நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தது ஏன் என்பது குறித்த விஷயத்தை காரணத்துடன் பேசி இருக்கிறார் விஜய்சேதுபதி.
நடிகர் விஜய் சேதுபதி நடிகை கீர்த்தி ஷெட்டியுடன் இணைந்து நடிக்க மறுத்தது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அந்தப் பேட்டியில் கூறியிருப்பதாவது, “’லாபம்’ படத்தில் முதலில் ஷ்ருதி ஹாசனுக்குப் பதிலாக கீர்த்தி ஷெட்டியை நடிக்க வைப்பதாகதான் பேசினார்கள். அந்த சமயத்தில்தான் தெலுங்கில் ‘உப்பன்னா’ படத்தில் கீர்த்திக்கு அப்பாவாக நடித்துக் கொண்டிருந்தேன்.
அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் எப்படி அதே பெண்ணுடன் இன்னொரு படத்தில் ரொமான்ஸ் செய்ய முடியும் என்று நினைத்து நான் மறுத்து விட்டேன். கீர்த்திக்கு என் மகள் வயதுதான் இருக்கும். அவரையும் என் மகள் போலதான் பார்த்தேன். அவருடன் ஒரு நாளும் ரொமாண்டிக்காக நடிக்க முடியாது” என கூறியுள்ளார் விஜய் சேதுபதி.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக ‘ஜவான்’ படம் வெளியானது. இதனை அடுத்து ‘மகாராஜா’, ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ ஆகிய படங்கள் இவரது கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.