[X] Close

'வட சென்னை' சமூக விரோதிகள் மட்டுமே வாழும் இடமா? - தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கேள்வி


vadachennai-press-release

  • kamadenu
  • Posted: 19 Oct, 2018 09:19 am
  • அ+ அ-

'வட சென்னை' சமூக விரோதிகள் மட்டுமே வாழும் இடமா? என்று படக்குழுவினருக்கு  தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘வடசென்னை’. முழுக்க வடசென்னையை மையப்படுத்தியே இப்படத்தை எடுத்திருக்கிறார்கள்.

தனுஷ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அக்டோபர் 17-ம். தேதி வெளியான இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

அதே வேளையில் ‘வடசென்னை’ மக்களை தவறாக சித்தரித்திருக்கிறார்கள் என்ற எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

 இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"வட சென்னை" சமூக விரோதிகள் மட்டுமே வாழும் இடமா? "வட சென்னையில்" வாழும் மக்கள் அனைவரும் பாவப்பட்ட ஜென்மங்களா? "வட சென்னை" பொதுமக்கள் வாழத் தகுதியற்ற இடமா?

அப்படி உங்கள் கூற்றுப்படி வட சென்னையில் சமூக விரோதிகள் மட்டுமே வாழ்வதாக வைத்துக் கொண்டால் "வட சென்னையை" தரம் தாழ்த்தி படமெடுப்போரே வடசென்னையின் தரம் உயர்த்த எப்போதாவது சிந்தித்ததுண்டா..? "வட சென்னையை" வைத்து திரைப்படம் எடுத்து கோடி கோடியாய் பணம் சம்பாதித்து பிழைப்போரே... அதில் சிறுதுளியையாவது "வட சென்னை" வாழ் மக்களின் நலனிற்காக செலவு செய்ததுண்டா...?

"வட சென்னை" குறித்து எதிர்மறையான சிந்தனைகளை மக்கள் மனதில் தொடர்ந்து விதைப்போரே. நீங்களும் வட சென்னையில் வாழ்பவர் என்றால் இப்படிச் செய்வீர்களா..?

மத்திய சென்னை, தென் சென்னை பகுதிகளில் நள்ளிரவு நேரங்களில் வட சென்னையின் ஏதேனும் ஒரு பகுதிக்குச் செல்ல ஆட்டோ ஓட்டுநரை அழைத்துப் பாருங்கள். அப்போது தான் நீங்கள் விதைத்திருக்கும் எதிர்மறையான விதை எப்படி விருட்சமாக அவர்களின் மனதில் வளர்ந்திருக்கிறது என்பதை உணர்வீர்கள்.

"வட சென்னை" வாழ் மக்கள் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை என்பதற்காக தொடர்ந்து அது போன்ற திரைப்படங்களை எடுப்பது கொஞ்சமும் சரியல்ல.

"வட சென்னை" பகுதி வாழ் மக்கள் அமைதியாக இருப்பதால் வீழ்ந்து கிடப்பதாக எண்ணி விட வேண்டாம். அவர்கள் அனைவரும் விழித்துக் கொண்டு எழுந்து போராடத் தொடங்கினால் உங்களின் ஒரு திரைப்படம் கூட வட சென்னை பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் மட்டுமல்ல உலகெங்குமே வெளியாகாமல் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

இப்போதும் கூட காலம் கடந்து விடவில்லை. வட சென்னை வாழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத உங்களது திரைப்படங்களை தடை செய்ய நீதிமன்றத்தின் கதவைத் தட்டி நிரந்தரமாக தடை பெற இயலும்.

ஆனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு வீணாகக் கூடாது என்கிற எண்ணத்திலும், தேவையின்றி இலவசமாக உங்களது திரைப்படத்தை விளம்பரப்படுத்தக் கூடாது என்கிற எண்ணத்திலும் தான் நாங்கள் அமைதி காக்கிறோம். அமைதி காப்பதாலேயே நாங்கள் பலவீனமானவர்கள் என எண்ணி விட வேண்டாம்.

கொலை செய்வது, கொள்ளையடிப்பது, மது, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளை பயன்படுத்துவது, பள்ளியில் பயிலும் போதே காதல், காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் அந்தப் பெண்ணுக்கு தொல்லை தருவது, பெற்றோருக்கு மரியாதை தராமல் திரிவது, நண்பர்கள் என்கிற பெயரில் சமூக விரோத கூட்டங்களோடு சுற்றுவது போன்ற எதிர்மறையான சிந்தனைகளை, விஷமத்தனமான கருத்துக்களை உள்ளடக்கி வெளியாகும் திரைப்படங்களைப் பார்த்தே இன்றைய பெரும்பாலான இளம் தலைமுறையினர் விட்டில் பூச்சிகளாக தங்களின் எதிர்காலைத்தையே தொலைத்து வருகின்றனர்.

இனியாவது வட சென்னை குறித்தான எதிர்மறையான, விஷமக் கருத்துக்களைக் கொண்ட திரைப்படங்கள் உருவாக்குவதை இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் கை விட வேண்டும். அவ்வாறான படங்களில் நடிப்பதை நடிகர், நடிகைகள் தவிர்க்க வேண்டும். அதையும் மீறி அவ்வாறான திரைப்படங்கள் தயாராகுமானால் அந்தத் திரைப்படங்களை விநியோகம் செய்யாமல் விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் வெளியிடாமலும் புறக்கணிக்க வேண்டும்.

இது எச்சரிக்கை அல்ல. இறுதியான அன்பு வேண்டுகோள்.

இவ்வாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close