[X] Close

தப்புத்தாளங்கள் – அப்பவே அப்படி கதை


thapputhaalangal-appave-appadi-kadhai

தப்புத்தாளங்கள்

  • வி.ராம்ஜி
  • Posted: 30 Oct, 2018 19:48 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

தப்புத்தாளங்களுக்கு வயசு 40

வார்த்தைக்குத் தக்க தாளமும் தாளத்துக்கு இணையான வார்த்தைகளும் கொண்டு ராககீதம் இசைக்கும்போதுதான், அதுவொரு தனி சுகம். பரமசுகம். ஆனந்தம். பேரானந்தம். ஆனால், தப்புத்தப்பான தாளங்கள் கொண்டது வெறும் இசையாக இல்லாமல், வாழ்க்கையாக இருந்தால்… அங்கே என்னென்ன சோகங்கள், துயரங்கள், வேதனைகள், வலிகள். சகலத்தையும் ஒன்றிணைத்து நம்மை உலுக்கியெடுத்ததுதான் தப்புத்தாளங்கள்.

1978ம் ஆண்டு, அக்டோபர் 30ம் தேதி ரிலீசானது தப்புத்தாளங்கள். இன்றுடன் நாற்பது வருடங்களாகிவிட்டன. ஆமாம், இன்று தப்புத்தாளங்களுக்கு வயசு 40.

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் சிகரங்களில் இதுவும் ஒன்று. எடுத்துக்கொள்ள அஞ்சுகிற கதைக்களம். சொல்லப்பட்ட விதத்தில் பொளேர் ரகம். இந்தநாள் வரைக்கும், இப்படியொரு கதையைத் துணிச்சலாகத் தொட எவரும் முன்வரவில்லை.

விபச்சார புரோக்கரில் இருந்து ஆரம்பிக்கும் கதை. அவன் கிராக்கி பிடித்து கொண்டுபோய் விடும் இடம் சரிதாவின் வீடு. அவளின் பெயர் சரசு. அதேஊரில் சோமன் என்பவன். பெண்கள், போகத்துக்கு என திரிபவன். அலுக்கும் வரை வீட்டில் வைத்து உல்லாசமாக இருப்பான். சலித்துவிட்டால், அவளுக்கு பணமெல்லாம் கொடுத்து, அனுப்பிவிடுவான். அப்படி அனுப்புவதாக இருந்தால், அங்கே இன்னொருத்தி வந்திருக்கிறாள் என்று அர்த்தம். சரிதாவின் முதல் படம் இது. 

அவனை அடிக்கணும், இவனை உதைக்கணும். அந்தக் கூட்டத்தைக் கலைக்கணும். சோடாபாட்டில் வீசணும் என எதுவாக இருந்தாலும் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ரேட் வைத்திருப்பவன் தேவு. முறுக்கு மீசையும் சைக்கிள் செயினுமாக வலம் வருபவன். தேவுதான் ரஜினி. அந்த புரோக்கர், அந்த விபச்சார சரசு, போகத்துக்கு பெண்களைப் பயன்படுத்தும் சோமன், அடித்து உதைத்து காசு பார்க்கும் தேவு… இவர்களே தப்புத்தாளங்கள்.

தேவுவும் சோமனும் ஒருவகையில் சகோதரர்கள்தான். பல ஆண்களுக்குப் பிறந்தவன் தேவு. அவனின் அம்மா திருந்தி ஒருவனுடன் வாழ, அடுத்ததாகப் பிறக்கிறான் சோமன். அதனால் இருவரும் கிழக்கு மேற்கு. எலிபூனை. கீரிபாம்பு. சொல்லப்போனால், தேவுவை ஒருவிதமாகவும் சோமனை ஒருவிதமாகவும் வீடு நடத்தியதால்தான் இப்படியாக ரவுடியாக மாறினான் தேவு.

போலீஸ் துரத்த தேவு ஓடிவந்து ஒளியும் இடம் சரசுவின் வீடு. அப்படித்தான் அறிமுகமாகிறார்கள் பரஸ்பரம். வந்த வீடு எதுவென்று அவனுக்குத் தெரிகிறது. அவன் யார் என்பது அவளுக்குப் புரிகிறது. அங்கே சின்னதான நட்பொன்று முளைவிட, அது கொஞ்சம்கொஞ்சமாக வளர்ந்து, ஒருகட்டத்தில், ‘இந்தத் தொழிலே வேணாமே’ என்கிற முடிவுக்கு இருவருமே வருகிறார்கள்.

