'லியோ' பட இசை வெளியீட்டு விழாவிற்கு காவல்துறை பாதுகாப்பு கேட்டு கொடுத்த கடிதத்தை வாபஸ் பெறுவதாக பட தயாரிப்பு நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப். 30-ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் என 'லியோ' படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் அறிவித்தது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆடியோ இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்காக காத்திருந்தனர்.
இந்த நிலையில், படக்குழுவினர் பாஸ்கள் கேட்டு அதிகப்படியான கோரிக்கைகள் வருவதாலும், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டும் 'லியோ’ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவித்தது. இவ்விழா ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் அழுத்தங்கள் தான் காரணம் என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து பதிவிட்டு வருகின்றனர். அத்துடன் கண்டன போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதால் காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டு அளித்த கடிதத்தை வாபஸ் பெறுவதாக கூறி தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் பெரியமேடு காவல்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
அந்த கடிதத்தில், " வருகிற 30-ம் தேதி இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேரு ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், பாஸ்கள் அதிகப்படியாக கேட்டதால் பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த 20-ம் தேதி போலீஸ் பாதுகாப்பு கேட்டு கொடுத்த கடிதத்தை வாபஸ் பெறுவதாகவும், இடையூறுக்கு மன்னிக்க வேண்டும்" என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.