நடிகர் ரஜினிகாந்திற்கு தலித் அரசியல் தெரியுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு இயக்குநர் இரஞ்சித் நக்கலாக சிரித்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த சம்பவத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ‘திரெளபதி’ பட இயக்குநர் மோகன்.ஜியும் இரஞ்சித்தை தாக்கியுள்ளார்.
நீலம் பண்பாட்டு மையம் என்ற பெயரில் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறார் இயக்குநர் இரஞ்சித். அப்படி, அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் மாதமானது தலித் வரலாற்று மாதமாக நீலம் பண்பாட்டு மையத்தால் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், தலித்கள் பிரச்சினைகளை பிரதிபலிக்கும் விதமான படங்களைத் திரையிடல் நிகழ்வும் நடைபெறும்.
அப்படி அண்மையில் நடந்த நிகழ்வில் இயக்குநர் ”இரஞ்சித் பேசும் தலித் அரசியல் ரஜினிக்கு தெரியுமா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இரஞ்சித் நக்கலாக சிரித்தார். அந்த வீடியோ தான் இப்போது சர்ச்சைக்குக் காரணம்.
”ரஜினிக்கு இது இன்னொரு படம். ஆனால், இதுதான் தனக்கு எதிர்காலம்” என்று சொல்லி ரஜினியிடம் படம் ஒப்புக்கொள்ள இரஞ்சித் வேண்டுகோள் விடுத்தது பற்றி ரஜினி முன்பு பேசிய காணொலியையும் பகிர்ந்து நெட்டிசன்கள் இரஞ்சித்தை திட்டினர். ‘கபாலி’, ‘காலா’ படங்களில் ரஜினியுடன் பணிபுரிந்தார் இரஞ்சித்.
இந்த நிலையில், ‘திரெளபதி’ பட இயக்குநர் மோகன்.ஜியும் இன்று நடந்த படவிழா ஒன்றில் இரஞ்சித்தை தாக்கி பேசியுள்ளார். “நடிகர் ரஜினிகாந்த் ஒரு சிறந்த மனிதர், ஆன்மிகவாதி. சமீபகாலமாக தான் அவரை பற்றி சில விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவரை கேலி செய்து என்ன சாதிக்கப் போறீங்க?
நடிகர் ரிச்சர் ரிஷியுடன் நான் பணிபுரிந்த ‘பழைய வண்ணாரப்பேட்டை’ படம் சரியாக போகாததால் அவர் எனக்கு சம்பளம் வாங்காமல் ‘திரெளபதி’ படம் நடித்துக் கொடுத்தார். அதற்காக நான் நன்றியுடன் இருக்கிறேன். அதுபோல, நீங்களும் சூப்பர் ஸ்டாருக்கு நன்றியுடன் இருங்கள். அவர் இல்லைன்னா நீங்க ஒண்ணுமே இல்லை. இந்த இடத்துக்கே வந்திருக்க முடியாது. ஆனா, நீங்க நன்றி மறந்தாச்சு. இது சினிமாவில் ரொம்பத் தப்பு” என்று பேசியுள்ளார் மோகன்.ஜி.
இதையும் வாசிக்கலாமே...