இளையராஜா தன் வழக்கு மூலம் புது டிரெண்டை உருவாக்குகிறார்... வழக்கறிஞர் அதிரடி!


வழக்கறிஞர் சரவணன்

தனது காப்புரிமை வழக்கு மூலம் இசையமைப்பாளர் இளையராஜா திரைத்துறையில் ஒரு புது டிரெண்டை உருவாக்கி இருக்கிறார் என இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணன் காமதேனு டிஜிட்டலுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

சமீபகாலமாக, தனது காப்புரிமை வழக்கிற்காக பேசுபொருளாகி இருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா. பொதுவெளியில் பலரும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்குத்தான் இசை சொந்தம் என வாதிட்டு வர, இணையவெளியில் இளையராஜாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல குரல்களைப் பார்க்க முடிகிறது. இதுபற்றி, இளையராஜாவின் வழக்கறிஞர் சரவணனிடம் காமதேனு டிஜிட்டலுக்காகப் பேசினோம்.

“2012ல் வந்த இந்திய காப்புரிமை சட்டமானது படைப்பாளிகளுக்கு இதற்கு முன்னால் இல்லாத பல உரிமைகளை கொடுக்கிறது. ஒரு படம் என்று வரும்போது தயாரிப்பாளர்தான் காசு கொடுத்து படத்தை உருவாக்குகிறார். அவரிடம் எல்லா உரிமையும் இருக்கும்.

ஆனால், படத்தின் இசை என்று வரும்போது சினிமோட்டோகிராஃப் ஃபிலிம் என்று அதற்குத் தனியாக காப்புரிமை இருக்கிறது. இது இசையையும் பாடல்களையும் உள்ளடக்கியது. இதன் உரிமை இசையமைப்பாளரிடம்தான் இருக்கும் என அந்தச் சட்டம் சொல்கிறது.

இப்போது எங்கே பிரச்சினை வருகிறது என்றால், இந்தப் படத்தின் உரிமையை கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்குகிறார்கள். அவர்கள் படத்தோடு இசையை பயன்படுத்தினால் பிரச்சினை இல்லை. ஆனால், பாடல்களை தனியாகப் பிரித்து யூடியூப், ஸ்பாட்டிஃபை போன்றவற்றில் பயன்படுத்தும்போதுதான் பிரச்சினை வருகிறது. இதுதான் வழக்கின் முக்கிய அம்சம்” என்றார் சரவணன்.

இளையராஜா.

மேலும், “இது அவருக்கானது மட்டுமல்ல! ஒவ்வொரு படைப்பாளிகளுக்குமானது. இளையராஜாவே குரல் கொடுக்கவில்லை என்றால் வேறு யார் பேசுவார்கள்? இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்றுதான் அவர் போராடுகிறார்.

இதன் மூலம் அவர் ஒரு புது டிரெண்டை உருவாக்கியுள்ளார்” என்றவரிடம் இளையராஜா கலைத்துறை சார்பாக எம்பி-யாக இருந்து ஏன் நாடாளுமன்றத்தில் இதற்காக குரல் எழுப்பவில்லை என்று கேட்டோம். “இது அவரின் தனிப்பட்ட பிரச்சினை. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேச என்ன இருக்கிறது?” என்றார் அவர்.

x