[X] Close

வடசென்னை விமர்சனம் - கத்தி, ரத்தம், ரவுடியிஸம், இல்லீகல்... இதுதானா வடசென்னை?


vadachennai

வடசென்னை

  • kamadenu
  • Posted: 19 Oct, 2018 11:16 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

ரவுடிகளின் சாம்ராஜ்ஜியமும் அதைப் பார்த்துப் பார்த்து வளருபவன் ரவுடியாகவே மாறுவதும்தான் வடசென்னை. கத்தியும் அரிவாளும் கொண்டு, ரத்தமும் கொலையுமாகப் பேசுகிறது வடசென்னை சினிமா.

சென்னையின் வடக்குப் பகுதிதான் கதையும் கதைக்களமும். சொல்லப்போனால், வடசென்னைதான் கதையே. கடலும் கடல் சார்ந்த பகுதியிலுமாக வாழும் மனிதர்களிடத்தில் உலவுகிற தகிடுத்தத்தங்களில் தேர்ந்தவர்கள் அமீர், கிஷோர், சமுத்திரக்கனி, ராதாரவி. கடலுக்குள் சென்று கடத்துகிறார் அமீர். அரசியல் மூலம் மக்களை ஏமாற்றுகிறார் ராதாரவி. என்ன தப்பு வேண்டுமானாலும் செய்து உயர நினைத்து செயல்படுகிறார்கள் கிஷோரும் சமுத்திரக்கனியும்.

மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தட்டிக்கேட்கிறார் அமீர். இந்த அநீதிக்குப் பின்னே ஒவ்வொரு அநீதிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இனி கடத்தல் தொழிலே வேண்டாம் என்று இருக்கும் அமீரைக் கொன்றுபோடுகிறார்கள். அப்போது அதற்காக கிஷோரும் பவனும் சமுத்திரக்கனியும் தீனாவுமாகச் சேர்ந்து செய்து முடிக்கிறார்கள். ஆனால் அடுத்ததாக நீயா நானா என்று கச்சைக் கட்டிக்கொண்டு, கத்திகபடாவோடு திரிகிறார்கள்.

நான்குபேர் சேர்ந்து செய்த கொலையில், சமுத்திரக்கனியும் பவனும் ஒப்புக்கொண்டு ஜெயிலுக்குச் செல்ல, கிஷோர் ஜாமீன் பெறுவதாக ஏமாற்றும் அதே தருணத்தில், அமீரும் இல்லாமல், சமுத்திரக்கனியும் இல்லாமல் தனி ராஜாங்கம் பண்ணுகிறார்.

இதையடுத்து, தனுஷ் ஒரு பிரச்சினையில் மாட்டிக்கொண்டு ஜெயிலுக்கு வருகிறார். சமுத்திரக்கனியும் பவனும் ஜாமீன் கிடைத்து வெளியேறியிருக்க, இந்த முறை கிஷோர் ஜெயிலுக்கு வருகிறார். தனுஷ், கொஞ்சம் கொஞ்சமாக் கிஷோருக்குப் பிடித்தமானவராகிறார். அவருடைய பிளாக்கிற்கு தனுஷ் மாறுகிறார். அங்கே, கிஷோரைக் கொல்ல முயற்சிக்கிறார் தனுஷ். அதில் உயிர் பிழைக்கிற கிஷோர், பேச்சுவராமல், வாய் கோணிப் போகிறது.

அமீரின் தம்பி டேனியல் பாலாஜி ஒருபக்கம், சமுத்திரக்கனி இன்னொரு பக்கம், கிஷோர் ஒருபக்கம், இவர்களுக்கு நடுவே தனுஷ் ஒருபக்கம். அவர்கள் அனைவரையும் ஒருவருக்கொருவராக தொடர்பு படுத்தியிருப்பது, யார், ஏன், எதற்காக, கொலை செய்யத் துடிக்கிறார்கள் என்பதையெல்லாம் விவரிக்கிறது திரைக்கதை.

