”இருபதுகளில் என் குழந்தை வேலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டேன்” என நடிகை அலியாபட் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லியுள்ளார்.
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகள் அலியாபட்- ரன்பீர் கபூர் தம்பதியின் மகள் ராஹா. கடந்த ஆண்டு டிசம்பர் பண்டிகை அன்று முதல் முறையாக தங்களது மகளை வெளியுலகிற்கு காட்டினார் அலியாபட். அப்போதிருந்து ராஹாவின் கியூட் புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் நெட்டிசன்கள் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றனர்.
குழந்தைப் பிறப்புக்குப் பின்பு அலியா சினிமாவில் பிஸியாக இருந்தாலும், ரன்பீர் கபூர் தன்னுடைய குழந்தைக்காக சிறிது காலம் பிரேக் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ராஹாவுக்கு இப்போது ஒரு வயதாகும் நிலையில், இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இருபது வயதிலேயே தனது குழந்தையை வேலைக்கு செல்ல அனுமதிக்க மாட்டேன் என நடிகை அலியாபட் சொல்லியிருக்கிறார். இது குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், “நான் கர்ப்பமாக இருந்தபோது லண்டனில் ‘ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ என்ற படப்பிடிப்பில் இருந்தேன். அப்போது தொடர்ச்சியாக மூன்று நாட்கள் குற்றவுணர்வு காரணமாக என்னால் சரியாக தூங்க முடியவில்லை.
என் அம்மாவுக்கு நான் சரியான மகளாக இருக்கவில்லையோ என்ற நினைப்புதான் அது. என்னுடைய 23 வயதிலேயே நான் நடிக்க வந்துவிட்டேன். அதனால், வேலை பின்னாலேயே ஓடினேன். பல சமயங்களில் என் அம்மாவின் ஃபோன்கால்களை எடுக்க மாட்டேன்.
அவருக்கு சரியான கவனம் கொடுக்க மாட்டேன். இதை மனதில் வைத்தே ராஹாவை இருபதுகளிலேயே வேலைக்கு அனுப்பக் கூடாது என்று நினைக்கிறேன். நான் முற்போக்கு சிந்தனை உடையவள்தான். ஆனால், ராஹாவின் வேலை விஷயத்தில் இது என் எண்ணம்” என்றார்.