வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, ஆனால், மக்கள் மனதில் என்றும் நிற்பவர் விஜயகாந்த் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
நடிகர் விஜயகாந்த் நேற்று காலை உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் பொதுமக்களும், அரசியல் பிரபலங்களும், திரைப்பிரபலங்களும் அவரது மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்துடன் நல்ல நட்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் அவரது மறைவுக்காக தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்டார்.
இன்று காலை அவர் சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி விட்டு அவரது குடும்பத்திற்கு ஆறுதல் சொன்னார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “விஜயகாந்த் உடன் நிறைய நினைவுகள் எனக்கு உள்ளது. சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அப்போது விஜயகாந்த் வந்து அதை எல்லாம் சரிசெய்தார். அந்த சமயத்தில் அவர் செய்த உதவி என் குடும்பம் மறக்க முடியாதது.
அதேபோல, நட்சத்திர கலைவிழாவுக்குச் சென்ற போதும் ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து என்னைப் பத்திரமாக கூட்டிச் சென்றவர் விஜயகாந்த். அவர் இழப்பு யாராலும் ஈடுசெய்ய முடியாதது.
கேப்டன் என்ற பெயர் அவருக்குப் பொருத்தமானது. கடைசியாக அவரைப் பார்த்த போது மனதுக்கு வருத்தமாக இருந்தது. மக்களை மகிழ்வித்து கேப்டனாக அவர் நம்மை விட்டு மறைந்து விட்டார். வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி. ஆனால், மக்கள் மனதில் நிற்பவர் யார்? விஜயகாந்த்தான்” என கண்ணீர் மல்க ரஜினிகாந்த் பேசினார்.