வஞ்சகம், ஈகோ, பழி, பழி சுமத்தல், பழக்கத்துக்குக் கொலை செய்தல் என்கிற விஷயங்களைச் சொன்ன சுப்ரமணியபுரத்தின் வேறொரு வெர்ஷன். ஆனால் அதை இன்னும் கொஞ்சம் கூடுதலாக, ரத்தமும் சதையுமாக தெறிக்கவிட்டிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

ரவுடிகளின் குணங்கள், கேங்க்ஸ்டர்களின் வேலை, சிறைக்குள் அவர்களின் ராஜ்ஜியங்கள், வெளியுலகத் தொடர்புகள், செல்போனை எப்படி சிறைக்குக் கொண்டு செல்கிறார்கள், போதைப் பொருட்களை எதற்குள் செருக்கொண்டு எடுத்துச் செல்கிறார்கள் என ரவுடிகளின் நிழல் உலகை, செல்லுலாய்டில் பதிவு செய்திருக்கிறார் வெற்றிமாறன்.

சிறுவயதில் அமீரைப் பார்த்து வளரும் தனுஷ், அவரின் நற்குண தாக்கங்களில் இருந்து மெல்ல மெல்ல விலக நேரிடுவதற்கான காதலையும் காரணத்தையும் அழகாக முடிச்சுப் போட்டிருக்கிறார் இயக்குநர். எம்ஜிஆரின் மரணம் ஏற்படுத்துகிற சலசலப்பு, ராஜீவ்காந்தியின் மரணம் உண்டாக்குகிற தாக்கம், யாரேனும் ஒருவர் வீட்டில் டிவிபார்க்கிற எண்பதுகள், அப்போது வந்த கமல் படங்களைப் பார்த்து, ஹேர் ஸ்டைல் வைத்துக்கொள்கிற இளைஞர்கள், அப்பாவின் சட்டையைப் போட்டுக்கொண்டு திரிகிற எண்பதுகளின் டீன் வயதுப் பெண்கள், ஸ்டெப் கட்டிங், பெல்பாட்டம் என அந்தக் காலத்தை விவரிக்கிற காட்சிகளுக்கு ரொம்பவே மெனக்கெட்டு உழைத்திருக்கிறது வெற்றிமாறன் டீம்.

முக்கியமாக, ரவுடிகளின் உலகில் கேரம்போர்டுக்கு முக்கிய இடம் உண்டு. ஜெயிலில் கேரம்போர்டுதான் முக்கியப் பொழுதுபோக்கு. அப்படி விளையாடிவிளையாடி கேரம்போர்டு பிரியர்களாகவும் பிளேயராகவும் ஆகிவிடுகிற ரவுடிகள், தமிழகம் முழுக்கவே உண்டு. இங்கே, கேரம் பிளேயராகத் துடிக்கிற தனுஷ், கொஞ்சம் கொஞ்சமாக ரவுடியிஸத்துக்கு மாறுகிறார்.

அமீரின் மனைவி ஆண்ட்ரியா. அமீரின் தம்பி டேனியல் பாலாஜி, கிஷோர், சமுத்திரக்கனி, பவன், அமீரின் மரணத்துக்குப் பிறகு சமுத்திரக்கனியுடன் குடும்பம் நடத்தும் ஆண்ட்ரியா, தனுஷ் ஐஸ்வர்யா ராஜேஷ் காதல், ராதாரவி, தனுஷ் நண்பர்கள் என ஏகப்பட்ட முகங்கள். இந்த முகங்களை ஞாபகப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு ஏகப்பட்ட மனிதர்கள். அத்தனைபேரையும் திரைக்கதைக்குள் கொண்டுவரவேண்டும். அத்தனைபேரையும் சாமானிய ரசிகன், ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

