[X] Close

தளபதி – அப்பவே அப்படி கதை - தளபதிக்கு 27 வயசு!


thalapathi-appave-appadi-kadhai

தளபதி

  • kamadenu
  • Posted: 05 Nov, 2018 19:43 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

தமிழ்த் திரைப்பயணத்தில், எத்தனையோ படங்கள் தடம் பதித்திருக்கின்றன. காலங்கள் கடந்தும் அந்தப் படங்கள் பேசுபொருளாக இருக்கிற சாதனையையும் நிகழ்த்திவிடுகின்றன. அப்படி இன்றைக்கும் பேசுபொருளாக இருக்கும் படங்களின் பட்டியலில், தளபதியும் ஒன்று.

ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் இல்லாத கதையா என்று பலரும் சொல்லுவார்கள். ஆனால் அதை உள்வாங்கி, சிரமேற்கொண்டு இன்றைய நவீனத்துக்குள் அந்தக் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்து உலவவிட்ட மாயவித்தைக்காரர் மணிரத்னம் என்று இன்றைக்கும் பிரமிப்புடன் பார்க்கிறார்கள் அவரை. மணிரத்னம் மாதிரி மகாபாரதம் தழுவி படம் பண்ணினால், கதைத் திருட்டுக்கெல்லாம் வேலையே இல்லை இங்கே! 

தமிழ் சினிமாவை நாயகனுக்கு முன்பு, பின்பு எனப் பிரித்துப் பார்க்கவேண்டும். அது கமல் எனும் நாயகனின் அடுத்தகட்ட அசுர வளர்ச்சியாக இருக்கட்டும். சினிமாவின் நவீன பாஷையாக இருக்கட்டும். மணிரத்னம் ஸ்டைல் என உருவானதாக இருக்கட்டும். இப்படி பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

87ம் ஆண்டு கமலை வைத்து நாயகன் எடுத்தார் மணிரத்னம். வேலுநாயக்கராகவே உருமாற்றினார். அதேபோல் 91ம் ஆண்டு, ரஜினியை வைத்து தளபதி எடுத்தார். சூர்யாவாகவே மாற்றி களமிறக்கினார்.

சாதாரண சட்டை, மிகச்சாதாரணமான செருப்பு என இயல்பு மீறாமல் இருக்கிற சூர்யா கேரக்டர், ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, ரஜினிக்கே கூட புதுசுதான்.

சிறுவயதில், பள்ளிப்பருவ வயதில், யாரோ ஒருவனின் வார்த்தைக்கு மயங்கி தன்னையே ஒப்படைத்தவள், குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். போகி அன்று எல்லோரும் பழசைத் தூக்கிப்போட்டுக்கொண்டிருக்க, புதுசாய் இந்த பூமிக்கு வந்த குழந்தையை, ஒரு ரயிலுக்குள் வைத்து அனுப்பிவிட்டு, வீட்டுக்கு வந்துவிடுகிறாள். அந்தக் குழந்தைதான் கதையின் நாயகன். அந்த நாயகன்தான் சூர்யா என்கிற ரஜினி. அந்த ரஜினிதான் தளபதி.

கெட்டதை தட்டிக் கேட்கிற, ஊருக்கு நல்லது செய்கிற சூர்யா, பெண்ணிடம் வம்பு செய்தவனை அடிக்கிறான். செத்தேபோகிறான். கைதாகிறான். செத்தவன் சாதாரண அடியாள் இல்லை. தேவாவின் ஆள். அங்கே தேவாவின் ராஜாங்கம்தான். முதலில் சூர்யாவை மிரட்டிச் செல்லும் தேவாவுக்கு, விஷயம் தெரியவர, சூர்யாவைப் பிடித்துப் போகிறது. தன்னுடன் சேர்த்துக்கொள்கிறான்.

அங்கே நட்பு வேர் விட்டு மரமாக வளர்கிறது. மெல்ல மெல்ல, தேவாவின் ராஜாங்கத்துக்கு தளபதியாகிறான் சூர்யா. அடிதடியுடன் இருக்கும் சூர்யா, ஐயர் வீட்டுப் பெண்ணைக் காதலிக்கிறார். அது தெரிந்து தேவாவே சென்று பெண் கேட்கிறார். மறுக்கப்படுகிறது. காதலும் புதைக்கப்படுகிறது. சூர்யாவால் செத்துப்போனவனுக்கு மனைவியும் குழந்தையும் உண்டு. அவர்களைப் பார்த்து பதைபதைத்துப் போகிறான் சூர்யா. ஒருகட்டத்தில், அவர்களுக்கு துணையாக இருக்கிறான். ‘வெறும் காவல்’ என்கிறான். அப்படியொரு உறவு. அப்படியொரு பந்தம்.

தேவாவின் ராஜாங்கம் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் நிலையில், அங்கே அந்த ஊருக்கு புதிய கலெக்டர் வருகிறார். அவர் பெயர் அர்ஜூன். அந்த அர்ஜூனுடன் அப்பாவும் அம்மாவும் வருகிறார்கள். அந்த அம்மா வேறு யாருமில்லை. சிறுமியாக இருக்கும் போது, போகியன்று, ரயிலில் குழந்தையை விட்டாளே… அவள்தான்.  

இப்போது, தேவா, சூர்யாவை ஒடுக்குவதில் சூர்யாவின் தம்பி குறியாக இருக்கிறான். ஒருகட்டத்தில், இதுதான் அம்மா, இதுதான் தம்பி என்றெல்லாம் தெரிந்தாலும் தேவாவின் பக்கமே நிற்கிறான் சூர்யா. இதனிடையே, சூர்யாவின் காதலி, கலெக்டர் பொண்டாட்டியாகிறாள் என்பது தனி எபிசோடு.

