[X] Close

வடசென்னை  அப்படி; சர்கார் இப்படி!


vadachennai-sarkar

வடசென்னை தனுஷ் - சர்கார் விஜய்

  • kamadenu
  • Posted: 31 Oct, 2018 19:13 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

கடந்த சிலநாட்களாகவே, திரையுலகில் அடித்து வந்த புயல், ஒருவழியாக ஓய்ந்திருக்கிறது. வடசென்னையில் மையம் கொண்ட பிரச்சினை, சர்காரில் முட்டிக்கொண்டு ஒருவழியாக முடிவுக்கு வந்திருக்கிறது.

ஆனால் என்ன… வடசென்னைக்கு அப்படியொரு சிக்கலும் சர்காருக்கு இப்படியொரு சிக்கலும் வந்தது.

வடசென்னை படம், எடுத்துக்கொண்ட கதை, உருவாக்கிய விதம், நடிகர்களின் உழைப்பு என பிரமாண்டம் காட்டி வியக்கவைத்தது. படத்தில் எல்லோரின் உழைப்புக்குப் பின்னேயும் அப்படியொரு ஆத்மார்த்தம் இருந்தது. குறிப்பாக தனுஷ் நடிப்பில் மிரட்டியெடுத்தார். வெற்றிமாறன் தன் முத்திரையை ஆங்காங்கே பதித்து, அசத்தியெடுத்தார்.

ஆனாலும் படத்தில் ஆண்பெண் வித்தியாசமில்லாமல் சகட்டுமேனிக்கு எல்லோரும் கெட்டவார்த்தை பேசினார்கள். வடசென்னைக்காரர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்று சப்பைக்கட்டு சொல்லப்பட்டது. ஆனால், கெட்டவார்த்தைக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. குறிப்பாக வடசென்னைக்காரர்கள் கொந்தளித்தார்கள்.

போதாக்குறைக்கு, படகில் நடக்கும் முதலிரவுக்காட்சி, மீனவர்களைக் கொச்சப்படுத்துவதாக குரல் எழும்பியது.

இந்தநிலையில், இயக்குநர் வெற்றிமாறன், படகில் நடக்கும் முதலிரவுக்காட்சியையும் கெட்டவார்த்தைகளையும் நீக்குவதாகவும் யார் மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் சொல்லியிருந்தார்.

அதையடுத்து, காட்சிகளும் வசனங்களும் நீக்கப்பட்டன.

அப்பாடா என்று தமிழ் சினிமா ரசிகர்கள் மூச்சுவிட்டுக்கொண்ட நிலையில், அடுத்த குண்டு சர்காரில் இருந்து வெளிப்பட்டது.

வடசென்னைக்கு பிரச்சினை, படம் ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கும் போது வந்தது. சர்காருக்கோ, இன்னும் ரிலீசாகவே இல்லை எனும் நிலையில், பரபரப்பானது.

இது என்னுடைய செங்கோல் படத்தின் கதை. நான் இந்தக் கதையை பத்துவருடங்களுக்கு முன்பே தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்திருந்தேன் என்று வருண் ராஜேந்திரன் சொல்ல, சங்கத்தின் தலைவர் இயக்குநர் கே.பாக்யராஜ் மற்றும் குழுவினர், இருதரப்புக் கதைகளையும் படித்துப் பார்த்தனர். இறுதியில், ஆமாம், ஒரே கதைதான் என்றனர்.

ஆனால் சர்கார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இதை ஏற்கவில்லை. அவருக்கு வந்த சிந்தனை, எனக்கு வந்த சிந்தனை என்றெல்லாம் சொன்னார். எதுவாக இருந்தாலும் கோர்ட்டுக்குப் போவதாக இருந்தால், அங்கே பார்த்துக்கொள்கிறேன் என்றார்.

மேலும் மீடியாக்களில் கொந்தளித்தார். பாக்யராஜ் அப்படி இப்படி என்றார். விஷயம், சங்கத்தையும் மீறிப்போனது. கோர்ட் படியேறியது. ஆனால், அங்கே கோர்ட் படியேறிய சர்கார் பிரச்சினையின் போது, அப்படியே இறங்கிவந்தார் முருகதாஸ். நாங்கள் சமரசமாகப் பேசித் தீர்த்துக்கொள்கிறோம் என்று சொல்ல, கோர்ட் பிரச்சினை முடிவுக்கு வந்தது. அப்படியே, முக்கியமாக சர்கார் சிக்கலும் தீர்ந்தது.

கதைக்கு ஈடாக 30 லட்சமும் டைட்டிலில் ஏதோவொரு வகையில் கிரெடிட்டும் கொடுக்கவேண்டும் என வருண் ராஜேந்திரன் சொல்லியிருந்தார். ‘எது எப்படி இருந்தாலும், கதை, திரைக்கதை, இயக்கம் ஏ.ஆர்.முருகதாஸ்தான் என்றும் ஹேப்பி தீபாவளி என்றும் தம்ஸ் அப் விரல் காட்டிச் சிரித்தார் முருகதாஸ்.

விஜய் ரசிகர்கள்தான், ஒருவருக்கொருவர் தம்ஸ் அப் காட்டி குதூகலித்திருக்கிறார்கள். நவம்பர் 6க்கு, சர்காருக்கு… ஐ யம் வெயிட்டிங் என்று உற்சாகக் குரல் கொடுத்து, நகம் கடித்துக் காத்திருக்கிறார்கள்.

வடசென்னை அப்படின்னா, சர்கார் இப்படி. அதுவும் நம்ம வடசென்னை. இதுவும் நம்ம சர்கார்!

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close