ஜெயில் செட் அற்புதம். வடசென்னைப் பகுதி செட்டுகளும் மிரட்டுகின்றன. சமுத்திரக்கனிக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் ஓடிக்கொண்டிருக்க, தடக்கென்று கிஷோர் பக்கம் திரும்புகிறது. அடுத்து, தனுஷ் பக்கம் சென்று டீட்டெய்ல் சொல்லுகிறது. பிறகு அமீரின் வெர்ஷனுக்குள் புகுந்து புறப்படுகிறது. தடக்கென்று ஆண்ட்ரியாவின் பக்கம் வந்து நிற்கிறது. இப்படியான விஷயங்களும் விவரங்களுமாக பின்னப்பட்ட திரைக்கதையும் அதன் உத்தியும் கவனத்திற்கு உரியதுதான். பாராட்டப்படவேண்டியதுதான். ஆனால், வடசென்னையின் வாழ்க்கையைச் சொல்லவே இல்லை என்பதுதான் குறை; பெருங்குறை.

படத்தில் மிகச்சிறப்பாக நடித்தது யார் என்று கேட்டால், பதில்... எல்லோரும்தான். தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி, அமீரின் தம்பியாக வரும் டேனியல் பாலாஜி, போலீஸ் அதிகாரிகள், ராதாரவி, தனுஷின் அம்மா, தீனா, அவ்வளவு ஏன்... கேரம்போர்டு உட்பட எல்லோரின் நடிப்பும் மிரட்டுகிறது. பிரமாதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். கேரக்டர்களாகவே உருமாறியிருக்கிறார்கள்.

முத்தத்தின் மூலமாக ஐஸ்வர்யா ராஜேஷ் அப்ளாஸ் வாங்குகிறார். துரோகத்தின் மூலமாக கிஷோர் கைத்தட்டல் பெறுகிறார். ஈகோவின் மூலமாக சமுத்திரக்கனிக்கு கரவொலி கிடைக்கிறது. அமீர் இறந்து கிடக்க, அவரின் கூலிங்கிளாஸை எடுத்து வந்து, அமீருக்கு போட்டுவிடுகிற இடத்தில் ஆண்ட்ரியா ஸ்கோர் செய்கிறார். இது படைப்பாளியாக வெற்றிமாறனுக்குக் கிடைத்த மொத்த கைத்தட்டல் பெருமைகளின், தவணை முறை வழிகளாகக் கிடைத்த விஷயங்கள்.

படத்தின் முதல் பலம் நடிகர் நடிகைகள். எல்லோரும் அசத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப தனுஷின் பாடிலாங்வேஜ்கள் கவனம் ஈர்க்கின்றன. அடுத்து ஒளிப்பதிவுதான் இன்னொரு பலம். வேல்ராஜின் கேமிரா, மிரட்டியெடுத்திருக்கிறது. சந்தோஷ்நாராயணனின்  இசையும் ரத்தக்கதைக்குத் தேவையான சத்தத்தையும் பிறகான மெளனத்தின் அடர்த்தியையும் கடத்தித் தருகிறது. எடிட்டிங் கச்சிதம். இவர் கொஞ்சம் விட்டிருந்தால், படத்துக்கு வெற்றிமாறன் சொன்னது போல், இரண்டு இண்டர்வெல் தேவையாகிப் போயிருக்கும்.

வெற்றிமாறனின் கடும் உழைப்பும் பிரயத்தனமும் அவரின் ஆளுமையும் பிரமிக்க வைக்கிறது. ’அவங்களை விட்டுடு’ என்று கொன்றவர்களையே சொல்லும் அமீர், அவ்வளவு நல்லவரா என்கிற கேள்வி எழாமல் இல்லை. அதேபோல், அண்ணன் சொன்ன வார்த்தையைக் கேட்கிற டேனியல் பாலாஜி ஒரு கேங்ஸ்டர்தான் என்றாலும் சிவப்பழமாய் கடைசி வரை அந்த குருப்பிடம் அமைதி காக்கிறார். அது ஏன்? அமீரின் தாக்கமும் சமுத்திரக்கனி மீதான விசுவாசமும் கொண்டு இருக்கும் தனுஷ், தடக்கென்று, ஏரியாவுக்கு நல்லவனாக, ரோடு போடத் தடை போடுபவராக ஹீரோயிஸம் காட்டுவதற்கும் சமுத்திரக்கனியை எதிர்ப்பதற்குமான காரணம் அழுத்தமில்லாமல் இருக்கின்றன.

