[X] Close

ஸ்ரீதேவியும் நானும் உடன்பிறப்புகளாகவே பழகினோம்! - கமல் நெகிழ்ச்சி


kamal-about-sridevi

  • kamadenu
  • Posted: 26 Oct, 2018 11:38 am
  • அ+ அ-

நானும் ஸ்ரீதேவியும் உடன்பிறப்புகள் போலவேதான் பழகினோம். அவரின் அம்மா என்னிடம், ஸ்ரீதேவியை ஏன் கல்யாணம் செய்துகொள்ளக்கூடாது நீங்கள்?’ என்று கேட்டார் என கமல் மனம் திறந்தார். 

மும்பை திரைப்பட விழாவில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை கவுரவித்து அவரது படங்கள் திரையிடப்பட்டு வருகின்றனது. இதற்காக ஸ்ரீதேவியைப் பற்றி தனியாக அளிக்கப்பட்டுள்ள சிற்றேட்டில் (Brochure) கமல்ஹாசன் ஸ்ரீதேவியைப் பற்றி பகிர்ந்திருக்கிறார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஸ்ரீதேவியை முதன்முதலில் பார்த்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது. நான் திரு.கே.பாலசந்தர் அவர்களுடன் ஒரு படத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். எனது வீட்டில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. ஒரு பெண்ணுடன் உடனடி ஸ்க்ரீன் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.  அது 1976. 

அது ஒரு பெரிய பெண்ணுக்கான கதாபாத்திரம். அவள் படத்தின் இரண்டாம் பாதியில் அம்மாவாக இருப்பார். ஆனால் நடிக்க வந்திருந்தது இளம் பெண். வெறும் 13 வயது. எனக்கு அவரை முன்னமே தெரியும் தான். ஏனென்றால் அவர் பிரபலமான குழந்தை நட்சத்திரம். அவரை நான் போஸ்டர்களில் பார்த்திருக்கிறேன். 

அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அது எங்களது முதல் படமானது. மூன்று முடிச்சு (1976) அந்த நேரத்தில் நான் பாலசந்தர் அவர்களுடன் ஐந்து படங்கள் முடித்திருந்தேன். நான் அவரது செல்லப்பிள்ளை. உதவியாளன். க்ளாஸ் லீடரைப் போல இருந்தேன். எனவே ஸ்ரீதேவி தேர்வானதும் அவருடன் ஒத்திகை பார்க்கும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. 



நாங்கள் திரையில் காதல் செய்வதைப் பார்த்து, இருவரும் ஒருவரை ஒருவர் உரிமையோடு பெயர் சொல்லி அழைப்போம் என்று மக்கள் நினைத்திருக்கலாம். ஆனால், உண்மை என்னவென்றால், அவர் மறைந்த நாள் வரை, என்னை சார் என்றே அழைத்து வந்தார். ஒரு நாயகன் - நாயகிக்கு நடுவில் இது மிகவும் அரிதான விஷயம். 

நாங்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி. இருவருமே குழந்தை நட்சத்திரங்களாக இருந்து வெற்றி பெற்றவர்கள். ஹாலிவுட்டில் குழந்தை நட்சத்திரங்கள் வளர்ந்து பெரிய நட்சத்திரங்களாக வெற்றி பெறும் ஒரு வழக்கம் இருக்கிறது. ஆனால் தமிழில் அப்படியில்லை. ஏன் இந்திய திரைத்துறையிலும் இல்லை. அவரால் சாதிக்க முடியாது என்று கூட நான் சில நேரங்களில் நினைத்திருக்கிறேன். ஆனால் அவர் வேகமாக கற்றுக்கொள்ளக் கூடியவர். நாங்கள் இருவரும் சேர்ந்து 27 படங்கள் நடித்தோம்.

ஒருவகையில் அவர் எடுத்து வைத்த 27 அடிகளை, அவரது அற்புதமான வளர்ச்சியை நான் பார்த்திருக்கிறேன். அவர் பெரிய நட்சத்திரமான பிறகும் கூட எங்களுக்கு நடுவில் எதுவும் மாறவில்லை. எனக்கான இடத்தை எப்போதும் அவர் வைத்திருந்தார். நாங்கள் தனியாகப் பேசிக்கொள்ளும்போது என்னால் அந்த பழைய ஸ்ரீதேவியை இனம் கண்டு கொள்ள முடியும். அதுதான் எங்கள் உறவு.

