அதிர்ச்சி... படப்பிடிப்பில் இளம்பெண் திடீர் மரணம்; நடிகை அம்பிகா, நடிகர் லிவிங்ஸ்டன் மகளிடம் போலீஸார் விசாரணை!


’அருவி’ சீரியல்

சீரியல் படப்பிடிப்பு தளத்தில் ஒப்பனை பெண் திடீரென கீழே விழுந்து மரணமடைந்துள்ளதால், அந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் லிவிங்ஸ்டன் மகள், நடிகை அம்பிகாவிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சின்னத்திரை, சினிமா என சமீபத்தில் பிரபலங்களின் மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், சென்னை அருகே நடந்து வந்த சீரியல் படப்பிடிப்பு தளத்திலேயே ஒப்பனைக் கலைஞராகப் பணியாற்றி வந்த இளம்பெண் ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்திருக்கிறார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கேனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இது சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஒப்பனைக் கலைஞர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’அருவி’ சீரியலில் ஒப்பனையாளராக பணியாற்றி வருவது தெரிய வந்துள்ளது. நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா, இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். பிரபல கன்னட சீரியலின் ரீமேக்கான இதில் ஜோவிதாவுக்கு ஜோடியாக கார்த்திக் வாசுவும், அவருக்கு அம்மாவாக நடிகை அம்பிகாவும் நடித்து வருகின்றனர்.

’அருவி’ சீரியல்

இந்நிலையில், 'அருவி' சீரியலின் படப்பிடிப்பு சென்னையில் ஆலப்பாக்கத்தில் உள்ள தர்மராஜா கோயிலில் நடந்து கொண்டு இருந்த போது ஒப்பனைப் பெண் ராமபிரபாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இரவில் இருந்தே உடல்நிலை சரியில்லாத நிலையில், காலையில் 'அருவி' சீரியலின் படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மூச்சுத்திணறல் அதிகரித்ததால், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உயிரிழந்த ராமபிரபா...

ஆனால், மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர்.

பட்டுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராமபிரபாவிற்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இவருக்கு இருந்ததால், மகனை சித்தி வளர்த்து வர, இவர் சென்னையில் தங்கிவேலை செய்து வந்த நிலையில் திடீரென இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரேதப் பரிசோதனை நடைபெற்ற பின், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து இவரது உடல் இன்று காலை சொந்த ஊரான பட்டுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என்று சொல்லப்படுகிறது. மேலும், இவரது இறப்பு தொடர்பாக ஜோவிதா, அம்பிகா உள்ளிட்ட ‘அருவி’ சீரியல் நடிகர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

x