[X] Close

சூரி, முனீஸ்காந்த், காளிவெங்கட், அப்புக்குட்டி போல ராட்சசன் வில்லன் சரவணனும் பேசப்படுவார் - விஷ்ணுவிஷால்


ratsasan-vishnuvishal

விஷ்ணுவிஷால் - நான் சரவணன்

  • kamadenu
  • Posted: 31 Oct, 2018 14:30 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

என்னுடன் நடித்த சூரி, முனீஸ்காந்த், காளிவெங்கட், அப்புக்குட்டி என பலரும் மிகப்பெரிய பேரையும் புகழையும் அடைந்திருக்கிறார்கள். அதேபோல், ராட்சசன் படத்தில் வில்லனாக நடித்த சரவணனும் மிகப்பெரிய புகழைப் பெறுவார் என்று விஷ்ணுவிஷால் பேசினார்.

இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், அமலாபால் முதலானோர் நடிப்பில் வெளியான படம் ராட்சசன். பட ரிலீஸான நாளில், திரையரங்குகளில், ஒரு காட்சி, இரண்டு காட்சி என ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் படம் பார்த்தவர்களின் பாராட்டு, படம் பார்ப்பதற்காக வந்த கூட்டம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டன. காட்சிகள் அதிகமாக்கப்பட்டன.

இரண்டு வாரங்களைக் கடந்தும் பல ஊர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்தப் படம். இந்த நிலையில், ராட்சசன் படத்தில் சைக்கோ வில்லனாக, கிறிஸ்டோபர் எனும் கேரக்டரில் நடித்தவர் யார் என்பது எல்லோரின் கேள்வியாகவும் இருந்தது. படக்குழுவினர், வில்லனை அறிமுகப்படுத்தும் விழாவை நடத்தினார்கள்.

இதில் கலந்துகொண்டு விஷ்ணு விஷால் பேசியதாவது:

ராட்சசன் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக்கிய மக்களுக்கு நன்றி. அதிலும் குறிப்பாக இயக்குநர் ராம்குமாருக்கு மிகச்சிறந்த படத்தைக் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால், அந்த வில்லன் கேரக்டர் நன்றாக இருக்கிறது. நான் நடிக்கிறேன் என்று சொன்னேன். அதற்கு பக்காவாக ஒரு ஆள் இருக்கிறார் என்றார் ராம்குமார். அவர் சொன்னதை விட பக்காவாக கிறிஸ்டோபர் என்ற கேரக்டரில் சைக்கோ கில்லர் வில்லனாக சரவணன் பிரமாதமான நடிப்பை வழங்கியிருந்தார். முகமே தெரியாத அளவுக்கு அப்படியொரு மேக்கப் போட்டுக்கொண்டு கஷ்டப்பட்டு நடித்தார். கிறிஸ்டோபர் கேரக்டர் மேஜிக் நிபுணர் என்பதால், அதற்காக மேஜிக் நுட்பங்களையும் கற்றுக்கொண்டார்.

அந்த க்ளைமாக்ஸ் காட்சி மறக்கவே முடியாது. அதைப் படமாக்கும்போது, ஏதோ திருப்தி இல்லாதது போல் இருந்தது. இயக்குநர், தயாரிப்பாளர், நான் என பேசினோம். ‘வில்லன் கேரக்டர் இன்னும் கொஞ்சம் மேஜிக்கெல்லாம் தெரிந்து நடித்தால், க்ளைமாக்ஸ் காட்சி மிரட்டலாக இருக்கும். எனவே ஒரு பத்துநாள் கழித்து படமாக்குவோம். உங்களுக்கு இதில் வருத்தம் என்றால், அப்போது எடுக்கும் செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று சொன்னேன். அதன்படியே படமாக்கினோம். சரவணனும் இன்னும் சில மேஜிக்குகளைக் கற்றுக்கொண்டு வந்து அசத்தினார்.

என் படங்களில் நடித்த சூரி, அப்புக்குட்டி, முனீஸ்காந்த், காளிவெங்கட் போல சரவணனும் மிகப்பெரிய புகழைப் பெறுவார்.

இவ்வாறு விஷ்ணு விஷால் பேசினார்.

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close