[X] Close

வைரமுத்து காலில் விழுந்தது ஏன்? - சின்மயி புதிய விளக்கம்


chinmayi-replies-for-vairamuthu

  • kamadenu
  • Posted: 20 Oct, 2018 19:44 pm
  • அ+ அ-

 

 

திருமண விழாவில் வைரமுத்து காலில் விழுந்தது ஏன் என்ற கேள்விக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சின்மயி பதிலளித்திருக்கிறார்.

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தும் வகையில் ‘மீ டூ' (நானும் தான்) என்ற ஹேஷ்டேக் பிரச்சார இயக்கம் ட்விட்டரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவில் அரசியல், திரையுலகம், ஊடகம் என பல்துறை பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் குவிந்து வருகின்றன.

தமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி தெரிவித்த புகார் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இது தொடர்பாக “என் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் எல்லாம் முழுக்க முழுக்க பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் உடையவை. அவை உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடுக்கலாம். சந்திக்கக் காத்திருக்கிறேன்” என்று வைரமுத்து  வீடியோ பதிவில் தெரிவித்திருந்தார்.

மேலும், ட்விட்டர் பக்கத்தில் பலரும் “உங்களுடைய திருமணத்திற்கு வந்த வைரமுத்துவிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியது ஏன்” என்று அவரது திருமண வீடியோவுடன் கேள்வி எழுப்பி வந்தார்கள். 

இது தொடர்பாக இன்று (அக்.20) பத்திரிகையாளர்களை சின்மயி சந்திக்கும் போதும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சின்மயி கூறியதாவது:

2005, 06 க்கு பிறகு அவரது புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட அழைத்தார். அதில் முதல்வர் சிறப்பு விருந்தினர் என்பதால் போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்பதால் சென்றேன்.

எனது திருமணத்துக்கு வைரமுத்துவுக்கு பத்திரிகை வைத்ததற்குக் காரணம் கார்க்கி எனது நண்பர். அப்பாவுக்கு பத்திரிகை வைத்தீர்களா? என்கிற அவரின் கேள்விக்காக சங்கடப்பட்டுக்கொண்டே பத்திரிகை வைத்தேன்.

திருமணத்தில் வாழ்த்திய அனைவர் காலிலும் விழுந்தேன். வைரமுத்து காலில் விழுந்ததற்குக் காரணம் எனது மாமியார், மாமனாருக்கு இந்த விவகாரம் தெரியாது. ஆகவே காலில் விழாமல் தவிர்ப்பதற்குக் காரணம் சொல்ல முடியாததால் அது நடந்தது.

அதன் பின்னர் திருமணம் ஆகி சில மாதங்கள் கழித்து புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை வைரமுத்து அழைத்தார். என்னால் வரமுடியாது என்று மறுத்தேன். காரணம் எனக்குத் திருமணமாகி இருந்தது. என் பக்கம் மாமனார் மாமியார் துணை இருந்ததால் வரமுடியாது என்று மறுத்தேன். அன்று எனக்கு கணவர் வீட்டார் துணை இருந்ததால் தைரியமாக நின்றேன்.

என்னுடன் இருக்கும் சக மாணவி வைரமுத்து பற்றி என்னை இப்படிச் செய்தார் என்று பொதுவில் வந்து பேசத் தயங்குகிறார். சொன்னால் கணவர் வீட்டைவிட்டு வெளியே துரத்தி விடுவாரோ என்று பயப்படுகிறார். இதுதான் நிலைமை.

இவ்வாறு சின்மயி கூறியுள்ளார்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close