[X] Close

அந்த 7 நாட்கள்… 37 ஆண்டுகள்!


andha-7-naatkal-37-years

அந்த 7 நாட்கள்

  • kamadenu
  • Posted: 26 Oct, 2018 19:48 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

டைட்டிலில் அப்போதெல்லாம் நடிகர்களின் பெயர் போட்டதும் கைத்தட்டி ஆர்ப்பரித்து, விசிலடித்து. குதூகலத்துடன் கொண்டாட்டமாக வரவேற்பார்கள். பிறகு அமைதியாகிவிடுவார்கள். அடுத்து, நாயகனை திரையில் காட்டுகிற முதல் காட்சிக்காக தவமிருப்பார்கள். அப்போது மீண்டும் கைத்தட்டல், விசில், ஆர்ப்பரிப்பு, கொண்டாட்டம், குதூகலம். ஸ்ரீதருக்குப் பிறகு இயக்குநரின் பெயரை உன்னிப்பாக கவனித்த தமிழ் சினிமா ரசிகர்கள், கே.பாலசந்தருக்கு கைத்தட்டத் தொடங்கினார்கள். அதன் பிறகு பாரதிராஜாவுக்கு அவை கிடைத்தன. ஆனால், ஆண்பெண் வித்தியாசமில்லாமல், எல்லோரும் ஏகோபித்து, மிகப்பெரிய அலப்பறையைக் கொடுத்து வரவேற்றார்கள் என்றால், அப்போது அவருக்குத்தான் அவை மொத்தமும் கிடைத்தன. அவர்… கே.பாக்யராஜ்.

சுவரில்லாத சித்திரங்களில் கவனம் ஈர்த்தார். ஒருகை ஓசையில் இன்னும் கவனித்தார்கள். அடுத்து வந்த மெளனகீதங்களை, படம் ரீலீசான காலத்தில், பெண்கள் எட்டுப்பத்து தடவை பார்த்தார்கள். அடுத்து வந்த இன்று போய் நாளை வா, இன்றைக்கும் ஆல்டைம் பேவரைட். இதன் பிறகு விடியும் வரை காத்திரு படத்தின் வில்லனிக் ஹீரோவை, மனைவியையே சொத்துக்காக கொலை செய்யும் பாக்யராஜை ஏற்கவில்லை. படம் சுமாராகத்தான் போனது. ஆனால் மக்கள் மனங்களில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார் பாக்யராஜ்.

இதன் பிறகு அவர் எடுத்த படம்தான்… பாக்யராஜ் எனும் இயக்குநரை மிக உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியது. பாக்யராஜ் எனும் நடிகனின் குசும்புக் குறும்புகளையும் அப்பாவித்தனங்களையும் ஹீரோயிஸமாக ஏற்றுக்கொண்டது. அதுதான் அந்த 7 நாட்கள்.

‘என்னுடைய காதலி உங்களுக்கு மனைவியாகலாம். உங்களின் மனைவி எனக்கு காதலியாக முடியாது’ என்று சொல்கிற பாக்யராஜ் டச் திரைக்கதைதான், படத்தின் ஒன்லைன். பாக்யராஜ் ஹீரோ, அம்பிகா ஹீரோயின். போஸ்டர், சினிமா செய்திகள் என எல்லாமே சொல்லிவிட்டநிலையில், படம் பார்க்க உட்கார்ந்த ஆடியன்ஸ், டைட்டில் போடும் போது, ராஜேஷுக்கும் அம்பிகாவுக்கும் நடக்கும் கல்யாணச் சடங்குகளைப் பார்த்து ஆடித்தான் போனார்கள். அங்கே, ராஜேஷ், அம்பிகா கல்யாணத்தை மட்டும் சொல்லவில்லை பாக்யராஜ். தாலி, சடங்கு, ஒருவனுக்கு ஒருத்தி, தாம்பத்யம், இல்லறம், குடும்பம் என்கிற நம் சமூகக் கட்டமைப்புகளை காட்சிப்படுத்தியிருப்பார்.

