[X] Close

சண்டக்கோழி 2 - ஜனரஞ்சகக் கோழி!


sandakozhi2

சண்டக்கோழி 2

  • kamadenu
  • Posted: 19 Oct, 2018 13:04 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

அப்பாவுக்காகவும் சொந்த ஊரின் நலனுக்காகவும் மனதாலும் உடலாலும் போராடும் இளைஞனின் உணர்வுகளும் சம்பவ அடுக்குகளும்தான் சண்டக்கோழி 2 திரைப்படம்.

படத்தின் தொடக்கத்தில், கோயிலின் திருவிழா நடைபெறுவதற்கான பஞ்சாயத்து கூடப்போகிறது. முன்னதாக ஏழு வருடங்களுக்கு முன்பு, இந்தக் கோயிலின் திருவிழாவில், கறிவிருந்தின் போது நிகழ்கிறது சண்டை. அதில், வரலட்சுமியின் கணவர் கொல்லப்படுகிறார். ஆவேசமாகும் வரலட்சுமி, ‘அந்த வம்சத்துல ஒருத்தன் கூட இருக்கக்கூடாது’ என ஏவுகிறார். கணவரின் அண்ணன், தம்பி என சகலரும் சேர்ந்து எல்லோரும் கொன்றுபோடுகிறார்கள். அந்தக் குடும்பத்தில் அன்பு என்பவன் மட்டுமே மிஞ்சுகிறான். அவனை ராஜ்கிரண் காப்பாற்றுகிறார்.

இப்போது, மழை இல்லை. விவசாயம் இல்லை. வேட்டைக்கருப்பு கோயில் விழாவை நடத்தினால்தான் ஊருக்கு நல்லது நடக்கும் என்ற நிலையில், கூடிப் பேசுகிறார்கள். ஆனால் இன்னமும் வரலட்சுமி வகையறா, அந்த கடைசிக் கொலையை நிகழ்த்த கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறது.

இவை அனைத்தையும் தாண்டி, கோயில் திருவிழாவுக்கு தேதி குறிக்கப்படுகிறது. இந்த நிலையில்தான், ஏழு வருடங்களுக்கு முன்பு படிக்க வெளிநாடு சென்ற விஷால் ஊர் திரும்புகிறார். ஊரின் நிலை, வரலட்சுமி வகையறாவின் கொலைவெறி, அப்பா ராஜ்கிரணின் வாக்குறுதி என அனைத்தும் தெரிகிறது. பிறகு அந்த திருவிழா நடந்ததா, அன்பு காப்பாற்றபட்டானா, அப்பாவும் பையனும் எப்படிக் காப்பாற்றினார்கள் என்பதை விறுவிறுமொறுமொறு திரைக்கதையாக்கித் தந்திருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி.

படத்தின் கதையும் கதைக்களமும் திருவிழாதான். எனவே படத்தின் கதையோட்டம், திருவிழாவையும் திருவிழாவைச் சுற்றியுமே நடக்கிறது. படம் முழுவதுமே திருவிழாவை கான்செப்ட்டாக வைத்திருந்தாலும் கூடவே அந்த அன்பு எனும் ஐஏஎஸ் மாணவனைக் காபந்து செய்யும் டெம்போவையும் ஏற்றி, கமர்ஷியல் கவரேஜ் செய்திருக்கிறார் லிங்குசாமி.

விமானத்தில் இருந்து இறங்கி எண்ட்ரி கொடுக்கும் விஷாலுக்கு இது 25வது படம். கிராமத்துப் படம்தான். ஆனால் முறுக்கு மீசையெல்லாம் இல்லை. குறிப்பிட்ட கதை மாந்தர்கள் படம்தான். ஆனால் ரத்தமெல்லாம் தெறிக்கவிடவில்லை. ஊர், மரியாதை, பிரியம், பாசம், காதல், பழி என்பதை எந்தப் பாசாங்குகளும் இல்லாமல், பேசியிருப்பதுதான் படத்தின் வெற்றி.

