[X] Close

அழகிக்குப் பிறகு 96ல மெய்மறந்தேன்! -    இயக்குநர் வசந்தபாலன் பாராட்டு


96-vasanthabalan

விஜய்சேதுபதி - வசந்தபாலன்

  • வி.ராம்ஜி
  • Posted: 21 Oct, 2018 20:47 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

 அழகி படத்துக்குப் பிறகு நான் மெய்மறந்தது 96 படத்துலதான். இந்தப் படம் என் மனபாரத்தையெல்லாம் போக்கிருச்சு. விஜய்சேதுபதி மாதிரி, தியேட்டர்ல நான் மயங்கிவிழுந்துருவேனோன்னு நினைச்சேன் என்று  இயக்குநர் வசந்தபாலன் 96 படம் குறித்து பாராட்டிப் பேசினார்.

  இயக்குநர் வசந்தபாலன் 96 படம் குறித்துப் பேசியதாவது:

96 ரொம்பமுக்கியமான படம். ஆனா நான் கோ எட்ல படிக்கலை. இதுல கொடுமை என்னன்னா, நான் படிச்சி முடிச்ச பிறகுதான் அந்தக் காலேஜை கோ எட் ஆக்கினாங்க.

என்னோட அடுத்தபட ஒர்க் நடந்துக்கிட்டே இருந்துச்சு. ஏதோவொரு மன அழுத்தம் இருந்துக்கிட்டே இருந்துச்சு. இந்தப் படம் நல்லாவந்துடணும்னு ஒரு தவிப்பு, மனசு கனமா இருக்கு. எல்லாரும் இந்தசமயத்துலதான் 96 படத்தைப் பத்தி சொல்லிக்கிட்டே இருந்தாங்க. அழகி மாதிரி, ஆட்டோகிராப் மாதிரி அப்படியொரு சிறப்பான படம்னு சொன்னாங்க. அதனாலேயே எனக்குப் பாக்கணும்னு தோணலை. வேலை கெட்டுருமோனு ஒரு பயம்.

அன்னிக்கி சாயந்திரம் வேலை ஓரளவு முடிஞ்சிச்சு. கொஞ்சம் ரிலாக்ஸ் தேவைப்பட்டுச்சு. அப்ப என் அஸிஸ்டெண்ட் 96 படத்துக்குப் போகலாமா சார்னு கேட்டார். சரி போகலாம்னு போனேன். படம் பாத்தேன். சொன்னா நம்பமாட்டீங்க. 15 நாள் இருந்த மொத்த நெருக்கடியையும் மறைத்து, மறந்து, ஒரு ஆழ்மன தியானத்துக்குள்ளே போன மாதிரி உணர்வு. இதைவிட ஒருபடம் வேறென்ன செய்துவிடமுடியும்? அப்படியொரு விடுதலை உணர்வை மனசு உணர்ந்துச்சு.

இது லாஜிக், அரசியல்,கோபம் எதுவும் பேசலை. ஆனா இந்தப் படம் அப்படியே என் மனசுக்குள்ளே உக்கார்ந்துக்கிச்சு. படம் முடிஞ்சதும் ஒரு ஃபுல் அடிச்ச மாதிரியான ஒரு உணர்வு. இந்தப் படம் தந்த தாக்கம் அப்படி. மெய்மறக்கச் செய்த படம் 96. அழகி படத்துக்குப் பிறகு நான் மெய்மறந்து பாத்தபடம் இதுதான்.

லிவிங் டூ கெதர், செக்ஸ் வைச்ச பிறகு லவ் யூ சொல்லுதல், நீ வெர்ஜினா…ன்னெல்லாம் பாத்துக்கிட்டு வரோம். ஆனா, இவங்க எல்லாரும் ஒரு சதவிகிதம்தான். 99 சதவிகித ஆண்கள், தெக்கத்திப் பக்கம் இருக்கறவங்க காதலியை ஒரு கூச்சமா, காதலியைப் பார்த்து கூச்சப்படுற, வெட்கப்படுற ஆண்கள்தான் அதிகம். அவங்களை திரைப்படம் பதிவு பண்ணவே இல்ல. சினிமால காதல் ஹீரோ யாருன்னா, அது மெளனராகம் கார்த்திக்தான். காதலிக்கிற பொண்ணுக்கிட்ட, அவங்க அப்பாகிட்ட லொடலொடன்னு பேசுற ஹீரோவுக்கு மத்தியில, காதலியைப் பார்க்க கூசுகிற, கூச்சப்படுகிற, அவளின் நினைவுகளை மனதில் பொத்திவைத்து அடை காக்கிற அந்த இளைஞனை ரொம்ப அழகாப் பதிவு செஞ்சிருக்காரு பிரேம். அந்தக் கேரக்டர் வேற யாருமில்ல. நானாக் கூட இருக்கலாம். நானாத்தான் உணர்ந்தேன்.

சின்ன வயசுல எங்க தெருல ஒரு பொண்ணைப் பாத்து காதலிக்க ஆரம்பிச்சு, என்னோட காதலை அவகிட்ட சொல்லலாம்னு நினைக்கும்போது அந்தப் பொண்ணுக்குக் கல்யாணமாயிருச்சு. கிட்டத்தட்ட 11 வருஷம் காத்திருந்தேன். ஒரு பொண்ணைத் தொடுறது ஒண்ணுமே இல்ல. அவளோட நினைவுகளை உள்ளே வைச்சுருக்கறதுதான் சந்தோஷம். அதை இந்தப் படம் அவ்ளோ யதார்த்தமா உணர்த்திருக்கு.

பிரேம்க்கு பாராட்டுகள். எல்லாப் படத்துலயும் பேசிக்கிட்டே இருக்கிற விஜய்சேதுபதி, இந்தப் படத்துல பேசாம இருக்கார். பக்பக் பக்பக்னு அவரோட இதயம் துடிச்சு மயங்கி விழுறது மாதிரி, நானும் தியேட்டர்ல மயங்கிவிழுந்துருவேனோன்னு பயந்துட்டேன்.

சில விஷயங்கள் ஆசீர்வாதம் மாதிரி இயற்கையே நடத்திக்கொடுத்துரும். பிரேம்க்கு இப்படியொரு தயாரிப்பாளர் கிடைச்சதும் விஜய்சேதுபதி கிடைச்சதும் முக்கியமா த்ரிஷா கிடைச்சதும் அப்படியொரு இயற்கை ஆசீர்வாதமாத்தான் பாக்கறேன்.

இவ்வாறு வசந்தபாலன் பேசினார்.  

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close