படத்தின் நாயகி, காதலனுடன் இல்லாமல் வேறொருவனுடன் கல்யாணம். செத்துப் போவோம் என முதலிரவில் முடிவெடுக்கிறாள். செயல்படுகிறாள். கணவர் ராஜேஷ் டாக்டரும் கூட. காப்பாற்றிவிடுகிறார். காரணம் கேட்கிறார். சொல்கிறார். கல்யாணமானால் என்ன, காதலனுடன் சேர்ந்துவிட வேண்டும் என நினைக்கிறாள் நாயகி. கல்யாணமானால் என்ன, காதலனுடன் கணவனாகிய நானே சேர்த்துவைக்கிறேன் என்கிறார் ராஜேஷ். இப்படியொரு சிக்கலான முடிச்சைப் போட்டுக்கொண்டு, அதை அவிழ்த்து சிக்கல்களுக்கெல்லாம் சிடுக்கெடுப்பதுதானே பாக்யதிரைராஜாவின் கதை சாமர்த்தியம்.

இதிலொரு ஆச்சரிய ஆனந்த வினோதம்… படம் பார்க்கிற எல்லோருமே, அம்பிகா பாக்யராஜுடன் சேர்ந்துவிடவேண்டுமே என நகம் கடித்து, நெஞ்சுக் கூடு படபடக்க, குலசாமியை வேண்டியபடி இருப்பார்கள். இந்த செப்படிவித்தைதான் பாக்யராஜ் வெற்றியின் சூத்திரம்.

இது நடிகர் சந்திரபாபுவின் வாழ்வில் நடந்த உண்மை. அந்தத் தாக்கத்தில் பண்ணியதுதான் இந்தக் கதை என்பார்கள். அதேபோல, எம்.எஸ்.வி.யுடன் தபேலா வாத்தியக்காரர் ஒருவர் எப்போதும் இருக்க, அதைக் கொண்டே பாக்யராஜ், காஜாஷெரீப் காம்பினேஷன் ஐடியா வந்ததாம் பாக்யராஜுக்கு.

படத்தில் பாக்யராஜின் கேரக்டர், பாலக்காட்டு மாதவன். அதாவது கேரளாக்காரர். இதிலொரு சின்ன வருத்தம் அம்பிகாவுக்கு. ‘சார், கேரளாவுலேருந்து வந்தது மாதிரி என் கேரக்டரை வையுங்க சார்’ என்றாராம் அம்பிகா. அதுசரியாக வராது என்பது இப்போது நம் எல்லோருக்குமே புரிந்திருக்கும்.

சக்களத்தி எனும் படத்தில் அறிமுகமான அம்பிகாவுக்கு, இரண்டு மூன்று படங்கள் வந்தன. எதுவும் சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை. ஆனாலும் பாக்யராஜ், அம்பிகாவை வசந்தி எனும் கேரக்டரில் நடிக்கவைத்தார். கல்யாணப்பரிசு வசந்திக்குப் பிறகு மக்களின் மனங்களில் நின்றது இந்த வசந்தி கதாபாத்திரமும்.

பாக்யராஜ் படமே ஸ்பெஷல்தான். பாக்யராஜுக்கு கல்லாப்பெட்டி சிங்காரம் ரொம்பவே ஸ்பெஷல். தொடர்ந்து வாய்ப்புகளை மட்டுமல்ல, அருமையான ஸ்கோப்பையும் கொடுத்துவிடுவார். அவரும் பின்னிப்பெடலெடுத்துவிடுவார். அம்பிகாவின் தாத்தாவாக அதகளம் பண்ணியிருப்பார்.

உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அம்மாவுக்காக ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கொள்வார் ராஜேஷ். அவருக்கு ஒரு மகள். மனைவியின் தற்கொலை முயற்சியையும் காதலையும் உள்ளுக்குள்ளேயே வைத்துக்கொண்டு, ‘இன்னும் ஒருவாரம்தான். அம்மா இறந்துருவாங்க. அதுக்குள்ளே உன் காதலனைக் கண்டுபிடிச்சு, அவனோட சேர்த்துவைக்கிறேன்’ என்று வாக்குறுதி கொடுப்பார் ராஜேஷ். அதன்படியே பாக்யராஜை சந்திப்பார். ஒரு தயாரிப்பாளர் என்பார். மியூஸிக் சான்ஸ் என்பார். கதை சொல்லுவார். அது அவரின் வாழ்க்கை. காமெடியும் கலாட்டாவாகவும் போய்க்கொண்டிருக்கும் போது, ஒருநாள், ‘ஏன் சாரே… ஆ ஹீரோவின் அம்மை மரிச்சுப் போயியா, பிழைச்சா சாரே’ என்பார். அப்போது ஒரு போன் வரும். ராஜேஷ் பேசுவார். அந்த இடைவெளியில் பாத்ரூம் செல்வார் பாக்யராஜ். போனில், அம்மா இறந்த சேதி. பாத்ரூமில் இருந்து வெளியே வந்தகையுடன், ‘ஆ அம்மை கேரக்டர் மரிச்சுப் போயியா, பிழைச்சா சாரே’ என்பார். ‘இறந்துபோயிட்டாங்க’ என்று இறுகியமுகத்துடன் சொல்லுவார் ராஜேஷ். ‘சூப்பர் சாரே. என்னவொரு ஸ்டோரி’ என்பார் பாக்யராஜ். தியேட்டரே அழுதுகொண்டு கைத்தட்டுவார்கள் ரசிகர்கள். ரசாயன வித்தை, பாக்யராஜுக்கு மட்டுமேயானது.

படம் நெடுக பாக்யராஜ் – காஜாஷெரீப், பாக்யராஜ் – அம்பிகா லவ் போர்ஷன், பாக்யராஜ் – கல்லாபெட்டி சிங்காரம் என கலகலகலகலவெனப் போய்க்கொண்டே இருக்கும். அத்துடன் கதையும் வேகமெடுக்கும். உணர்ச்சிப்பெருக்குகள் நம்மை கொன்றேபோடும்.

கவிதை அரங்கேறும் நேரம், எண்ணி இருந்தது ஈடேற, தென்றலது உன்னிடத்தில் சொல்லிவைத்த சேதி என்னவோ… என்று பாடல்களும் ரகளை விடும். எம்.எஸ்.வி. இசை. அப்படித்தான் இருக்கும்.

படத்தின் நிறைவில், ஒருவழியாக, பாக்யராஜையும் அம்பிகாவையும் சந்திக்கவைப்பார். ‘தாலியைக் கழற்றிட்டு வா வசந்தி’ என்பார். தயங்குவார். ராஜேஷை உசுப்பிவிடுவார். அவர் அருகில் செல்ல, தள்ளிவிட்டுக் கதறுவார் அம்பிகா. ‘இதான் சார் நம்ம கல்ச்சர். இதான் சார் நம்ம பண்பாடு. இது இருபதாம் நூற்றாண்டுதான் சாரே. ஆனால் ஒண்ணும் ஒண்ணும் மூணாயிடாது சாரே.

என்னுடைய காதலி உங்களுக்கு மனைவியாகலாம். உங்க மனைவி, எனக்கு காதலியாக முடியாது சாரே. நீங்க சொன்ன கதைக்கு இது கொஞ்சம் ஓல்டுதான். ஆனாலும் ஓல்டு இஸ் கோல்டு என்று சொல்லிவிட்டு ஆர்மோனியப் பெட்டியுடன் நடையைக் கட்டுவார். கதை திரைக்கதை வசனம் டைரக்‌ஷன் கே.பாக்யராஜ் என்று டைட்டில் வரும். தியேட்டரே எழுந்து நின்று கைத்தட்டும். ‘இதாண்டா பாக்யராஜ்’ என்று உற்சாகக் குரல் எழுப்பும்.

அந்த ஏழு நாட்கள், ஒரு தீபாவளித் திருநாளில்தான் ரிலீசானது. 1981ம் ஆண்டு, அக்டோபர் 26ம் தேதி தீபாவளி. அன்றுதான் ரிலீசானது அந்த 7 நாட்கள். படம் வெளியாகி, 7 ஆண்டுகளாகிவிட்டன. ஆனாலும் இன்றைய கலாச்சார மாற்றங்களுக்கும் காலக்கொடுமையான தீர்ப்புக்கும் சவுக்கடி கொடுக்கிற விதமாக அமைந்திருக்கும் அந்த 7 நாட்கள்… இன்னும் கடந்து நிற்கும்.

வாழ்க பாலக்காட்டு மாதவன். வாழ்க கே.பாக்யராஜ்.

.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close