விஷாலை, பெரிய ஐயா வீட்டு டிரைவர் என்று கீர்த்தி சுரேஷ் நினைப்பது, அடுத்தடுத்த தருணங்களில், ஐயா டிரைவர்னு சொல்லுய்யா என்று அட்வைஸ் செய்வது என விஷால், கீர்த்திசுரேஷ் சந்திப்புகள் செம ரகளை. ராஜ்கிரண், தென்னவன், சண்முகராஜன், வரலட்சுமி, ஹரீஷ் பெராடி, பேராசிரிய ஞானசம்பந்தன் என படம் முழுவதும் கோயில் திருவிழாக் கூட்டம் போல, எக்கச்சக்க கேரக்டர்கள்.

ஏய், ஊய், அவனே, இவனே... பழிவாங்காம விடமாட்டேன் என்பதான காட்சிகள் ஏராளம். ஆனால் அதைக்கொண்டு ஹீரோவின் இமேஜ் காட்டவில்லை. சொல்லப்போனால், படம் முழுக்கவே ஒரு சைலண்ட் மோடுக்கும் புதுவித பாடிலாங்வேஜுக்குமாக வந்ந்திருக்கிறார் விஷால். ‘வயசு குறைஞ்சமாதிரி இருக்கே விஷால்? திருஷ்டி சுத்திப் போடுங்க.

போலீசுக்குச் சேர அப்ளை செய்திருக்கும் செம்பருத்தி கீர்த்தி சுரேஷ். கொஞ்சம் சைலண்டாக இருந்தால், சிட்டிநாயகியாகிவிடுவார் என்று நினைத்தோ என்னவோ, லொடலொடவென பேசவைத்திருக்கிறார் இயக்குநர். ஆரம்பத்தில் அந்த லொடலொடப் பேச்சு அலுப்பு தருகிறது உண்மைதான். ஆனால், தன் முகபாவம், மாடுலேஷன், அந்த புதுசாப் பூத்தது போலான வெள்ளந்தி முகம் என மனசை பறித்துக்கொள்கிறார்.

துரை ஐயாவாக, ஊர்ப்பெரியவராக ராஜ்கிரண். சொல்லியா தரவேண்டும்? சொல்லவா வேண்டும்? அந்த மிடுக்கு, நடை, தோரணை, நடையில் கம்பீரம் காட்டினாலும் குரலின் குழைவில் அன்பு காட்டும் மனசு என மனிதர், பிரமாதப்படுத்தியிருக்கிறார். ஒற்றை வார்த்தையில் ஊரையே கட்டிப்போடுவது, அவுக வந்துட்டாகளா என்று விஷாலைப் பற்றி பெருமிதத்துடன் கேட்பது, திருவிழா முடியற வரைக்கும் அன்பு நம்ம வீட்லயே இருக்கட்டும் என்று அக்கறை கொள்வது, அதைப் போட்டுட்டுப் போய் படுங்க என்று சொல்லி அரிவாளைப் போடச் சொல்லுவது என காட்சிக்குக் காட்சி, படத்தின் கம்பீரத்தையும் கேரக்டரின் கம்பீரத்தையும் உணர்த்தி பிரமாதப்படுத்தியிருக்கிறார் ராஜ்கிரண்.

எந்த அன்பு கேரக்டரைக் கொல்லவேண்டும் எனத் துடிக்கிறாரோ அதே வரலட்சுமி வீட்டு வாசலில் அன்புவுடன் நிற்பது, பஞ்சாயத்தில் அப்பாவை மரியாதைக் குறைவாக யார் பேசினாரோ அவரை கோயில் விழாவில் வெளுத்தெடுப்பது, பிறகு சிசிடிவி கேமிராவில் அடித்து உதைத்து சண்டை போட்டதையெல்லாம் சிக்கிக்கொண்டு மாட்டிக்கொண்டு நெளிவது, நட்டநடு இரவில் கீர்த்திசுரேஷ், விஷாலைப் பார்க்க வருவதில் நெளிந்து தவித்து மருகுவது, அப்பாவை அந்தக் கோலத்தில் பார்த்து ஆவேசமாவது, பிறகு பொறுமையும் நிதானமுமாக கோயில் திருவிழாவை எதிர்கொள்வது என ஸ்கோர் அடித்திருக்கிறார் விஷால்!  

