’இந்தியன்’ பட நடிகை மனிஷா கொய்ராலா இங்கிலாந்து பிரதமரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தப் புகைப்படங்களை அவர் தனது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
கமல்ஹாசனின் ‘இந்தியன்’, ரஜினிகாந்தின் ‘பாபா’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மனிஷா. புற்றுநோயில் இருந்து போராடி மீண்டவர் இப்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் இவர் நடித்திருந்த ‘ஹீரமண்டி’ வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது.
நேபாளத்தைப் பூர்விகமாகக் கொண்டவரான மனிஷா இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்துப் பேசியிருக்கிறார். இங்கிலாந்துக்கும் நேபாளத்துக்கும் இடையேயான நட்பு ஒப்பந்தம் 100 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இதைக் கொண்டாடும் விதமாக நடிகை மனிஷா கொய்ராலா உள்ளிட்ட நான்கு நேபாள பிரதிநிகளை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சந்தித்துள்ளார்.
இதுகுறித்து மனிஷா தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “இங்கிலாந்து- நேபாள நாடுகளிடையேயான 100 ஆண்டுகள் நட்பைக் கொண்டாடும் விதமாக அந்நாட்டு பிரதமரை நேரில் சந்தித்தது மகிழ்ச்சியாக உள்ளது. நட்பின் அடிப்படையில் அவரையும் அவரது குடும்பத்தையும் இமயமலை அடிவாரத்தில் கேம்ப்பிற்கு அழைத்திருக்கிறேன்.
அவருக்கு நான் நடித்த ‘ஹீரமண்டி’ வெப் தொடர் பிடித்திருக்கிறது என்பது மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார். மனிஷா கொய்ராலாவின் தந்தை பிரகாஷ் கொய்ராலா பிரபல அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்லாது, மனிஷாவின் தாத்தா பிஷ்வேஷ்வர் பிரசாத் கொய்ராலா 1959-60 வரை நேபாளத்தின் பிரதமராக இருந்தார்.
இதையும் வாசிக்கலாமே...
வங்கக்கடலில் புயல் சின்னம்... தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொட்டப் போகிறது கனமழை!