[X] Close

மீடூ விவகாரம்: லீனா மணிமேகலை மீது மேலும் ஒரு வழக்கை தொடர்ந்தார் சுசி கணேசன்


susi-ganesan-case-against-mani-megalai

சுசி கணேசன், லீனா மணிமேகலை

  • kamadenu
  • Posted: 22 Oct, 2018 19:10 pm
  • அ+ அ-

'மீ டூ’ பரப்புரையில் இயக்குநர் சுசி கணேசன் மீது பாலியல் புகாரை கவிஞர் மற்றும்  இயக்குநர் லீனா மணிமேகலை தெரிவித்ததையடுத்து அதை மறுத்துள்ள இயக்குநர் சுசி கணேசன் லீனா மணிமேகலை மீது குற்றவியல் வழக்கைத் தொடர்ந்து நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.

'மீ டூ' பரப்புரை நாடெங்கும் பலமாகப் பரவி வரும் நிலையில் சின்மயி வைரமுத்துவுக்கு எதிராக ஆரம்பித்து வைக்க, அது திரைத்துறையினரைப் பிடித்து ஆட்டுகிறது. 2005-ம் ஆண்டு ஒரு விழாவில் தொகுப்பாளராக பங்கேற்ற தன்னை வீட்டில் விடுவதாக காரில் ஏற்றி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் என இயக்குநர் சுசி கணேசன் மீது கவிஞரும், இயக்குநருமான லீனா மணிமேகலை மீ டூ பரப்புரையில் குற்றம் சாட்ட உடனடியாக செய்தியாளர்களைச் சந்தித்த சுசி கணேசன் அதை மறுத்தார்.

அரைமணி நேரச் சந்திப்பில் ஒருவரின் காரில் ஏறும் அளவுக்கா ஒரு பெண் இருப்பார்? இதிலிருந்தே அவர் கூறுவதில் உண்மை இல்லை. என்னிடம் சொகுசுக் கார் இல்லை. காரையும் நான் ஓட்டுவதே இல்லை. ஆகவே அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. அவர் குற்றச்சாட்டு கூறிய பின்னர் 3 மாதம் கழித்து என்னுடைய புத்தக அறிமுக விழாவுக்குத் தொகுப்பாளராக இருந்தார்.

ஆகவே அவர் கூறுவது முற்றிலும் தவறு. மேலும் இப்படி அவர் பதிவு செய்தவுடன் நானே முதலில் போலீஸில் ஆன்லைனில் புகார் அளித்துள்ளேன். தற்போது அவர் மீது வழக்கு தொடர்வதுடன், 1 ரூபாய் கேட்டு மன நஷ்ட வழக்கும் தொடர உள்ளேன் என்று கூறியிருந்தார்.

கடந்த 17-ம் தேதி சைதாப்பேட்டை குற்றவியல் விரைவு நீதிமன்ற நடுவர் முன் தனது வழக்கறிஞர் மூலம் இயக்குநர் சுசி கணேசன், லீனா மணிமேகலைக்கு எதிராக சிஆர்பிசி சட்டம் 200-ன் கீழ் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இது தவிர மானநஷ்ட வழக்கும் போட உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்திக்க வந்த லீனா மணிமேகலை செய்தியாளர்களின் கேள்விக்கு முறையாகப் பதிலளிக்காமல் மோதல் போக்கில் ஈடுபட்டார். சுசி கணேசன் குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் தவிர்ப்பதற்காக வேறு காரணங்களைக் கூறி செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளிக்காமல் தவிர்த்தார்.

இந்நிலையில் சுசி கணேசன் ஏற்கெனவே தெரிவித்திருந்தபடி இன்று உரிமையியல் நீதிமன்றத்தில் லீனா மணிமேகலைக்கு எதிராக ரூ.1 கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் லீனா மணிமேகலை தனது முகநூல் பக்கத்தில் அவதூறாகப் பதிவு செய்துள்ளதால் லீனா மணிமேகலை ஒரு ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிடவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு ஏற்கப்பட்டால் விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close