ஆனால் எல்லோரையும் விட, கதாபாத்திர உருவாக்கத்திலும் நடிப்பிலும் மிரட்டுபவர் வரலக்ஷ்மிதான். கணவரைப் பறிகொடுப்பதும் அதன் பிறகு ஆவேசமாகத் திரிவதும், தன் அரைடிராயர் பையனுக்கும் கொலைவெறியைத் தூண்டிவிட்டிருப்பதும் கணவரின் சகோதரர்களை வறுத்தெடுப்பதும் என அதகளம் பண்ணியிருக்கிறார். ஆனால், அவர் வரும் காட்சிகள் ரிப்பீடட் என்பதால், ஒருகட்டத்துக்கு மேல் சுவாரஸ்யம் இழக்கிறது கதாபாத்திரம்.  

கஞ்சா கருப்பு, சண்முகராஜன், தென்னவன், மு.ராமசாமி, ஹரீஷ் பெராடி, முனீஸ்காந்த் என படம் முழுக்க, தேர்க்கூட்டம் திருவிழாக்கூட்டம்தான். ஆளுக்கு ஒன்றிரண்டு காட்சிகள் கொடுத்து சமாளித்திருக்கிறார் இயக்குநர். முக்கியமாக, முனீஸ்காந்த் வரவர காமெடி ப்ளஸ் குணச்சித்திரம் கலந்த கதாபாத்திரங்களில் மின்னுகிறார்.

கதை, கதை மாந்தர்களுக்கு அடுத்தபடியாக, படத்துக்கு நிறம், மணம், குணம் கொடுப்பது ஒளிப்பதிவு. கேமிராமேன் சக்திவேல், கிராமத்தின் அழகையும் திருவிழாவின் பிரமாண்டத்தையும் வெகு அழகாகப் பதிவு செய்திருக்கிறார். படத்தின் நாயகன் விஷாலைப் போலவே இன்னொரு நாயகனும் உண்டு. அவர்... யுவன்சங்கர் ராஜா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, படம் முழுவதுக்குமான பிஜிஎம்மில், பின்னிப்பெடலெடுத்திருக்கிறார். பல இடங்களில், அப்பாவின் பெயரைக் காப்பாற்றிவிடுகிறார் யுவன்சங்கர் ராஜா. பாடல்களும் ரசிக்கவும் தாளமிடவும் வைக்கின்றன.

முதல் பாதியும் திருவிழா. இரண்டாம் பாதியும் திருவிழா. எனவே, ஆடு தானாகவே தலையை நீட்டுவது போல், சிக்கிகொள்கிறது திரைக்கதை. இரண்டாம் பாதியில் கொஞ்சம் தொய்வு விழத்தான் செய்கிறது. அடுத்தது என்ன என்பதான திரைக்கதை நகருதலும் இல்லாமல் சண்டித்தனம் பண்ணுகிறது. ஆனால் இவை அனைத்தையும் தன் இயக்கத்தால், பேலன்ஸ் செய்து நம்மை மறக்கடித்துவிடுகிறார் இயக்குநர் லிங்குசாமி. எஸ்.ராமகிருஷ்ணன், பிருந்தா சாரதியின் வசனங்கள், நறுக்கென்று இருக்கின்றன.

வெட்டிக்கூச்சல், சத்தங்கள், லாஹிரி வஸ்துக்கள், வன்முறை என்பதற்கான இடங்கள் இருந்தாலும் அதை அழகாகத் தவிர்த்திருக்கிறார் இயக்குநர். மற்றப்படி, வழக்கமான கதை, அதிலும் வழக்கமான கிராமத்துக் கதை, இன்னும் வழக்கமாகிவிட்ட கோயில் திருவிழா, பஞ்சாயத்து, பழி என பல வழக்கமானவை இருந்தாலும் லாஜிக்கையெல்லாம் தாண்டி மேஜிக் செய்திருக்கிறார் லிங்குசாமி.

விட்டதைப் பிடித்திருக்கிறார் லிங்குசாமி. 25வது படம் சண்டக்கோழி 2 என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாம் விஷால்.

இரண்டரை மணி நேரப் படம், கமர்ஷியலான ஒரு படம் எப்படியெல்லாம் ஒரு சாமானிய ரசிகனை மகிழவைக்கவேண்டுமோ, அப்படியெல்லாம் மகிழச் செய்யும் வகையில் சண்டக்கோழி 2... ஜனரஞ்சகக் கோழி!

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close