இந்த முடிச்சுகளை வைத்துக்கொண்டு, குருக்ஷேத்திர யுத்தத்தையே நடத்தியிருப்பார் மணிரத்னம். சூர்யா – ரஜினி. தேவா – மம்முட்டி. அர்ஜுன் – அரவிந்த்சாமி. அம்மா – ஸ்ரீவித்யா. அந்தக் காதலி ஷோபனா. குழந்தையுடன் ரஜினி துணையுடன் இருப்பவர் பானுப்ரியா. ரஜினி – ஷோபனா, ரஜினி – மம்முட்டி, ரஜினி – பானுப்ரியா, ரஜினி – ஸ்ரீவித்யா என்ற களங்களில், நம்மைக் கதறடித்து, கைத்தட்டவைத்து, மனம் கனக்கச் செய்திருப்பார் மணிரத்னம்.

‘தேவா பொழச்சுக்குவான்’, ‘டாக்டர் சொன்னாரா?’, ‘தேவாவே சொன்னான்’.

‘அந்தக் கலெக்டரைக் கொன்னுரு’, ‘முடியாது’, ஏன், முடியாது, அதான் ஏன், ஏன்னா அவன் என் தம்பி.

’பாரு… என் சூர்யாவைப் பாரு. என் நண்பனைப் பாரு. என் தளபதியைப் பாரு. எப்படி நிக்கிறான் பாரு’

‘உன் குடும்பம்னா அது எனக்கும் குடும்பம்தான் சூர்யா. கலெக்டர் உன் தம்பின்னா, அவன் எனக்கும் தம்பிதான்’

இப்படி படம் நெடுக மணிரத்ன, ரத்தினச்சுருக்க வசனங்கள், நீண்டக் கைத்தட்டல்களைப் பெற்றன. எல்லோரின் நடிப்பிலும் அப்படியொரு இயல்பு. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு, மிரட்டியெடுக்கும். மம்முட்டிக்கு ரஜினிதான் தளபதி என்றால், தளபதிக்கே தளபதி இளையராஜாதான்.

போகி கொண்டாட்டத்துக்கு ஒரு பாட்டு. மார்கழிதான் ஓடிப்போச்சு போகியாச்சு ஹோய் நம்மையே கொண்டாட வைத்துவிடும். ரஜினி – ஸ்ரீவித்யா எபிசோடுகளில், சின்னத்தாயவள் பாடலும் அந்த பிஜிஎம்மும் கரைத்து உருக்கிவிடும். யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே… பாடல், காதல் சொல்லும். காதலுக்கு ஏங்கவைக்கும். அடி ராக்கம்மா கையத் தட்டு பாடலும் பின்னணி இசையும் அதகளம் பண்ணும். தாளமிட வைத்துவிடுவார் இசைஞானி. காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாடலும் ரஜினியும் மம்முட்டியும் அவர்களின் நட்பும் பார்க்க… அந்த இசையானது, அந்தக் கூட்டத்தோடு கூட்டமாய் நம்மையும் அழைத்துச் சென்று ஆடவைத்துவிடும்.

எல்லாவற்றையும் விட அந்த சுந்தரி கண்ணால் ஒரு சேதி… இன்றைக்கும் ஆகச்சிறந்த காதல் பாடல். காட்சி மிரட்டலாக இருந்ததோ இல்லையோ, அந்தப் பாடல் அப்படியொரு பிரமாண்டம். எஸ்.பி.பி.யின் குரல் வித்தை காட்டும். ஜானகியம்மாவின் தேன் தடவிய குரல், காதலைச் சொட்டுச்சொட்டாக நம் செவிகளுக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.

படத்துக்கு இளையராஜாவின் பின்னணி இசை எந்த அளவுக்கு வலு சேர்த்தது என்பதை இப்போது பார்க்கும்போதும் உணரமுடியும். மணிரத்னத்தின் மெளனத்தையும் அந்த ரெண்டுவரி வசனங்களையும் தாண்டி, அந்தக் கதாபாத்திரங்களையெல்லாம் நமக்குள் பதித்திருப்பார் இசையால்!

91ம் ஆண்டு தீபாவளியன்று ரிலீசானது தளபதி. 91ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதிதான் தீபாவளி. அன்றைய தினம்தான் இன்றைய தினம். இந்தநாளில்தான் தளபதி வெளியானது. தளபதி வந்து 27 வருடங்களாகிவிட்டன.

இந்தப் படம் பற்றி எழுதும்போதே, இன்னொரு ஆசையும் உள்ளே வந்துபோகிறது. அது படிப்பவர்களுக்கும் வரலாம். வரும். அது… மீண்டும் இளையராஜாவும் மணிரத்னமும் இணைந்து படம் கொடுத்தால் எப்படியிருக்கும்?

ஆயர்பாடியில் கண்ணனில்லையோ…

ஆசை வைப்பதே அன்புத்தொல்லையோ வரிகள் என்னவோ செய்கின்றன. வாலி சாருக்கு சல்யூட்.

தளபதிக்கு ரெட்கார்பெட் விரிப்போம். மணிரத்னம் சாருக்கு கைகுலுக்கல்கள். மம்முட்டி சாருக்கு கங்கிராட்ஸ். ராஜா சார்… கொன்னுட்டீங்க போங்க!

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close