காலில் அடிபட்டு தேறி வரும் ராதிகாவைப் பார்க்க நேரில் சென்று நலம் விசாரித்த நடிகர் சிவக்குமார். பழைய நினைவுகளை கிளறும் விதமாக அவர் வரைந்த ஓவியங்களையும் ராதிகாவிடம் கொடுத்துள்ளார்.
நடிகை ராதிகா சரத்குமார் தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராகக் களமிறங்கினார். தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பாக விருதுநகரில் பல இடங்களுக்கும் சென்றவர் இப்போது மீண்டும் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவருக்கு காலில் அடிப்பட்டிருப்பதால் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவரை நலம் விசாரிப்பதற்ஆக நடிகர் சிவக்குமார் நேரில் சந்தித்துள்ளார்.
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை ராதிகா, ‘சிவக்குமார் அண்ணாவுடன் இருக்கும் அன்பு உண்மையானது. காலில் அடிபட்டு தேறி வரும் இந்த வேளையில் என்னைப் பார்க்க நேரில் வந்திருக்கிறார். எங்கள் இருவரின் பயணம் குறித்தான பழைய நாட்கள், புகைப்படங்கள் ஆகியவற்றைக் காட்டினார்’ எனக் கூறியிருக்கிறார்.
ராதிகா- சிவக்குமார் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்கள். குறிப்பாக, ‘பாசப்பறவை’ படத்தில் அண்ணன் - தங்கையாக நடித்திருப்பார்கள். சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஹிட்டடித்த ‘சித்தி’ சீரியலிலும் இருவரும் ஜோடி சேர்ந்திருப்பார்கள். திரையைத் தாண்டி நிஜத்திலும் இவர்கள் அண்ணன் - தங்கையாகவே அன்பு காட்டி வருகின்றனர்.
சமீபத்தில் ராதிகா, சரத்குமார் பற்றி அவதூறு பரப்பும் விதமாக பேசிய திமுக மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராதிகா புகார் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.