திரு. பாலசந்தர், எங்களுக்கு காட்ஃபாதரைப் போன்றவர், கூட இருக்கிற நாங்கள் உடன் பிறப்புகள் போலவே நடந்து கொண்டோம். எங்கள் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும். ஸ்ரீதேவியின் தாயாருக்கும் என்னை மிகவும் பிடிக்கும். ''ஸ்ரீதேவியை ஏன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது'' என்று என்னிடம் கேட்டிருக்கிறார். நான் அதற்கு, ''இல்லை, அது குடும்பத்துக்குள்ளேயே திருமணம் செய்துகொள்வது போல ஆகும்'' என்று சொல்வேன். 



எனது ஆரம்ப நாட்களில் ஸ்ரீதேவி மிகவும் இளையவர் என்பதால் அவரை நான் அடிக்கடி கேலி செய்வேன். அவரது அம்மாவின் மடியில் உட்கார்ந்து சாப்பிடுவார். ''உங்கள் பெண்ணை கெடுக்கிறீர்கள்'' என்று அவரது அம்மாவிடம் சொல்வேன். பின் ஸ்ரீதேவியிடம் ''திருமணத்துக்குப் பிறகும் இதைத்தான் செய்வாயா? அம்மாவின் மடியில் உட்கார்ந்து சாப்பிடுவாயா'' என்று கேட்பேன். 

ஒரு நடிகையாக ஸ்ரீதேவி ஈடு இணையற்றவர். அவரை நீங்கள் ஷபனா, மீனா குமாரி ஆகியோருடன் ஒப்பிட முடியாது. அவருக்கென ஒரு தனித்துவம் இருந்தது. அவர் ரசிகர்களுக்காக நடிப்பதில் எப்போதும் ஆர்வமாக இருந்தார். எனக்கு அது பிடித்திருந்தது. அதுதான் அவரை நட்சத்திரமாக்கியது. அவர் நடிக்கும்போது அவரது கண்கள் மின்னுவதைப் பார்க்க முடியும். 

பல நடிகர்கள் தாழ்வான செயல் என்று நினைக்கும், அடிமட்ட ரசிகனுக்காக நடிப்பதில், அவர் தயங்கியதே இல்லை. ஆனால் அதுதான் அவரை உயர்வாக்கியது. அதுதான் சார்லி சாப்ளினை உயர்வாக்கியது. அவருக்கு, ரசிகர்கள் தான் முக்கியம். சிறு சிறு விஷயங்கள் குறித்து அவர் கவலைப்படமாட்டர். அது அற்புதமான குணம் என்று எனக்குப் பட்டது. 

அவர் க்ளாசிக்கல் நடனத்தைக் கற்றுக்கொள்ளவில்லை. ஒரு பயிற்சி பெற்ற நடனக் கலைஞர், தாளம் நிற்கும் நிலையோடு கை கால், கண்ககளின் ஒருங்கிணைப்பு என கவனம் செலுத்துவார். அது சிக்கலானது. ஆனால் ஸ்ரீதேவி ஃபிரேமில் என்ன இருக்கிறதோ அதில் கவனம் செலுத்துவார். இருந்தாலும் அவரால் எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்ய முடிந்தது. அதுதான் அவரது பலம். அவரது மாயம். மற்றவர்களை விட சினிமா என்ற ஊடகத்தை அவர் நன்றாகப் புரிந்து கொண்டார். 

கடந்த வருடம் யாஷ் ராஜ் ஸ்டூடியோவில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் நாங்கள் சந்தித்தபோது கட்டி அணைத்துக் கொண்டோம். அது வழக்கத்துக்கு மாறாக இருந்தது. ஏனென்றால் சினிமாவைப் போல நிஜ வாழ்க்கையில் நாங்கள் கட்டி அணைத்ததே இல்லை. ஆனால் அன்று நடந்தது. ஏன் என்று தெரியவில்லை. வழக்கமான மேடை அரவணைப்பை விட இது சற்று நீண்டது. அதுதான் நான் அவரை கடைசியாக கட்டி அணைத்தது. அதுதான் நான் அவரைக் கடைசியாகப் பார்த்தது

இவ்வாறு கமல் பகிர்ந்துகொண்டிருக்கிறார். 

 

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close