[X] Close

’சர்கார்’ படத்தையும் பார்க்காமல், முழு ஸ்க்ரிப்டையும் படிக்காமல் இப்படி சொல்லலாமா? அறிக்கை விடலாமா? - கே.பாக்யராஜுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் சரமாரி கேள்வி


armurugadoss-speech-about-sarkar-issue

  • kamadenu
  • Posted: 27 Oct, 2018 20:10 pm
  • அ+ அ-

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கி யுள்ள ‘சர்கார்’ திரைப்படம், பெரும் எதிர் பார்ப்புக்கிடையில், தீபாவளி அன்று திரைக்கு வர உள்ளது. இதன் இசை வெளி யீட்டு விழாவில், முதல்வர் குறித்து விஜய் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. அதற்கு அமைச்சர்கள் பலரும் பதில் அளித்தனர்.

வரும் நவம்பர் 6-ம் தேதி வெளியிடப்பட உள்ள நிலையில், ‘சர்கார்’ திரைப்படம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. தனது கதையைத் திருடி ‘சர்கார்’ படத்துக்கு பயன்படுத்தியதாக வருண் என்கிற ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இப்படத்தின் கதையும், ‘செங்கோல்’ கதையும் ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் எழுதிய கடிதம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கூட்டியது. இது தொடர்பாக கே.பாக்யராஜிடம் கேட்ட போது, “அது உண்மைத்தான். நான் எழுதிய கடிதம் தான்” என்று தெரிவித்தார்.

கே.பாக்யராஜின் கடிதம் தொடர்பாக, இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது:

இந்த விஷயம் மிகவும் ஒருதலைபட்சமாக விசாரிக்கப்பட்டுள்ளது. எனது கதையை அவர்கள் முழுதாகப் படிக்கவேயில்லை. அவர்கள் படித்தது சாரம்சம் (synopsis) மட்டுமே. முழு ஸ்க்ரிப்டை பாக்யராஜ் அவர்கள் படித்தாரா இல்லையா என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லவேண்டும். 

எனது முழு ஸ்க்ரிப்டை நான் இன்னும் சங்கத்தில் ஒப்படைக்கவும் இல்லை. அதை படித்த பின் தான் அதுவும் இதுவும் ஒரே கதை என்று சொல்ல முடியும். அல்லது எனது படத்தையாவது பார்த்திருக்க வேண்டும். நான் அவர்களுக்கு படத்தைக் காட்டத் தயார் என்று சொல்லியும் அவர்கள் பார்க்கவில்லை. படத்தையும் பார்க்காமல், முழு ஸ்க்ரிப்டையும் படிக்காமல் இப்படி சொல்லலாமா? அறிக்கை விடலாமா? எனக்கு பெரிய தண்டனையைக்  கொடுத்துவிட்டார்கள். 

இன்னைக்கு நடக்கவிருக்கும் அரசியல், சமூக நிகழ்வுகளை வைத்து நான் ஒரு படமாக எடுத்திருக்கிறேன். 11 வருடங்களுக்கு முன்னால் இதே நிகழ்வுகளை வைத்து எப்படி எழுதியிருக்க முடியும்? இரண்டு கதைகளுக்கும் ஒரே ஒற்றுமை நாயகனின் ஓட்டை வேறொருவர் கள்ள ஓட்டு போடுவது மட்டுமே. இந்த ஒரு விஷயம் மட்டும் எப்படி முழு கதையாகும்.

நடிகர் சிவாஜி கணேசனின் ஓட்டு கள்ள ஓட்டாக போடப்பட்டது. நடிகர் கமல்ஹாசனின் பெயரே வாக்காளர் பட்டியலில் இல்லை. நமது ஊரில் இந்த இரண்டு நிகழ்வுகளுமே சகஜம். இந்த மாதிரியான கதையில், நாயகனின் ஓட்டைக் கள்ள ஓட்டு போட்டுவிட்டார்கள் என்றவுடன் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? அவர் பெரிய பாடகராகிவிட்டார், குத்துச்சண்டை வீரர் ஆகிவிட்டார் என்றா போகும்? எப்படியும் அடுத்து நாயகன் அரசியலுக்கு வருகிறார் என்பதுதானே கதையாக இருக்கும். மேலும் உறுப்பினர்களில் 6 பேர் ரெண்டும் வெவ்வேறு கதை என்று சொல்லியிருக்கிறார்கள். 5 பேர் ஒரே கதை என்றிருக்கிறார்கள். இரண்டு பேர் கருத்து சொல்லவில்லை. பின் எப்படி இது பெரும்பான்மையினரின் கருத்தாக முடியும்?. அதே போல, பாக்யராஜ் அறிக்கை வெளியிடுவதற்கு முன் மற்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தாரா, படித்துக் காட்டினாரா? இல்லை. தனிப்பட்ட முறையில் வெளியிட்டுள்ளார். 