விபச்சாரத்தை விடச் சொல்கிறான் அவன். அடிதடியை விடு என்கிறாள் அவள். இருவரும் தப்பில் இருந்து விலகுகிறார்கள். சேர்ந்து ஒருநல்வாழ்வுக்கான பாதையைத் தேடுகிறார்கள். ஆனால் நல்லவர்களை இந்தச் சமூகம் வாழவிடுவதில்லை. குறிப்பாக, திருந்தியவர்களை வாழவேவிடுவதில்லை. இந்தச் சமூகத்தின் தப்புத்தாளங்கள் இவை. இதைத்தான், இந்தச் சமூகத்தைத்தான் பொளேர், சுளீர், பளீரென சொல்லியிருப்பார் கே.பாலசந்தர்.

முதல் சந்திப்பிலும் அடுத்த சந்திப்பிலும் இருமிக்கொண்டிருப்பார் சரிதா. ஏன் இருமிக்கிட்டே இருக்கே என்று கேட்பார் ரஜினி. இங்கே வர்றவங்க காசை மட்டும் கொடுத்துட்டுப் போறதில்லை. வியாதியையும்தான்’ என்று சொல்லிமுடிக்கும் முன்பே, இருமுவாள். மிச்சத்தை இருமிக்கொண்டே முடிப்பார். தியேட்டரில் படம் பார்க்கப் போயிருக்கும் ரஜினி, இருமல் மருந்து விளம்பரம் பார்க்க, சட்டென்று சரிதாவின் நினைவு வரும். உடனே மருந்துடன் சரிதா வீட்டுக்கு வருவார். நெகிழ்ந்து போவார் சரிதா.

விலைமகள் சரிதாவின் வீட்டின் கண்ணாடியில், மீண்டும் வருக என்று எழுதப்பட்டிருக்கும். என்ன இது என்பார். சொல்லுவார். பிறகு திருந்தியதும் அதை அழித்துவிடுவார். இருவரும் புரிந்துகொண்டு உடலால் இணையும் தருணம்… சட்டென்று எழுந்த சரிதா, ஒருநிமிஷம் என்று உள்ளேபோவார். டம்ளர் தண்ணீரை எடுப்பார். மாத்திரையை எடுப்பார். அது கரு உண்டாகாமல் இருப்பதற்கான மாத்திரை. ஒவ்வொரு இரவுகளிலும் அவள் விழுங்குகிற மாத்திரை. பழக்கதோஷத்தில் மாத்திரையைச் சாப்பிடப் போனவள், சட்டென்று உணர்ந்து, மாத்திரையைச் சாப்பிடாமல் தேவுடன் கூடுவாள் சரசு.

அந்த சரசுவின் வீடு முழுக்க, திரும்பிய இடமெல்லாம் விதம்விதமான குழந்தைப் படங்கள். ஒரு சராசரி வாழ்வுக்கு ஏங்குகிற உள்மனசின் வலியை, வசனமே இல்லாமல் நமக்கு உணர்த்திக்கொண்டே இருப்பார் கே.பி. 

குளித்துக்கொண்டிருக்கும் சரசு, ‘அடுப்புல பால் வைச்சிருக்கேன். பொங்கியிருக்கும். இறக்கிவைச்சிரு’ என்று அழைப்பார். தேவு பாலை இறக்கிவைத்துவிட்டு, திரும்புவார். அங்கே வெற்றுடம்புடன் குளித்துக்கொண்டிருப்பார் சரசு. வெட்கத்தில் திரும்பிக்கொள்ளும் தேவு, ‘சரசு, முதல்ல நீ வெட்கப்படக் கத்துக்கணும்’ என்பார். படம் பார்ப்பவர்களை ஒருநிமிடம் என்னவோ செய்யும் உயிர்ப்பான காட்சி அது.

பணம் மட்டும் இருந்துருச்சுன்னா, தப்பே பண்ணாம வாழலாம். பணக்காரப் பொம்பளைங்க மாதிரி… என்பார் சரசு. விழுந்துவிழுந்து சிரிப்பார் தேவு. ‘ஒருத்தன் காசு கொடுத்து அடிக்கச் சொன்னேன். வீடு புகுந்து அடிக்கப் போனேன். அங்கே செம அடி அவனுக்கு. ஆனா ஒருகட்டத்துல என்னை மடக்கிப் போட்டு கட்டிப்போட்டுட்டான். போலீசுக்கு போன் பண்றேன்னான். உடனே அந்தப் பொம்பள, அவனை தனியாக் கூப்பிட்ட்டா. ‘யாருக்கும் தெரியாம வந்தது அவன் மட்டுமில்ல, நீயும்தான். போலீஸு அதுன்னு போனா, ஊருக்கே தெரிஞ்சிரும்’னு சொன்னா’ என்று சரசுவிடம் சொல்ல, இருவருமே சிரிப்பார்கள்.

