புதுமுக இயக்குநர்களை காலி செய்யும் மாஸ் ஹீரோக்கள்... நடிகர் ராஜ்கபூர் பகீர் குற்றச்சாட்டு!


நடிகர் ராஜ்கபூர்

”மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் கஷ்டப்பட்டு படம் எடுத்து வெற்றிபெறுகிறார்கள். அவர்களை தங்களது அடுத்தப் படத்தில் கமிட் செய்து பெரிய ஹீரோக்கள் காலி செய்கிறார்கள்” என்று நடிகர் ராஜ்கபூர் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

'அவள் வருவாளா’, ‘ஆனந்த பூங்காற்றே’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராஜ்கபூர். இயக்குநராக மட்டுமல்லாது, பல படங்களிலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருப்பார். இந்த நிலையில், “ நல்ல படங்கள் எடுக்கும் புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கிறேன் என்ற பெயரில் பெரிய ஹீரோக்கள் அவர்களது வாழ்க்கையை காலி செய்து விடுகிறார்கள்” என வெளிப்படையாக பேசி பகீர் கிளப்பி இருக்கிறார் ராஜ்கபூர்.

சந்தோஷ் நம்பி ராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘உழைப்பாளர் தினம்’ இசை வெளியீட்டு விழாவில்தான் இப்படிப் பேசி இருக்கிறார் ராஜ்கபூர். அவர் அந்த மேடையில், “மாரி செல்வராஜ் போன்ற இயக்குநர்கள் கஷ்டப்பட்டு சினிமாவில் படம் எடுத்து ஜெயிக்கிறார்கள். ஆனால், அதற்கடுத்து அவர்கள் வளர்வது தான் இங்கு பெரிய போராட்டம்.

அவர்கள் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் பெரிய ஹீரோக்கள் உறுதியாக இருக்கிறார்கள். முதல் படத்தில் அவர்கள் ஜெயித்ததும் அந்த இயக்குநர்களை கூப்பிட்டு பெரிய சம்பளம் நிர்ணயித்து படம் இயக்கச் சொல்கிறார்கள். அதன் பிறகு நடப்பதை நான் சொல்ல வேண்டியதில்லை; அது உங்களுக்கே தெரியும். இதுதான் உண்மை” என்றார் ராஜ்கபூர்.

மாரி செல்வராஜ் ‘பரியேறும் பெருமாள்’ படத்திற்குப் பிறகு ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ ஆகிய படங்களை இயக்கினார். அதனால் ’தனுஷ், உதயநிதியைத் தான் ராஜ்கபூர் இப்படி மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறாரா?’ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது, ’நெல்சனுக்கு ‘பீஸ்ட்’, ‘ஜெயிலர்’, இயக்குநர் பா. இரஞ்சித்துக்கு ‘கபாலி’, ‘காலா’, அட்லிக்கு ‘ஜவான்’ எனப் பெரிய ஹீரோக்கள் வாய்ப்புக் கொடுத்ததால்தான் அவர்கள் இன்று முன்னணி இயக்குநர்களாக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ராஜ்கபூர் பேசுவது சரியல்ல’ என்றும் ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

x