[X] Close

வடசென்னை ஏரியான்னாலே இப்படித்தான்னு யார் சொன்னது? - வெற்றிமாறனுக்கு எதிர்ப்புக் குரல்


condemns-for-vadachennai-movie

  • kamadenu
  • Posted: 19 Oct, 2018 09:49 am
  • அ+ அ-

வடசென்னை என்றாலே கெட்ட பெயராக ஆக்கிவிட்டீர்கள் என்று இயக்குநர் வெற்றிமாறனுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘வடசென்னை’. முழுக்க வடசென்னையை மையப்படுத்தியே இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.

தனுஷ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அக்டோபர் 17-ம் தேதி வெளியான இந்தப் படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அதே வேளையில் ‘வடசென்னை’ மக்களை, இந்தப் படத்தில் தவறாக சித்தரித்திருக்கிறார்கள் என்ற எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இது தொடர்பாக வடசென்னையில் உள்ள சிலர் வீடியோ பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். 

அதில் அவர்கள் பேசியிருப்பதாவது:

’வடசென்னை’ படத்தை தவறாக காட்டவேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்திருக்கிறார் வெற்றிமாறன் சார். வடசென்னை பசங்க அனைவரும் கத்தியை எல்லாம் தூக்கிக் கொண்டு வருகிறோமா. சும்மா அதை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்.

மீனவ சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக காட்டியிருக்கிறீர்கள்.  ஒரு பெண்ணையும், காவல்துறையையும் கடத்தி வைக்கும் இடமாக படகைக் காட்டியிருக்கீங்க. தொழில் பண்ணும் விதமாக படகைக் காட்ட மாட்டீர்களா?


வடசென்னை என்றாலே கெட்ட பெயராக ஆக்கிவிட்டீர்கள். வெற்றிமாறன் பணம் சம்பாதிக்கப் பாருங்கள். எங்களை தவறாகக் காட்டி பணம் சம்பாதிக்காதீர்கள். அனைத்து பெண்களுமே இப்படித்தான் தவறாகப் பேசுகிறோமா. இப்படித்தான் பெண்கள் அனைவரும் தவறாகப் பேசிக் கொண்டிருக்கிறார்களா? யாரும் அப்படி எல்லாம் பேசுவதில்லை.

நாங்களும் நன்றாக இருக்கவேண்டும் என்று தான் அனைத்து பெண்களும் நினைக்கிறார்கள். இப்படியெல்லாம் யாரையும் பார்த்து அசிங்கமாக பேசவேண்டும் என நினைப்பதில்லை. நாங்கள் அனைவருமே சமூகத்தில் நல்ல இடத்துக்கு வரவேண்டும் என்று தான் நினைக்கிறோம். ஐடி துறையில் வேலைப் பார்ப்பவர்கள் கூட இங்கே இருக்கிறார்கள். பெண்களை அசிங்கமாகக் காட்டிய விதம் தவறு. வடசென்னை பெண்கள் இனிமேல் அலுவலகத்தில் ரொம்ப மட்டம்தட்டிப் பேசப்படுவார்கள். பார்க்கப்படுவார்கள்.  

இவ்வாறு அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்கள்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close