அதேபோல, சரசு தனக்கு நேர்ந்த அனுபவம் சொல்லுவாள். ‘ஒருத்தன் வந்தான். எல்லாம் முடிஞ்சு வெளியேபோகும் போது இன்னொருத்தன் வந்தான். ரெண்டுபேரும் பாத்துக்கிட்டாங்க. பயங்கர சண்டை. ஏன் தெரியுமா. அந்த ரெண்டுபேரும் அப்பாவும் பையனும். இதுல என்ன கூத்து தெரியுமா. இங்கே வந்ததுக்காக சண்டை இல்ல. அப்பாவை விட பையன் அஞ்சு ரூபா கூடுதலாக் கொடுத்துட்டதுக்காக சண்டை’… இப்படி படம் நெடுக, சமூகத்தின் மீது சாட்டை சுழற்றி விளாசிக்கொண்டே இருப்பார் பாலசந்தர்.

அந்த புரோக்கரின் மனைவி உடம்புமுடியாமல் படுத்திருப்பாள். ஏன் லேட்டுன்னு கேட்பார். அந்த ராயப்பேட்டை கோமளாவுக்கு உடம்பு முடியல. அதான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போயிட்டு வந்தேன்’ என்பார். ‘எனக்கு உடம்பு முடியல. கூட்டிட்டுப் போகலாம்ல’ என்பார். ‘நீயும் அவளும் ஒண்ணா. அவதான் தொழிலு. மூலதனம். இது குடும்பம்’ என்பார். கல்லூரியில் படிக்கும் மகளிடம் கறாராக நடப்பார். ஆனால், அந்தப் பெண், வேறொரு புரோக்கர் மூலமாக, இந்தத் தொழிலில் இருப்பதைப் பார்த்து நொறுங்கிப் போய்விடுவார். மானம், கெளரவம் பெரிதென உணரும் தருணம் உலுக்கிவிடும் நம்மை!

’தொழில்’ செய்யும்போது கோயில் வாசலில் இருக்கிற பிச்சைக்காரர்களுக்கு வரிசையாகக் காசு போடுவார் சரிதா. மகாலக்ஷ்மி என்று வாயாரப் புகழ்வார்கள். திருந்திய பிறகு காசில்லை. காசு போடாதவளைப் பார்த்து மூதேவி என்பார்கள். அந்த் தொழில் செய்யும் மகாலக்ஷ்மி என்றார்கள். திருந்தி வாழும் போது மூதேவி என்கிறார்கள் என்று திரையில் வசன அட்டை வரும். இப்படி பல இடங்களில் வசன அட்டைகள் வந்து அதகளம் பண்ணும்.

விலைமகளின் வீட்டு வாசலில் அடிக்கப்படும் சைக்கிள் பெல், வாசலில் ‘ஜாக்கிரதை, நாய் கடிக்காது’ எனும் வாசகம், ரஜினி போடும் மூக்குப்பொடி, கிழிந்த உள்பாவாடையைக் கண்டு பதறிய ரஜினி, ஓடிச்சென்று புதுப்பாவாடை வாங்கி வரும் அன்பு, நடுவீட்டில் புல்லட்டை ஓட்டிக்கொண்டே பேசுகிற சோமன், ‘ஏய் இவளே’ என பெண்களைக் கூப்பிடுகிற ஆணாதிக்க வெறி… என்று கே.பி.டச்கள், 78ல் படம் பார்த்தவர்களை மிரட்டியெடுத்தது. உலுக்கிப் போட்டது.

பார்த்தவர்கள் நல்ல படம் என்று சொன்னார்கள். ஆனால் படம் பார்க்க பெரும்பான்மையானவர்கள் வரவில்லை என்பது இன்னொரு சோகம். சமூக சோகம். கண்ணதாசனின் தப்புத்தாளங்கள், வழி தவறிய பாதங்கள், என்னடா பொல்லாத வாழ்க்கை என்று பாடல்களெல்லாம் ஹிட், விஜயபாஸ்கரின் இசை, கதையின் கனம் உணர்த்தும்.

1978ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 30ம் தேதி தீபாவளித் திருநாளில் வெளிவந்த அணுகுண்டு தப்புத்தாளங்கள். அந்தப் படம் வெளியாகி, இன்றுடன் நாற்பது வருடங்களாகிவிட்டன. இப்படியொரு படம் இனியும் வர, இன்னும் எத்தனைக் காலமாகுமோ?

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close