எம்ஜிஆர் இறந்ததும் அவருடைய படத்துக்கு மாலையணிவித்திருப்பதும் பின்னணியில், பாயும்புலி ரஜினி ரசிகர் மன்றம் போர்டு காட்டுவதும், ரஜினி படம் ஒளிபரப்பப்ப்படுவதும் மாமனார் மரியாதையா, வேறு என்ன குறியீடு என்பதெல்லாம் தெரியவில்லை. நிர்மா பவுடர் உள்ளிட்ட அந்தக் காலத்து பொருட்களின் விளம்பச் சுவர்கள் உட்பட கவனத்துடன் இருந்து கவனம் ஈர்த்திருக்கிறார் வெற்றிமாறன்.

திரைக்கதையும் படமாக்கப்பட்ட விதமும் என வெற்றிமாறன் பாராட்டுக்கு உரியவர்தான். நல்ல படத்தைத்தான் வழங்கியிருக்கிறார். ஆனால், வடசென்னை என்றாலே இப்படித்தானோ என்றும் இப்படித்தான் என்றுமான வேறொரு நெகட்டீவ் சாயத்தை ஏரியாவுக்குப் பூசியிருக்காமல் இருந்திருக்கலாமே என்று தோன்றுகிறது.

திருநெல்வேலிக்காரன் என்றால் அரிவாளை எடுத்துவிடுவான் என்று சினிமாவில் காட்டி வந்தது, இப்போதுதான் குறைய ஆரம்பித்திருக்கிறது. இப்போது, இந்தக் குற்றப்பட்டியலில், வடசென்னையைக் காட்டி, புதுரூட்டைப் போட்டிருக்கிறதோ தமிழ் சினிமா என யோசிக்கவைக்கிறது.

வடசென்னையின் அடுத்த பாகத்திலாவது, வடசென்னை மக்களின் அன்பையும் ஏழ்மையையும் வலியையும் சொல்வீர்களா வெற்றிமாறன்?

படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். எல்லோரும் அந்த ஒரு கெட்டவார்த்தையை, படம் முழுக்க சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆண், பெண், சின்னப்பையன் என பாகுபாடு இல்லாமல், சொல்கிறார்கள். இந்தக் கெட்டவார்த்தை மட்டுமேயா வடசென்னை? கெட்டவார்த்தை என்பது மட்டும்தான் நேட்டிவிட்டியா? கொஞ்சம், பாஸிட்டீவ்வாகவும் இருப்பதை யோசித்து, அடுத்த முறை சேர்த்துவிடுவீர்களா வெற்றிமாறன்?

ஒருபடம் ஏதாவது செய்யவேண்டும். அப்படி எதுவும் செய்யாவிட்டாலும் கூட, தப்பானதை உள்ளுக்குள் இறக்கிவிடக்கூடாது என்பது வெற்றிமாறனுக்குத் தெரியாதா என்ன?

படம் முடிந்து வெளியே வரும்போது, முகத்தை அழுந்தத் துடைத்துக்கொள்ளத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு ரத்தச் சிதறல்கள், படம் முழுவதுமே. படத்தின் வெற்றியும் அதுவே!

வலிக்க வலிக்க கைகுலுக்கல்கள் வெற்றிமாறனுக்கு. அதேசமயம் ஒரு கோரிக்கையும்... வடசென்னை மீதான ரத்தக்கறையை அடுத்த பாகத்தில் துடைக்கப் பாருங்கள் வெற்றிமாறன்!

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close