புதம்.

கத்தியில் இட்லி, இதில் தக்காளி என்று ரசிகர்கள் பேசிக்கொள்வதையும் கேட்கமுடிந்தது. கிரிஷ் ஒளிப்பதிவு அழகு என்றால் ராம் லட்சுமணனின் சண்டைக்காட்சிகள் மிரட்டல். அரசியல் தலைவரின் மகளான வரலட்சுமியின் வில்லித்தனம், சூப்பர்தான். அதேசமயம், இந்த நடிகை அம்மா கேரக்டருக்கு அந்த நடிகை மாமியார் கேரக்டருக்கு என்றாவது போல் வரலட்சுமி எனும் அற்புதமான நடிகையை, இன்னும் எத்தனை நாளைக்குத்தான், எத்தனை படங்களில்தான் வில்லியாகக் காட்டிக்கொண்டிருப்பீர்கள்? (படத்தில் வரலட்சுமியின் பெயர் கோமலவள்ளி. ஜெயலலிதாவின் இன்னொரு பெயர் என்பது நினைவுக்கு வருகிறதுதானே!)

கட்சி இணையும் விழாவில் நடக்கிற போலீஸ் தடியடி, அப்போது இந்தக் கைதானே வாங்குச்சு கைல அடிங்கடா, இந்தக் கால்தானே ஓடுச்சு. கால்ல அடிங்கடா. இந்த வாய்தானே புகழ்ந்துச்சு. வாய்ல அடிங்கடா என மக்கள் பேசுகிற வசனங்களும் காட்சிகளும் பக்கா டிராமா.

ஆனாலும் இந்த சர்கார் மோசமில்லை. அரசியல் கருத்துகளையும் அரசியல் எண்ட்ரிக்கான பாஸ்வேர்டாகவும் வந்திருக்கிறது இந்த சர்கார். ஓஹோ என்றும் சொல்லமுடியாது. ஒண்ணுமே இல்லையே என்று புறந்தள்ளவும் முடியவில்லை.

மற்றபடி விஜய்யின் சர்கார் இது. விஜய் ரசிகர்களுக்கான சர்கார் இது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close