எனக்கு மிகப்பெரிய மனவேதனையை தந்துவிட்டனர். பாக்யராஜ் அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில், இரண்டு கதைக்கும் ஒரே பொறி தான் என்று சொல்லியிருக்கிறார். ஒரு பொறியிலிருந்துதானே நெருப்பு பற்றுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். இரண்டும் வேறு வேறு ட்ரீட்மெண்ட் என்றும் சொல்லியிருக்கிறார். அவரே இப்படி சொல்லிவிட்டு, பிறகு அவசரமாக அவரே இரண்டும் ஒரே கதைதான் என்று ஏன் சொல்ல வேண்டும்? 

வருண் என்பவரை நான் சந்தித்தேயில்லை. அவருக்கு என்ன வயது, எப்படி இருப்பார் என்றே எனக்குத் தெரியாது. அவர் சொல்வது, 17 வருடங்களுக்கு முன் பதிவு செய்த கதை இது (செங்கோல்). சூரியகிரண் என்பவரது வீட்டுக்கு வந்த ஸ்டில்ஸ் விஜய் என்பவரிடம் வருண் கதையை சொன்னாராம். ஸ்டில்ஸ் விஜய் என் படங்களில் பணியாற்றியவராம். அதனால் ஸ்டில்ஸ் விஜய் என்னிடம் அந்தக் கதையை சொல்லிவிட்டார் என்று வருண் குற்றம்சாட்டியுள்ளார். நான் ஸ்டில்ஸ் விஜய்யையும் சந்தித்ததில்லை. புகைப்படக் கலைஞரிடம் யாராவது கதை பற்றி விவாதிப்பார்களா?

இதில், ஸ்டில்ஸ் விஜய் என்ற நபரையாவது கூப்பிட்டு சங்கத்தில் விசாரித்தார்களா என்றால் அதுவும் இல்லை. ஏன் அது நடக்கவில்லை? இது என்ன நியாயம்? அவரிடம் தொலைப்பேசியில் பேசிவிட்டோம் என்கிறார்கள். அது போதுமா?

இதில் சூரிய கிரண் என்பவர் கே.பாக்யராஜ் அவர்களின் மௌன கீதங்கள் படத்தில் அவரின் மகனாக நடித்தவர். வருணும் 10-15 வருடங்களுக்கு முன் பாக்யராஜுடன் ஒரு தொடரில் வேலை செய்தவர். இதை வைத்துப் பார்க்கும்போது எனக்கு  சந்தேகம் வருகிறது.

'கோபுரங்கள் சாய்வதில்லை' படத்தின் கதையும், அதற்கு பின் வெளியான 'சின்ன வீடு' படத்தின் கதையும் கிட்டத்தட்ட ஒன்று தான். அது மட்டும் ஒரே மாதிரியான சிந்தனை என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் எல்லோரும் விவாதிக்கும் கள்ள ஓட்டு என்ற ஒன்றை வைத்து நான் கதை எழுதினால் அது திருட்டு என்கிறார்கள். இது என்ன நியாயம்?

இருதரப்பும் சமாதானம் செய்து கொள்ளுங்கள். இவ்வளவு பணம் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னார்கள். நான் முடியாது என்று சொல்லிவிட்டேன். ஏனென்றால் என் தரப்பில் உண்மை இருக்கிறது. நியாயம் இருக்கிறது. இது முழுக்க முழுக்க என் உழைப்பு, என் குழுவின் உழைப்பு. எழுத்தாளர் ஜெயமோகன் இதில் வேலை செய்திருக்கிறார். எனக்கு வெறுத்துப் போய்விட்டது. சினிமாவை விட்டே போய்விடலாம் என்ற எண்ணம் கூட வந்தது. ஆனால் என் நண்பர்கள் என்னை ஊக்குவிக்கின்றனர்.போராட தைரியம் கொடுக்கின்றனர்.

நடிகர் விஜய் அவர்களிடம் இந்த பிரச்சினை குறித்து நான் பேசவில்லை. என் பிரச்சினைகள் குறித்து பொதுவாக நான் யாரிடம் பேசுவதும் இல்லை. 

இவ்வாறு ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close