'உறியடி' புகழ் விஜய்குமார் நடிக்கும் 'எலக்சன்' திரைப்படம் வரும் மே 17ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
'உறியடி', 'உறியடி 2', 'ஃபைட் கிளப்' படங்களை தொடர்ந்து, நடிகர் விஜய்குமார் 'எலக்சன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை 'சேத்துமான்' இயக்குநர் தமிழ் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய்குமார் உடன் 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி, இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்துள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. படத்தில் இடம்பெற்ற 'எலக்சன்' தொடர்பான பாடலும், பாடலுக்கான வீடியோவும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தப் பாடல் மக்களவைத் தேர்தல் கால தருணத்தில் வெளியிடப்பட்டதாலும், இப்படத்தின் மையக்கருவை பிரதிபலிக்கும் வகையில் பாடல் இடம் பெற்றதாலும், வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. வரும் மே மாதம் 17ஆம் தேதியன்று இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.