[X] Close

பட்டையைக் கிளப்பும் பாலிவுட் திரைப்படம்: மும்பை திரைவிழாவில் எழுந்துநின்று கைதட்டிய ரசிகர்கள்


mumbai-film-festival-opening-movie

'மார்டு கோ டார்டு நாஹி ஹோட்டா' பாலிவுட் திரைப்படத்தில் ஒரு காட்சி

  • பால்நிலவன்
  • Posted: 27 Oct, 2018 13:22 pm
  • அ+ அ-

மும்பை திரைவிழா இந்தமுறை களைகட்டிவிட்டது. தொடக்கவிழா பிரீமியர் ஷோவாக திரையிடப்பட்ட ''மார்டு கோ டார்டு நாஹி ஹோட்டா'' (Mard Ko Dard NahiHota) பாலிவுட் திரைப்படத்திற்கு எழுந்து நின்று ஆரவாரித்து ரசிகர்கள் அளித்த வரவேற்பே அதை எடுத்துக்காட்டியுள்ளது.

மும்பை, ஒவ்வொரு வருடமும் அக்டோபரில் சர்வதேச திரைப்பட விழாவினால் மிளிரத் தொடங்கிவிடும். இந்த ஆண்டும் நேற்றுமுன்தினம் (25 அக்டோபர் / வியாழன்)மாலையே விழா ஒரு திறந்தவெளி அரங்கில் வண்ணமயமாக தொடங்கியது. 

திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் பாலிவுட் முன்னணி நட்சத்திரங்கள் தோன்றினர். மீடூவின் ஆழ்ந்த ஒரு கூட்டுமனநிலையில் நாம் இருக்கிறோம். எனவேஅவ்வியக்கத்தோடு நாமும் ஒன்றிணைந்து இத்திரைவிழாவை தொடங்குவோம் என திரைப்படவிழா இயக்குநர் அனுபமா சோப்ரா தெரிவித்தார்.

திரைவிழாவின் தொடக்கப் படமான ''மார்டு கோ டார்டு நாஹி ஹோட்டா'' திரைப்படம் ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியது. திரைவிழாவின் முதல்நாளிலேயேஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை இப்படம் தந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

இத்திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் ரோன்னி ஸ்க்ரேவ்வாலா தெரிவிக்கையில், ''முதலில் இப்படத்தின் கதையை கேட்ட உடனே நான் அசந்துவிட்டேன். இத்திரைப்படம்எந்த ரசிகரையும் கட்டி இழுக்கக்கூடியது என்பது எனக்குத் தெரியும். நவம்பரில் இப்படத்தை வெளியிட நாங்கள் திட்டமிட்டிருந்தோம். ஆனால் இப்போது  கிடைத்துள்ள வரவேற்பைப் பார்த்ததும், நாங்கள் அடுத்த ஆண்டில் திரையிடலாம் என்று தோன்றுகிறது.'' என்றார்.

ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருந்த இப்படத்தின் நாயகனாக தோன்றியுள்ள அபிமன்யூ தஸாணி தெரிவிக்கையில், இயக்குநர் வாசன் பாலா இப்படத்தின் கதையை முதன்முதல் சொன்னபோதே நான் ஒரு கணம் மிரண்டுபோனேன். நிச்சயம் அவர் இயக்கும் இத்திரைப்படத்தின் முக்கிய பங்கை அளிப்பதற்கு கடுமையான
அர்ப்பணிப்பை தந்தேயாகவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்'' என்று புன்னகை கலையாமல் பேசினார்.

இப்படத்தில் நடித்துள்ள அபிமன்யூவைச் சுற்றியே ஒரு இளைஞனின் கதையாக இப்படம் விரிகிறது. எதிரிகளை அழிக்கும் அவரது வேட்டை ரசிகர்களுக்கு நகைச்சுவை விருந்தாக அமைந்துவிட்டது. அபிமன்யூ, பாலிவுட்டில் 89ல் வெளிவந்த வெற்றிப்படமான ''மைனே ப்யார் கியா'' நாயகி பாக்யஸ்ரீயின் மகன்.

'மார்டு கோ டார்டு நாஹி ஹோட்டா'' திரைப்படத்தில் அபிமன்யூ தஸாணி, ராதிகா மதன், குல்ஷான் தேவ்வய்யா, மஹேஷ் மஞ்சுரேக்கர் மற்றும் ஜிமித் திரிவேதி நடித்துள்ள இத்திரைப்படம் டொராண்டோ திரைப்படவிழாவில் மிகப்பெரிய வெற்றி கிடைத்த பிறகு இன்னும் சில நாடுகளிலும் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள டிரெயிலரைப் பாருங்கள்... திரைவிழா கைதட்டி வரவேற்றதன் காரணம் புரியும்............

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close